Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது முகம் தெரிந்த எதிரிகளை தாண்டி வேறும் பலரிடையேயும் விழிப்புடன் பணியாற்ற வேண்டியிருக்கின்றதென தெரிவித்துள்ளார் புதியவன் நாளிதழது ஆசிரியர் சிவகரன்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 14 வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தினில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.நிமலராஜனின் நினைவு கூரலின் போது அவரது சக நண்பரும் அண்மையினில் இயற்கை எய்திய ஜயா.சச்சிதானந்தனிற்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வினில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தினில் அமையத்தின் ஏற்பாட்டினில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்விற்கு அதன் தலைவர் த.வினோஜித் தலைமை தாங்கியிருந்தார்.முன்னதாக ஈகை சுடரேற்றலுடன் ஆரம்ப நிகழ்வினில் நிமலராஜனின் திருஉருவப்படத்திற்கு அவரது சகபாடியான மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரனும் ஜயா.சச்சியின் திருஉருவப்படத்திற்கு ஊடக அமையத்தின் செயலாளர் கஜீபனும் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மலரஞ்சலியை கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் செலுத்தினர்.நிமலராஜன் தொடர்பான நினைவுரைகளினை சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் ந.பரமேஸ்வரன் மற்றும் இ.தயாபரன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
ஜயா.சச்சிதானந்தனிற்கான அஞ்சலி உரைகளினை அவரது சகபாடியும் ஊடகக்கல்வி விரிவுரையாளருமான ஆ.சபேஸ்வரன் மற்றும் தினக்குரல்; உதவி ஆசிரியர் ந.பொன்ராசா ஆகியோர் ஆற்றியிருந்தனர்.மற்றொரு உதவி ஆசிரியரான ஜெயபாலன் ஊடக சுதந்திரம் வேண்டுமெனும் தொனி பொருளினில் கவிதாஞ்சலி செலுத்தியிருந்தார்.

சிறப்புரையினை மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் நாளிதழது ஆசிரியர் சிவகரன் ஆற்றியிருந்தார்.அவர் தமது உரையினில் தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது முகம் தெரிந்த எதிரிகளை தாண்டி வேறும் பலரிடையேயும் விழிப்புடன் பணியாற்ற வேண்டியிருக்கின்றது.தமிழ் தேசியம் மீதான பற்றுறுதி என்பதற்கப்பால் ஊடகவியலாளர்கள் நின்று நிலைத்து பணியாற்றக்கூடிய வகையினில் தம்மை வலுப்படுத்திக்கொள்ளவேண்டும்.அதற்கு போதிய மொழி அறிவு மற்றும் துறை சார் அறிவு என்பவற்றினை பெற்றுக்கொள்ள வேண்டும். செய்திகளிற்கான விசாரணைகள் மிரட்டல்கள் எல்லாம் இப்போது யாழ்ப்பாணத்தினில் சாதாரணமானதொன்று.பல ஊடகவியலாளர்கள் அடிக்கடி விசாரணைகளிற்கு போய்வரவேண்டியிருக்கின்றது.

சில பத்திரிகைகள் மற்றும் அதே போன்று சில இணையங்களும் பக்க சார்பாக சிலரை தூக்கியும் சிலரை குழிபறித்துமாக தமது அரசியல் நலன்களிற்காக செய்திகளை வெளியிடுகின்றன.அத்தகைய செய்திகளால் ஊடகவியலாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.உண்மையினில் ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செய்திகளை வெளியிட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 Responses to யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் நிமலராஜன் மற்றும் சச்சி ஆகியோரது நினைவேந்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com