Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தவிர்க்க முடியாத வழி

பதிந்தவர்: தம்பியன் 23 July 2009

சிங்களத்தின் "இனக்கொடூர முகம்" வெளிப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 26 ஆண்டுகளாக ஒரு இனத்தை இன்னொரு இனம் அழித்துக் கொண்டிருக்கின்றது. இன்று அந்த இனத்தை அளிவின் விழிம்பிற்கு கொண்டு வந்துவிட்டிருக்கின்ற நிலையிலும், சர்வதேசம் அழிப்பவர்களின் பக்கம் நின்று அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றமை இன்னும் தொடர்கின்றது.

கடந்த ஒன்றை மாதங்களாக எந்தக் குற்றமும் செய்யாத மூன்று இலட்சம் மக்கள்தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் கடும் தாக்குதல்களில் காயமடைந்து பலருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படாமல், அரைகுறையான சிகிச்சையுடன் முகாம்களில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளனர். மிகக் குறைவான இடத்துக்குள் அளவுக்கு அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட போதிய அளவில் அமைக்கப்படவில்லை. சுகாதாரமான குடிநீர், உணவுகிடைக்காததால் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. சிறீலங்கா கூறும் நிவாரண முகாம்கள் அனைத்தும் தமிழ் மக்களின் மரண முகாம்களாக மாறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கின்றன.

ஆனால், அந்த மக்களின் நடமாடும் அடிப்படைச் சுதந்திரத்தைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் நிற்கின்றது சர்வதேசம். போரில் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை இதனை தட்டிக்கேட்காது மௌனமாக வேடிக்கை பார்க்கின்றது. அகதி முகாம்கள் சிறைச்சாலை போன்ற இடங்களாக இருப்பதாக, இந்த அகதிகளை பராமரிப்பதற்கு நிதியுதவி வழங்கும் நாடுகள் கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஐ.நா. பொதுச் செயலர், அதற்கு நான் பொறுப்பில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுக்கின்றார்.

வன்னியில் போர் நடைபெற்றபோது மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று ஓயாது குரல்கொடுத்த, வலியுறுத்திய ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் எவையும் இப்போது வாய் திறப்பதில்லை. விடுதலைப் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொல்கின்றார்கள் என்று கண்ணீர் வடித்த எந்த மனித உரிமைவாதிகளும் அமைப்புக்களும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக்கொண்டிருக்கும் போது கண்ணீரும் வடிப்பதில்லை. அறிக்கையும் விடுவதில்லை.

வாரத்திற்கு 1400 பேர் நோயால் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்று இலண்டனில் இருந்து வெளியாகும் 'ரைம்ஸ்` பத்திரிகை ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. தடை முகாம்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லை. இதனால் வயிற்றுப் போக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். தண்ணீரின் மூலம் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். போரினால் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட சிறீலங்கா அரசு செய்து கொடுக்கவில்லை என்றும் அந்த பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது. ஒரு பத்திரிகை குற்றம்சாட்டும் அளவிற்கு கூட ஐ.நாவினால் குற்றச்சாட்டு சுமத்தமுடியாத நிலையில், அந்த மக்களை தங்கள் வாழ்விற்கு மீளவும் கொண்டு செல்லமுடியாத நிலையில்தான், இந்தவாரம் அந்த முகாமில் நடந்த சம்பவம் ஒன்று அங்குள்ள மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மெனிக் முகாமில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு சென்ற பெண் ஒருவர் அங்கு படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளை விரட்டி விரட்டிக் கடித்துள்ளார். இதனால், இரண்டு நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை எனக் கூறும் அளவிற்கு நிலைமை இருந்துள்ளது. கடித்த பெண்ணை கைது செய்த சிறீலங்கா காவல்துறையினர், அவருக்கு பேய் பிடித்துள்ளது என்று குற்றம்சாட்டி அதனையே அங்குள்ளவர்களும் நம்பும்படி செய்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் சிறீலங்காவின் இன அழிப்புப் போரில் தனது கணவனையும் குழந்தைகளையும் இழந்துவிட்டு தனிமரமாக விரக்தியோடு அந்த முகாமிற்கு வந்து சேர்ந்த ஒரு தாய் என அறியமுடிந்தது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை கூட வழங்காமல் பேய் பிடித்ததாகக் கூறி, அந்தத்தாயின் அவலத்தை மூடி மறைக்க முயன்றுள்ளது சிறீலங்கா.

இவ்வாறு தங்கள் உறவுகளை, நேசத்துக்குரியவர்களை இழந்துவிட்டு நிர்க்கதியாக எத்தனையோ மக்கள் அந்த முகாமில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள். அந்த மக்களை மீட்டெடுத்து உரிய சிகிச்சை வழங்காது போனால், இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடரும் என்பதுடன், தடை முகாமிலுள்ள அனைத்து மக்களுமே மனதளவில் பாதிப்படைகின்ற நிலையே ஏற்படும்.

இந்த மக்களை மீட்டெடுக்க இந்த சர்வதேசம் என்ன செய்யப் போகின்றது..? எதுவுமே செய்யாது இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

ஆசிரியர் தலையங்கம்

ஈழமுரசு (24.07.09)

0 Responses to தவிர்க்க முடியாத வழி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com