Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவுள்ள, முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, “அன்னப்பறவைசின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அவர், இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் சரத் பொன்சேகா முதல் தடவையாக ஊடக சந்திப்பை இன்று நடத்தினார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடுவேன். இருப்பினும் தனியாக ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியின் சார்பில் நான் தேர்தலி்ல் போட்டியிடவுள்ளேன். அன்னப் பறவை சின்னத்தின் கீழ் நான் தேர்தலில் நிற்பேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில் படையினர் அடைந்த வெற்றியை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தமது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியில் அரசியல் தலைமைக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு. அதை நான் மறுக்கவில்லை. அதேசமயம், இடம் பெயர்ந்த தமிழர்கள் கையாளப்படும் விதம் எனக்கு பெரும் வருத்தத்தையே தந்துள்ளது.

நான் இராணுவத் தளபதியாக இருந்தபோது கூறிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டேன். அதேபோல மக்களுக்கு கூறப்போகும் உறுதிமொழிகளையும் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

இராணுவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற அரசு முனைகிறது. இது கண்டனத்துக்குரியது.

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றப் போவதாக தெரிவித்த அவர் நாட்டின் சீரான நடவடிக்கைகளுக்காக, அரசியல் அமைப்பு சபையை அமைப்பதுடன், 17 வது திருத்தச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு தாம் மரியாதை செலுத்துவதாக தெரிவித்த அவர், இந்திய கலாசாரத்தை இந்திய மக்களை தாம் நேசிப்பதாக கூறினார். மோதல்களை நிறுத்துமாறு இந்தியா அழுத்தங்களை கொடுத்த வேளை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளுடனான போரில் மோதல்களை நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் எனத் தெரிவித்தார்

விடுதலை புலிகளுடனான மோதல்களை நிறுத்துமாறு இந்தியா உட்ப பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட அழுத்தங்களையும் தாண்டி மோதல்கள் தொடர்ந்தது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இராணுவ பயிற்சிகளுக்காக தாம் இந்தியாவுக்கு நான்கு தடவைகள் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், எனினும் அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்திற்காக ஆயுதங்களை பெறும் நோக்கில் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சென்றதாக குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் குற்றச்செயல்களின் பின்னால், பாதாள உலகத்தினரும்,சில குழுக்களும் இருந்திருக்கலாம் எனக்குறிப்பிட்ட அவர், படையினர் மீதோ அல்லது தம் மீது இது தொடர்பில், குற்றம் சுமத்தப்படுமானால், அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

தாம் இராணுவத்திற்கு தலைமை தாங்கியபோதும் இரவு வேளைகளில் சீருடைகளை கழற்றிவிட்டு இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடவில்லை என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

தாம் பொதுவாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக கூறி தமக்கான பாதுகாப்பு குறைக்கப்படுமானால், ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும் சிவில் வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் ஏன் அவர்களுக்கு ஐநூறு, ஆயிரம் என்ற அளவில், படையினர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் எனக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். " எனத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் தமது நண்பர்கள் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் மங்கள சமரவீர ஆகியோர், முன்னர் இராணுவத்தளபதியாக இருந்த போது சரத் பொன்சேகாவை விமர்சித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே சரத் பொன்சேகா இதனை குறிப்பிட்டார்.

அப்போது சன்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க கொலையில் உங்களது பெயர் அடிபடுகிறதே என்று கேட்டபோது அதை பொன்சேகா மறுத்தார். என்னிடம் கூலிப்படையினர் யாரும் இல்லை என்றும் கூறினார்.

அப்படியும் விடாத நிருபர்கள், உங்களது மருமகன் இராணுவத்தின் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடையவராக இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதையும் பொன்சேகா மறுத்தார்.

மேலும், இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால்தான் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்றார் பொன்சேகா.

பொன்சேகாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அதிபர் தேர்தல் என்ற பொம்மலாட்டம் தொடங்கி விட்டது. போருக்குப் பின்னர் பெரும் கேள்விக்குறியாகி விட்ட வாழ்க்கையுடன் ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தலால் என்ன நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் ராஜபக்ச, பொன்சேகா ஆகிய இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற எண்ணத்தில் தமிழர்கள் உள்ளனர். எனவே தமிழர் கட்சிகள் சார்பில் தனியாக ஒரு வேட்பாளர் களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

0 Responses to தேர்தலில் "அன்னப்பறவை" சின்னத்தில் போட்டியிடும்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com