Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கையில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என அந்த கண்காணிப்பகம் கோரியுள்ளது. குறித்த முகாம்களில் பாதுகாப்பு குறைவாகக் காணப்படுவதும், மக்கள் காணாமல் போவதும், மக்கள் முகாம்களில் நெரிசலாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.

இவற்றைத் தவிர எதிர்வரும் பருவப்பெயர்ச்சிக் காலத்தின் போது, சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்த விடயம் தொடர்பில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தது.

முகாம்களில் பூட்டி வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரெட் எடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். உலகத் தலைவர்கள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

சிறீலங்காவின் பிரதமமந்திரி இரட்ணசிறி விக்கிரமநாயக தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகளின் அமர்வில் பங்கேற்றுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைத் துரிதமாக முடித்து "இடம்பெயர் முகாம்களிலுள்ள" மக்கள் அனைவரையும் அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது

0 Responses to தடுப்புமுகாம் தொடர்பில் ஐ.நா சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனிதவுரிமைகள் கண்காணிப்பகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com