Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களிடம் வழங்கிய உறுதி மொழிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டிய தருணம் தற்போது உதயமாகியுள்ளது. அதனை நிறைவேற்றாது விட்டால் மக்கள் நம்பிக்கையிழந்துவிடுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "இலங்கையின் அபிவிருத்தி பொறிமுறை மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும். அபிவிருத்தியை நோக்கிச்செல்வதற்கு சில படிமுறைகள் இருக்கின்றன. அந்தவகையில், உலகில் பலம்மிக்க நாடுகள் முதலில் மக்களை ஐக்கியப்படுத்தின; சகலருக்கும் சம உரிமை வழங்கின. பங்கீடுகள் யாவும் பாகுபடின்றி வழங்கப்பட்டன.

ஆனால், இங்கு என்ன நடந்தது? மனித வளத்தை இணைப்பதற்குப் பதிலாக பிரித்தாளும் தந்திரம் கையாளப்பட்டது. இதனால், மோதல் உருவாகியது. எப்படி சகலரையும் அரவணைத்துக்கொண்டு அபிவிருத்தி நோக்கிச் செல்லலாம் என்பது பற்றி கடந்தகாலங்களில் சிந்திக்கப்படவில்லை. அதனால்தான் இன்னும் அபிவிருத்தியடையாமல் இருக்கின்றோம்.

இலங்கை ஒரு விவசாய நாடாகும். ஆனால், அரசிமாவுக்குப் பதிலாக கோதுமை மாவே சந்தையை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. அத்துடன், வெளிநாட்டுப்பால் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இதனால், உள்நாட்டு விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை சமாளிப்பதற்குரிய பொறிமுறையும் அவசியம்.

வெளிநாட்டில் தங்கிவாழும் நிலை ஏற்பட்டால் எத்தனை வருடங்கள் கடந்தாலும் முன்னோக்கி நகரமுடியாத நிலை ஏற்படும். போரால் வடக்கு, கிழக்கில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீளத் திறக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். ஆனால், அதற்குரிய ஆரம்பகட்டப் பணிகள்கூட இன்னும் இடம்பெறவில்லை. எனவே, உத்தரவாதத்துக்கு செயல்வடிவம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் நல்லாட்சி அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

வடக்கு, கிழக்கில் போர்க்காலத்தில் மூடப்பட்ட வைத்தியசாலைகள் மீளத் திறக்கப்படவேண்டும். உரிய ஆளணி வளம் வழங்கப்படவேண்டும். நியமனங்களின்போது பாகுபாடு இருக்கக்கூடாது.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: ஞா.சிறிநேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com