Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழம் என்பது தான் எங்களுடைய சிக்கலுக்கு தீர்வு. ஆகவே அந்தக் குறிக்கோளுடன் இருந்து மாறாமல் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் தமிழ் நாட்டு மக்களும் தொடர்ச்சியாகப் போராட வேண்டியுள்ளதை என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்வோம். அந்தக் களப்பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் ஆதரவு இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி: இலங்கையில் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் உறவுகளுக்காக உங்களால் என்ன செய்ய முடியும்?

பதில்: சொல்லமுடியாத துயரத்தை, வேதனையை, இந்த நிகழ்வு எமக்குக் கணித்திருக்கிறது. நடந்து முடிந்துள்ள அவலங்களை எல்லாம் விட இப்போது, முட்கம்பி வேலிகளுக்குள், வதை முகாங்களுக்குள் சிக்கி அவலப்பட்டுக்கொண்டிருக்கிற எமது தமிழ்ச் சொந்தங்கள் எல்லாம் படும் அவலம் தான் எம்மை வேதனைப்பட வைத்திருக்கிறது.

இதுதொடர்பில் அண்மையில் இந்திய நாடாளுமன்ற அவையில் பேசுகிறபோது, 3 இலட்சம் தமிழர்களையும் அவர்களின் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியிருக்கிறேன்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை என்ற சிங்கள ஆட்சியாளர்கள் அறிவித்திருக்கிற நிலையில், வேறு எதற்காக அங்கே இராணுவ முகாம்ங்கள் நிலைகொண்டிருகின்றன. ஆகவே, ஒட்டுமொத்த தமிழீழப் பகுதியில் உள்ள இராணுவ முகாங்களை எல்லாம் சிங்கள இனவெறியர்கள் திரும்பப் பெறவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய நாடாளுமன்ற அவையில் வலியுறுத்திப் பேசியிருக்கிறேன்.

அண்மையில் சிறப்பு முகாம் என்ற பெயரில் செல்கல்பட்டில் ஒரு சிறைச்சாலை இயங்குகின்றது. இதில் ஏறத்தாள 18 ஆண்டுகளுக்கு மேலாக 80 க்கு மேற்பட்டவர்கள் சிறைப்பட்டு இருக்கிறார்கள். அவர்களையும் விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழங்குகளைத் திரும்பிப் பெறவேண்டும். அதற்கு தமிழக அரசும், இந்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

6 மாதகாலத்திற்குள் ராஜபக்ச மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றி விடுவோம் என இந்திய அரசுக்குத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் கடந்த காலத்தில் ராஜபக்ச அரசின் நடவடிக்கைகளை ஆராய்கின்றபோது, அவர்கள் சொன்ன சொல்லை எப்போதும் காப்பாற்றியதில்லை. இனியும் காப்பாற்றுவார்களா என ஐயமாக இருக்கிறது.

3 இலட்சம் தமிழர்கள் தொடர்பில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினால் இந்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறோம். இந்திய அரசைத் தலையிட வைத்து அவர்களைச் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய முயற்சிப்போம்.

இந்திய அரசின் சார்பில் சுமார் 500 கோடி இந்திய ரூபாக்களை தமிழரின் மறுவாழ்வுக்காக வழங்குவதாக அறிவித்தபோது, அதனை சிங்கள ஆட்சியாளர்களிடம் நேரில் வழங்கக்கூடாது அதனை தமிழர்களின் கைகளில் நேரில் சென்றடைய வேண்டும் என நாடாளுமன்றில் பேசியிருந்தோம். ஆனால் அதற்கான சரியான பதில் இதுவரையும் கிடைக்கவில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என சிங்கள அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழக மக்களின் உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்: மே இரண்டாவது வாரத்தில் நடைபெற்ற சிறீலங்காவின் கொடூர தாக்குதல்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் செயழிழக்கச் செய்துவிட்டது. எதுவுமே செய்ய முடியாத கையேறுநிலையை தமிழ் மக்கள் அழுவதற்கு கூட முடியா நிலையும், ஆவேசமாக எழுத்திருக்கவும் முடியாமல் அப்படியே உறைந்துபோய்க் கிடக்கிறார்கள்.

எல்லாம் முடிந்துவிட்டதைப் போன்று மே 17 க்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களும் மீண்டெழ முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

அதற்காகவே வரும் ஓகஸ்ட் 17ம் நாள் “ எழும் தமிழீழம் ” எனும் பெயரில் இனவிடுதலை அரசியல் மாநாடு ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைத்திருக்கிறோம். ஈழ விடுதலைப் போர் முற்றுப்பெறவில்லை. அது மீண்டும் எழுச்சி பெறும். ஈழம் என்கிற தாகம் தணியவில்லை. அதற்கான யுத்தம் தொடரும் என்பதைப் பறைசாற்றும் வகையில் இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம். மீண்டும் தமிழகத்தில் அத்தகைய போராட்டங்கள் பரவலாக எழும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

கேள்வி: இந்திய அரசின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது?

பதில்: புலம்பெயர்ந்துள்ள தமிழ்ச் சமூகம் இந்திய அரசிடம் ஏராளம் எதிர்பார்க்கின்றது. இந்திய அரசு ஏதாவது ஒரு கட்டத்திலாவது ஆதரவாகச் செயற்படும் என நம்பிக்கொண்டிருக்கிறது. நான் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் கூட என்னுடைய உணர்வை நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஈழ விடுதலைக்கு இந்தியா உதவாது என்பது தான் என்னுடைய கருத்து. அதுவே பட்டறிவாக இருக்கிறது.

சிங்களர்களுக்குத் துணை நின்று, சிங்களவர்களின் எண்ணம் போல், ஈழத் தமிழர்களுக்கான உதவிகளைச் செய்ய முன்வந்திருக்கிறதே தவிர, சிங்கள இனவெறியர்களின் கொடூரத்தைக் கண்டிக்கிற வகையிலோ அல்லது அதனைத் தடுக்கிற வகையிலோ இந்திய அரசின் அணுகுமுறை இல்லை என்பது யதார்த்தமான உண்மை.

கேள்வி: தமிழகத்தில் ஏதிலிகளாக முகாங்களில் இருக்கும் எமது உறவுகள் தொடர்பில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்: ஏதிலிகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினை என்றாலும் அது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக அரசு இந்திய அரசின் வழிகாட்டுதலுக்கு அமைவாகத் தான் ஏதிலிகள் விடயத்தில் செயற்பட முடியும்.

அவர்களுடைய அதிகாரம், அவர்களின் எல்லை அந்தளவில் தான் உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஈழத் தமிழர்களே அதிகளவு ஏதிலிகளாக உள்ளனர். வேறு சில நாடுகளிடமிருந்தும் இந்தியாவுக்குள் வந்த ஏதிலிகளும் இருக்கின்றார்கள் என்றாலும் அது மிகக் குறைவு.

இதனால் தானோ தெரியவில்லை ஏதிலிகள் விடயத்தில் இந்தியா மிகுந்த மெத்தனமாகச் செயற்படுகிறது. போதிய கவனிப்பு இல்லை. ஐ.நா அமைப்பாக இருக்கிற அனைத்துலக ஏதிலிகள் தொடர்பான ஒரு அமைப்பில் அது உருவாக்கிய ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையொப்பம் இடவில்லை.

ஆகவேதான் பிறநாடுகள் ஏதிலிகளை நடத்துவதைப் போன்ற ஒரு அனுகுமுறையை இந்தியா நாட்டுக்குள் நடத்தவில்லை.

செங்கல்பட்டு சிறைமுகாம் ஒரு வதைமுகாம் போன்றே அமைந்துள்ளது. சாதாரண ஏதிலிகள் முகாமில் ஒரு தலைக்கு நிவாரண நிதியாக 110 இந்திய ரூபாதான் வழங்கி வந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகளின் தலையீட்டுக்குப் பிறகு முதல்வரிடம் முறையிட்டதற்குப் பிறகு அது 220 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகவே, இவ்வாறான சிறு சிறு வேலைகளையே தமிழக அரசு செய்யக்கூடிய நிலை உள்ளது. இந்திய அரசு சர்வதேச ஏதிலிகள் நிறுவனத்தில் கையெழுத்து இட்டால் தான் ஏதிலிகளுக்கு உரிய மரியாதை இந்தியாவில் கிடைக்கும். இது தொடர்பிலும் இந்திய நாடாளுமன்றில் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

கேள்வி: கண்ணிவெடி அகற்றும் போர்வையில் 5 ஆயிரம் இந்தியப் படையினர் இலங்கை சென்றுள்ளதன் உள்நோக்கம் என்ன?

பதில்: இராணுவ நடவடிக்கையில் பின்னணியை யூகித்துச் சொல்ல முடியாது. பொதுவாக இந்திய அரசு சிங்கள இனவெறியர்களுக்குத் துணையாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையும் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயற்பாடாகவே நடந்துள்ளது எனக்கூற முடியும்.

கண்ணிவெடி அகற்றுவதாக இருந்தால் கூட அது இந்திய அரசுக்கு உள்ள கடமை அல்லை. இந்திய அரசு அதில் தலையிடுவது தேவையற்ற செயல் என்பதே எனது கருத்து.

கேள்வி: நாடுகடந்த அரசாங்கம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? அது சாத்தியமாகுமா?

பதில்: அதுபற்றி எனக்குப் போதிய புரிதல் இல்லை. இது தொடர்பான விடயங்களை அறிந்த பிறகுதான் நான் கருத்துக்கூற முடியும்.

கேள்வி: தாயகத்துடனான தொடர்பைத் தமிழக உறவுகளும், புலம்பெயர் உறவுகளும் இழந்த நிலையில் பல குழப்பங்களில் எமது உறவுகள் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள்

பதில்: 3 இலட்சம் தமிழர்கள் தடை முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யவதற்கு அனைவரும் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனைவிடுத்து வேறு எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளும் முகாந்தரம் இல்லை.

நாம் உறைந்துபோய் இருக்காமல் மீண்டெழுந்து அங்கு சிக்கியுள்ள தமிழ் உறவுகளைக் மீட்பதற்கு தொடர்ச்சியான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்பணியைச் தமிழ்ச் சமூகம் சரிவரச் செய்தால் தான் நாம் உயிர்ப்புடன் இருக்கின்றோம். அதே உணர்வோடு இருக்கிறோம். அதே வீரியத்துடன் இருக்கிறோம் என்று அனைத்துலக சமூகத்திற்கு உறுதிப்படுத்த முடியும்.

கேள்வி: தமிழீழ உறவுகளுக்காக எதிர்வரும் காலத்தில் உங்கள் செயற்பாடுகள் எவ்வாறு அமையும்?

பதில்: கடந்த காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் எவ்வாறு களப்பணியை ஆற்றினார்களோ அதே வீரியத்தோடு தமிழீழ விடுதலை என்கிற குறிக்கோளை நோக்கி தொடரும். ஈழம் என்பது தான் எங்களுடைய சிக்கலுக்கு தீர்வு. ஆகவே அந்தக் குறிக்கோளுடன் இருந்து மாறாமல் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் தமிழ் நாட்டு மக்களும் தொடர்ச்சியாகப் போராட வேண்டியுள்ளதை என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்வோம். அந்தக் களப்பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

0 Responses to ஈழம் என்பது தான் எங்களுடைய சிக்கலுக்கு தீர்வு: திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com