Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் மீதான தடை நீக்கமும் அச்சுறுத்தலானது இல்லை. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் மனங்களை வென்றெடுப்பதன் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கு இடமளிக்க மாட்டோம். கருணா அம்மான், பிள்ளையான், கே.பி போன்றவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். 12,000 புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளவர்களை விடுவிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகின்றது என்பதை சகலரும் மனசாட்சியைத் தொட்டுக் கேட்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு, கிழக்கில் பெளதீக அபிவிருத்திகளை மேற்கொள்வதன் மூலம் அங்குள்ள மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பது கடந்த ஆறு மாதங்களில் எமக்குத் தெளிவாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்றம், அரசியல் மேடைகள் மற்றும் ஊடகங்கள் என பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது.

எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் பற்றி கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியின் பின்னர் யுத்தத்துக்குப் பின்னரான நிலைமையொன்றுக்கு நாடு முகங்கொடுத்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இதனை நிறைவேற்றும் பொறுப்பு எமது அரசாங்கத்தின் கைகளுக்கு வந்தது.

யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னைய அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தன. வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் என்ற பெயர்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இருந்தபோது பெளதீக அபிவிருத்திகள் மூலம் அங்குள்ள மக்கள் திருப்தியடையவில்லை.

அவர்களின் உளரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மக்கள் சந்தேகம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இதுவே எம்முன்னால் காணப்படும் பாரிய சவாலாகும்.

யுத்தத்துக்குப் பின்னரான நாடு என்ற ரீதியில் தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தவேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு உள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் என்னை ஜனாதிபதியாக்குவதற்காக வாக்களித்தனர்.

சுதந்திரம், மனித உரிமை போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டோம். இவ்வாறான பின்னணியிலேயே 19ஆவது திருத்தச்சட்டத்தை நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். அது மாத்திரமன்றி ஜனாதிபதியின் கீழ் தேசிய நல்லிணக்கம் தொடர்பான அமைச்சை உருவாக்கி, அதுதொடர்பான செயலணியின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நியமித்திருந்தோம்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பு மற்றும் சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதம் அவசியமானது. இன்றைய சந்ததியினருக்கும், நாளை பிறக்கப்போகவிருக்கும் குழந்தைகளுக்கும் சுதந்திரமான நாட்டை கையளிப்பதற்காகவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சலக தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரேரணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாத சூழலை உறுதிப்படுத்து வதற்கும் சகலரும் ஒன்றிணைய வேண்டும். வங்குரோத்து நிலையில் உள்ள அரசியல்வாதிகள் இறுதி நேரத்தில் கையாளும் ஆயுதம் தேசப்பற்று என இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு கூறியுள்ளார்.

இதேபோன்றே இலங்கையில் உள்ள இனவாதம் பிடித்தவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பெளத்த சிங்கள மக்கள் மனங்களில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்த வேண்டாம் என நான் இனவாதத்துடன் செயற்படுபவர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். மீண்டும் யுத்தம் ஏற்படாத சூழலை ஏற்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும்.

பெளதீக அபிவிருத்திகளால் மாத்திரம் அவர்களின் மனங்களை வென்றுவிட முடியாது. முன்னாள் புலிகளின் முக்கியஸ்தரான கருணா அம்மான், பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், சுதந்திரக் கட்சியின் உபதலைவராக மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்டார். அது மாத்திரமன்றி பிள்ளையான் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரானார்.

புலிகளுக்காக சர்வதேச ரீதியில் நிதிசேகரிப்பில் ஈடுபட்ட கே.பி சுதந்திரமாக இருக்கின்றார். இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக செயற்படுவது பிழையல்ல. எதிர்காலத்தை நோக்கில் கொண்டு நடவடிக்கை எடுப்பது பிழையல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் 12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுவிப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது.

கடந்த அரசாங்கத்தால் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளுக்கு அமைய தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்களின் தடைகளை நீக்கியுள்ளோம். எமது அரசாங்கத்துக்கு புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமையவே அவர்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com