Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி ஜனாதிபதியும், பாராளுமன்றமும் கூட்டாக ஆட்சி நடத்தும் வகையிலான திருத்தங்கள் அடங்கிய அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்துக்கான அமைச்சரவை அங்கீகாரத்துடனான வர்த்தமானி நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் நேற்று அவசரமாகக் கூடியிருந்த அமைச்சரவை கூட்டத்தின் போதே 19வது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தது.

புதிய திருத்தங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி, நேற்றிரவே வெளியிடப்பட்டதாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் நேற்றை அமைச்சரவைக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய சரத்துக்கள்.

1. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக மாறும்.

2. இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.

3. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

4. ஜனாதிபதியின் ஓர் ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.

5. பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.

6. ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.

7. இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.

8. 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.

9. நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும். ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.

10. பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இருக்கும்.

0 Responses to நிறைவேற்று அதிகாரம் நீக்கம்: 19வது திருத்த சட்டத்துக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com