Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் ஒற்றுமையை சமஷ்டி அதிகாரப் பரவலாக்க ஆட்சி முறையே காப்பாற்றும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, "சிங்கள மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றி ஒரு தவறான அபிப்பிராயம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அது பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்றவாறு சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. அது தவறென்ற அபிப்பிராயம் சிங்கள மக்களுக்கு விளக்கப்படுத்தப்படவேண்டும்.

நாட்டிலுள்ள மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் சமஷ்டி முறையே பொருத்தமானது. இதை சிங்கள மக்களுக்கு உணர்த்தவேண்டிய பொறுப்பு சிங்களத் தலைவர்களிடமே உள்ளது. அதனை சிங்களம் தெரிந்த தமிழ் அரசியல் தலைவர்களும் ஏற்படுத்தவேண்டும். நாங்கள் ஒரு தீர்வை அடையாளப்படுத்திக்கொண்டு அதனை மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதற்கு எதிராக சிங்கள மக்கள் வாக்களிக்கும் சூழல் ஏற்படும். இதனை இல்லாதொழிக்க எல்லோரும் ஒன்றிணைந்து இப்போதே நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.

இதேவேளை, நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் கொழும்பிலிருந்தே எடுக்கப்படுகின்றன. எம்முடன் கலந்தாலோசித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நல்லிணக்கத்துக்குரிய விடயங்களை பாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்புக்கு உள்ளாகியவர்களையும் ஒரே மேசையில் வைத்து எடுக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் வேண்டுதல்களை அடிப்படையாக வைத்தே நல்லிணக்கம் கொண்டுவரப்பட வேண்டும்.

அவ்வாறில்லாமல் கொழும்பில் இருந்துகொண்டு நல்லிணக்கத்துக்காக நாங்கள் அதை செய்கிறோம், இதைச் செய்கிறோம் எனக் கூறிக்கொண்டு இருந்தால் நல்லிணக்கம் என்பது ஒருபோதும் சாத்தியப்படாது. ” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் ஒற்றுமையை சமஷ்டி முறைமையே காப்பாற்றும்; நோர்வே தூதுக்குழுவிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com