Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு வடக்கு மாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நினைத்துப்பார்க்க முடியாத துயரினைத் தமிழகம் இன்று சந்தித்திருக்கின்றது. வானம் பிளந்ததுபோலக் கொட்டித்தீர்த்த மழை ஆற்றுப்படுத்தவே முடியாத அளவுக்குத் தமிழகத்தினை வாட்டி வதைத்திருக்கின்றது. தமிழகமே வெள்ளக்காடாகிப் பல இலட்சம் மக்கள் தமது சொந்த வீட்டில் வாழமுடியாத நிலையில் இடம்பெயர்ந்து அவலத்துக்குள்ளாகியிருக்கின்றார்கள்.

தாழ்நிலங்களில் வாழ்ந்த ஏழை மக்களில் பலரது உயிர்கள்கூட இழக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக மக்கள் சிறுகச்சிறுகச் சேமித்த, சேகரித்த சொத்துக்கள்கூட அழிவடைந்திருக்கின்றன. வார்த்தைகளுக்குள் விபரிக்கமுடியாத துயர் நிறைந்த இவ்வாறான வாழ்க்கையைத் தமிழகத்திலிருக்கும் எங்களுடைய தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்.

எமது மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழ் மக்கள் செத்துவீழ்ந்தபோது தானாடாவிட்டாலுந் தன் தசை ஆடும் என்பதுபோல முதலில் வீதியில் இறங்கியவர்கள் தமிழக மக்களே. அவர்கள் மேற்கொண்ட தொடர்ப்போராட்டங்கள் சர்வதேச அரங்கையே உலுக்கும் அளவுக்கு வீரியம் பெற்றிருந்தன. அவ்வாறான எங்களுடைய தமிழுறவுகள் இன்று இயற்கைச் சீற்றத்தால் ஆற்றொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அவர்களின் துயரமுந் துன்பமும் எம்மக்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

எங்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து மீண்ட சம்பவங்களும் தற்போது நிகழ்ந்துள்ளன. மீண்டும் அவ்வாறான நிலையேற்படுமோ என்ற பயம் இல்லாமல் இல்லை. ஆனாலும் தமிழகத்துடன் ஒப்பிடுகின்றபோது அங்கு நிகழ்ந்திருக்கின்ற பேரிடருக்கு நிகரான பாதிப்பினை எங்கள் மக்கள் சந்திக்கவில்லை.

பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வடக்கு மாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்றைய எமது அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் தமது அவல நிலையிலிருந்து விரைவில் விடுபட நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.” என்றுள்ளது.

0 Responses to தமிழக உறவுகளுக்கு எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com