Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பில் பஸ் எரிப்பு

பதிந்தவர்: தம்பியன் 17 September 2009

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆலங்குளம் சந்தியில் கல்முனை இ.போ.ச. டிப்போவுக்குச் சொந்தமான பயணிகள் பஸ் எரிப்பு மற்றும் கிரான் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை ஆகிய சம்பவங்கள் தொடர்பான அடையாள அணி வகுப்பு நேற்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது சந்தேக நபர்களான விடுதலைப் புலி உறுப்பினர்கள் சாட்சிகளால் அடையாளம் காணப்படவில்லை.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த குறிப்பிட்ட பஸ், 12 .03.2009 அன்று ஆலங்குளம் சந்தியில் ஆயுதம் தரித்த நபர்களினால் வழிமறித்து தீ வைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு பதில் நீதிபதி எம்.பி.எம். ஹுசைன் முன்னிலையில் நடைபெற்ற போது, சாட்சிகளாக பஸ் சாரதி குழந்தைவேல் விஜயராஜா மற்றும் நடத்துனரான தங்கராசா அதிஷ்டநாதன் ஆகியோர் பொலிசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறிப்பிட்ட சாட்சிகள், சந்தேகநபர்களான விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் வாகனேரியைச் சேர்ந்த ஹரன் என்ற பரமக்குட்டி சாமுவேல், முள்ளிவெட்டுவானைச் சேர்ந்த ராகுலன் என்ற செல்லப்பா சிவானந்தன், கொண்டையன்கேணியைச் சேர்ந்த புகழேந்தி என்ற கணபதிப்பிள்ளை அமரசிங்கம் ஆகியோரை அடையாளம் காட்டவில்லை.

இதனையடுத்து வாழைச்சேனை பொலிசார் ஏற்கனவே சமர்ப்பித்த மற்றுமொரு அறிக்கையின் பேரில் 19.03.2009 அன்று இரவு கிரான் பிரதேசத்திலுள்ள குளத்துமேடு என்னுமிடத்தில் முறுத்தானையைச் சேர்ந்த 27 வயதான தில்லையம்பலம் சாமித்தம்பி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் சாட்சிகளான தங்ககுணம் தங்கராஜா, பொன்னம்பலம் தவனி ஆகியோர் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை. மற்றுமொரு சாட்சியான தியாகராஜா ரஜனி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அடையாள அணிவகுப்புகளின் பின்னர் சந்தேக நபர்கள் மீண்டும் வாழைச்சேனை மஜிஸ்திரேட் ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ஆம் திகதி வரை இவர்களுக்கான விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டது.

0 Responses to மட்டக்களப்பில் பஸ் எரிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com