கி.மு.5-ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த யோபு என்ற நீதிமானைப் பற்றி பைபிள் நீண்டதொரு பதிவு செய்துள்ளது. மனித இனம் பூமியில் தடம் பதித்த நாள்தொட்டு இன்றுவரை விடையின் றித் தொடரும் கேள்வியான ""துன்பங்கள் ஏன்?'' என்பதற்கு பதில் தேட முயன்ற பதிவு அது. நம்பிக்கையில் நிலைத்து நின்றால் எத்துன்பத்தையும் வெல்லலாம் என்பதாக செய்தி சொல்லப்பட்டாலும் "துன்பம் ஏன்' என்ற கேள்விக்கு விடை காணாமலேயே யோபு குறித்த நூல் முடியும். ஆனால் அந்நூலில் வேதனை வெளிப்பாடுகள் பதிவு செய்யப்படும் விதம் யார் படித்தாலும் மறக்க முடியாதது.
யோபுவை மாசற்றவர், நேர்மையுள்ளவர், இறைவனுக்கு அஞ்சி தீமையை விலக்கி நடந்தவர், அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும் ஐநூறு ஏர் மாடுகளும் ஐநூறு பெட்டைக் கழுதைகளும் உடைமைகளா யிருந்தன என்றெல்லாம் அந்த ஆகம நூல் அறிமுகம் செய்யும். காலத்தின் கோலத்தில் செல்வங்களை யோபு இழந்து பராரியாகிறார், பத்து பிள்ளைகளையும் மண் வீடு இடிந்து மூடிக் கொள்கிறது. உச்சமாக அவருக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை அருவருப்பான அழி புண் நோய் பற்றிக் கொள்கிறது.
ஆறுதல் சொல்ல நெடுந்தூரத்திலிருந்து வரும் தன் நண்பர்களான ஏலிப்பாஸ், பால்தாத், சோப்பார் மூவரிடமும் யோபு இவ்வாறு புலம்புவார்: ""நான் பிறந்த அந்த, நாள் அழிக! "ஆண் குழந்தையொன்று கருவாகியுள்ளது' என்று சொல்லிய அந்த இரவு தொலைக! பேயிருட்டு அந்த நாளை பீடிக்கட்டும்! ஆண்டுக் கணக்கின் நாட்களுடன் அவ்விரவு எண்ணப் படாதொழிக! அவ்விரவின் விடிகாலை விண்மீன்கள் இருண்டொழிக! பிறக்கும்போதே நான் ஏன் சாகாமற் போனேன்? கருப்பையினின்று வெளிப் பட்ட உடனேயே நான் அழிந்து போயிருக் கக்கூடாதா? உள்ளம் கசந்து போனவனுக்கு உயிர் எதற்கு? என் வேதனைக் குரல் நீராய் ஓடுகிறது. பெருமூச்சுக்களே எனது உண வாயிற்று!''.
ஆம், வன்னிப் பகுதியின் வதை முகாம் களில் எமது மக்களுக்கும் இன்று பெருமூச்சுக் களே அனுதின உணவு. அக்டோபரில் பெருமழை வரும், பேரவலம் அம்மக்களைச் சூழும் என்று கடந்த வாரம் நாம் எழுதி முடிக்கவில்லை- கால் தடுக்கி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக ஆகஸ்ட் மாதத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை மழை பெய்தது. மூன்று மணி நேர மழையில் கோழி-முயல் கூடுகள்போல் தமிழ் மக்களுக்குத் தரப்பட்ட பாலித்தீன் குடிசைகள் நீரில் மிதந்தன. கூரைகள் காற்றோடு போயின. பல்லாயிரம் மக்கள் ஆடு, மாடுகள் போல் அடையுண்டு கிடக்கும் அத்திறந்த வெளிச் சிறையின் மலக்கிணறுகளும் குடிநீர் கிணறு களும் ஒன்றாய் கலந்தன. இரண்டு நாட்களாய் தீ மூட்டி அடுப்பமைக்க முடியாமல் எம் மக்கள் பெருமூச்சை உணவாக்கினார்கள். பாம்பு, பூரான், புழுக்களின் படையெடுப்பு, நோய்களின் அணிவகுப்பு. மூன்று மணி நேர மழைக்கே இந்நிலையென்றால் அக்டோபர் மாத பெருமழைக் கொடுமை எவ்வாறிருக்குமென எண்ணிப் பாருங்கள்!?
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இது தொடர்பாக அக்கறையுடன் கடந்த திங்கட்கிழமையன்று பிரதம ருக்கு எழுதிய கடிதத்தில், உள்நாட்டு அகதிகளாய் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்திட இந்தியா அரசு அளவிலும் அரசியல்ரீதியாகவும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்' என்று எழுதியுள்ளார். முதல்வரின் கவன ஈர்ப்பு மற்றும் வேண்டுதல் கடிதம் மிகவும் வரவேற்கத்தக்கது. இறையருளை நாம் மன்றாடி யாசிப்பது ஒன்றே: முதல்வரது கடிதத்தின் தொடர்ச்சியாக தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், முக்கிய அமைப்பு களின் தலைவர்கள் ஓரணியாக பிரதமரை சந்தித்து எக்குற்றமும் செய்யாத அப்பாவி மக்களை யுத்தக் குற்றவாளிகள்போல் அடைத்து வைத்திருக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி, உடனடியாக விடுதலை செய்து அவர்கள் தம் வாழ்விடங்களுக்குத் திரும்பிட வழி செய்திடும் அரசியல் அழுத்தம் கொணர வேண்டும். மாண்புமிகு முதல்வரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், ஏனைய முக்கிய தலைவர்களும் இது விஷயத்தில் ஓரணியாக புதுடில்லி சென்றார்களென்றால் அது, ஈழப்பிரச்சனை அனைத்துலகமயமாக்கப்பட்டிருக்கிற இன்றைய சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை உலக அளவில் உருவாக்கும்.
வன்னிப் பகுதியெங்கும் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளது, ஆதலால்தான் இம்மக்களை உடனடியாக வாழ்விடங்களுக்கு அனுப்ப முடியவில்லை, கண்ணி வெடிகளை முற்றிலுமாய் அகற்ற ஆறு மாதங்கள் ஆகலாம், ஓராண்டு மூன்றாண்டு கள்வரை ஆகலாம் என்ற இலங்கை அரசின் மோசடி நிறைந்த இன அழித்தல் தொடர்திட்டப் பொய்யினை முதலில் உடைத்தெறிந்து அம்பலப் படுத்துகிற அவசரக் கடமை நமக் கிருக்கிறது. இலங்கை அரசின் கேவலமான இப்பொய்க்கு இந்திய அதிகார வர்க்கமும் இணைந்து பக்க வாத்தியம் வாசிக்கிறதென்பதுதான் கொடுமையிலும் கொடுமை. பயங்கரவாதப் பூச்சாண்டி அச்சுறுத்தல் களுக்கெல்லாம் அப்பால் அறநெறித் திமிறலும் மீறலும் நடத்த வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் நாம் நிற்கிறோம்.
வன்னி நிலத்தின் 75 சத பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லை. கிளிநொச்சியில் வாழ்ந்த மக்கள் புதுக்குடியிருப்பு, முள்ளி வாய்க்கால் நந்திக்கடல் வரை சென்றதெப்படி? மூன்றரை- நான்கு லட்சம் மக்கள் மீண்டும் தப்பித்து வவுனியா வரை வந்ததெப்படி? நிலமெலாம் கண்ணி வெடிகளென்றால் நான்கு லட்சம் மக்கள் எப்படி நீண்ட நெடும்பயணம் செய்திருக்க முடியும்? கண்ணிவெடிப் பொய் பாதித் தமிழர்களை கொன் றழிக்கவும் மீதிபேரை வாழ முடியாதவர்களாகவும் ஆக்கும் கோத்தபய்யா கொலை சேமிப்புத் திட்டம்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவை உயர் ஆணையமும், அனைத்துலக மன்னிப்பு சபை யும் (Amnesty International) கடந்த வாரம் மிகத் தெளிவாக தம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன : Freedom of movement is the first and fundamental right of the internally displaced people. ""உள்நாட்டு அகதிகளைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும் இடத்திற்கு நகர்கின்ற உரிமை முதலானதும், அடிப்படையானதும் ஆகும்.'' ஏனென்றால் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் அப்பாவி மக்கள், யுத்தக் குற்றவாளிகளல்ல. ஏனென்றால், ராஜபக்சே-கோத்தபய்யா கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது இன அழித்தல் திட்டத்தை முழுமை செய்வதற்காக. ஏனென்றால், தமிழர்களை அடைத்து வைத்துக் கொண்டு சிங்களவர்களை வன்னிப்பகுதியில் ராணுவம் குடியமர்த்தத் தொடங்கியுள்ளதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே நண்பர்களே புலிகளின் பாதுகாப்புக் கவசத்தை இழந்து ஏதிலிகளாய் நிற்கும் அம்மக்களுக்கு தமிழர்களாகிய நாம் அரசியல் கவசமாய் எழுவோம்.
1997-ல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வன்னி விளாங்குளம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த எமது வானொலி நேயர் பேதுருப் பிள்ளை எழுதிய மறக்க முடியாத கடித வரிகள் நினைவுக்கு வருகின்றன. மனிதருக்கு அப்போதே வயது 70-க்கு அருகில். சர்க்கரை, இதய வியாதிகளெல்லாம் உள்ளவர். அவரைப் பற்றி ஒரு தருணத்தில் விரிவாகச் சொல்ல வேண்டும். அவர் எழுதியிருந்தார், ""பருத்தித்துறை என் சொந்த ஊர். சொந்த மண்ணிலேயே அகதியாகி வன்னி விளாங்குளம் வந்துள்ளோம். காட்டு வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க நான் கொடுக்க வேண்டிய விலை அதுவென்றால் நான் காட்டுவாசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.'' -எழுபது வயதில் இந்தத் திமிறலென்றால் உங்களுக்கும் எனக்கும் எப்படி இருக்க வேண்டும்? சுதந்திரத்திற்கு இணையாக உலகில் வேறெந்த விழுமியங்களும் இல்லை.
இந்த வன்னி மக்கள் இறுதிவரை களம்நின்று போராடியது உண்மையில் அமெரிக்கா போல் வளம் கொழித்துப் பெருவாழ்வு வாழ வேண்டுமென்ற கனவுகளோடல்ல. சிங்களவனின் அதிகாரமும் அழிச்சாட்டியமும் இல்லாமல் தங்கள் குடிசையில், வளவில் சுதந்திரமாய் காற்றை சுவாசித்துக்கொண்டு தன்மதிப்புடன் வாழும் விருப்போடு மட்டும்தான். ஆனால் அதற்காக அவர்கள் கொடுத்த விலை நினைத்துப் பார்க்க முடியாதது. சிவரூபன் இதுவரை சொன்னது கொஞ்சமே. இதோ மேலும் தொடர்கிறார்.
""என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். "கடவுளே' என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.
""தம்பி... உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ'' என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.
தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.
சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே... எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)
(நினைவுகள் சுழலும்)
0 Responses to இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்