Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதியும், பிரதமரும் தலைத்துவம் வழங்கும் நாட்டில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியாது. அப்படியொரு நிலை உலகில் எங்குமே ஏற்பட்டதில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டைத் தன்னிடம் கையளிக்குமாறு கூறியிருந்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் பதவியில் இருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாட்டைப் பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வு உலகில் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறவில்லை.

நாட்டைத் தன்னிடம் பொறுப்புத் தருமாறு கோரும் முன்னாள் ஜனாதிபதி, கடந்த 10 வருடத்தில் நாட்டில் நடத்தியிருந்த ஆட்சி சகலருக்கும் தெரியும். அவருடைய ஆட்சியாலேயே நாடு இந்த மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.” என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொழும்பு துறைமுக நகரத் திட்டம் சீனாவிடமிருந்து இலவசமாகக் கிடைத்த திட்டம் எனக் கூறுகின்றனர். இது 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டமாகும். 50 ஏக்கர் இலவசமாக சீனாவுக்கு வழங்குதற்கு கடந்த ஆட்சியாளர்கள் இணங்கியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

நாட்டின் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே கொழும்பில் கூட்டம் நடத்தியதாகவும், இக்கூட்டம் வெற்றியளித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தபோதும் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே செயற்பட்டனர். தற்பொழுதும் கூட்டங்களை நடத்தி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்து எம்மை மீண்டும் சிறைகளுக்கு அனுப்பி, குரோதத்தைத் தீர்க்கும் வகையில் செயற்படலாம் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டு வருகின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கும் நாட்டில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியாது: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com