Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 23 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்த சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அந்நாட்டின் ஐகோனுமான லீ குவான் யூ இன் இறுதிச் சடங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க முன்னால் அதிபர் பில் கிளிங்டன், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட், இங்கிலாந்து பாராளுமன்ற செயலாளர் வில்லியம் ஹக் உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மிகச் சிறிய நாடான சிங்கப்பூரை பொருளாதார உச்சத்துக்கும் தொழிநுட்ப முன்னேற்றத்துக்கும் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு லீ குவான் யூ ஐச் சார்ந்தது. இவரது மறைவு குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, லீ குவான் யூ ஒரு தலைமுறையின் போதே சிங்கப்பூரை அனைவரும் வியக்கும் வண்ணம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார் எனவும் எமது காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் இவர் எனவும் இவரது மறைவு சிங்கப்பூருக்கு சோகமான கணங்களை அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். லீ குவான் யூவின் மறைவை ஒட்டி சிங்கப்பூரில் ஒரு வாரம் துக்கம் கடைப் பிடிக்கப் பட்டதுடன் பாராளுமன்ற கட்டடத்தில் வைக்கப் பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு 450 000 மக்கள் வரை அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்றைய இறுதிச் சடங்கின் போது அவரது உடல் சிவப்பு-வெள்ளை நிறத்திலான சிங்கப்பூர் கொடியால் போர்த்தப் பட்டு திறந்த வாகனத்தில் வைத்து சாலையின் இரு மருங்கிலும் பத்தாயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது. இந்த ஊர்வலத்தின் போது இராணுவ மரியாதையின் நிமித்தம் சிங்கப்பூர்  விமானப் படையின் 5 ஜெட் விமானங்களுடன் ஊர்வலத்தின் முன் மோட்டார் சைக்கிளிலும் இராணுவ வீரர்கள் அணி வகுத்துச் சென்றனர். மேலும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கும் திட்டமிடப் பட்டுள்ளது. சிங்கப்பூரானது ஒரு வறிய பிரிட்டன் காலனியாக இருந்து லீ குவான் யூ தலைமையில் சில தசாப்தங்களுக்குள் உலகளாவிய ரீதியில் சக்தி வாய்ந்த வர்த்தக மற்றும் நிதி மையமாக வளர்ச்சி பெற்ற நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிங்கப்பூர் ஐகோன் லீ குவான் யூ இன் இறுதிச் சடங்கில் 21 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com