Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

UNFCCC எனப்படும் ஐ.நா இன் காலநிலை மாற்ற ஏஜன்ஸியின் அனுசரணையுடன் உலகின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் 23 ஆவது வருடாந்த காலநிலை மாற்ற மாநாடு இன்று திங்கட்கிழமை ஜேர்மனியின் பொன் (Bonn) நகரில் ஆரம்பமாகி உள்ளது.

இன்று தொடக்கம் நவம்பர் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முக்கியமாக புவி வெப்பமயமாவதைத் தடுக்க எடுக்கக் கூடிய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படவுள்ளது. முன்னதாக 2015 பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் எட்டப் பட்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தத்தில் இருந்து இம்முறை காலநிலை மாற்ற மாநாடு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக பூகோள சராசரி வருடாந்த வெப்பநிலையை 2 பாகை C இலிருந்து முடிந்தால் 1.5 பாகை C இற்குக் கீழே குறைப்பது என வரையறுக்கப் பட்டிருந்தது.

ஆனால் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப் பட்டிருந்த பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படைப் பலவீனமான அதை செயலுக்குக் கொண்டு வரும் படிகளை இம்முறை பொன் மாநாடு திருத்தமாக கட்டமைக்க வேண்டியுள்ளதுர் குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் இந்தியாவிலும் நைஜீரியாவிலும் ஏற்பட்ட வெள்ளம், கரீபியன் பகுதியில் ஏற்பட்ட ஹரிக்கேன் புயல்கள் மற்றும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்ட காட்டுத் தீ போன்ற அனர்த்தங்கள் பூகோள வெப்பநிலை அதிகரிப்பை உடனடியாகக் கட்டுப் படுத்த வேண்டிய தேவையை உணர்த்துகின்றன.

இதேவேளை உலகின் 2 ஆவது மிகப் பெரிய சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நாடும் உலகின் முதல்நிலை செல்வந்த நாடுமான அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தாலும் அது 2020 இல் தான் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஐ.நா தெரிவிக்கின்றது. இந்நிலையில் 2020 இற்குள் உலகின் வறிய நாடுகள் கார்பன் வெளெயேற்றத்தைப் பூரணமாகக் கட்டுப்படுத்தவென அமெரிக்கா உட்பட செல்வந்த நாடுகள் இணைந்து 100 பில்லியன் டாலர்களை 2020 இற்குள் திரட்டி அளிக்கத் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொன் மாநாட்டில் சுமார் 195 நாடுகளைச் சேர்ந்த 25 000 பேர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜேர்மனியின் பொன் நகரில் முக்கிய உலகப் பிரதிநிதிகளுடன் ஆரம்பமானது உலகப் பருவநிலை மாற்ற மாநாடு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com