Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"அரசதலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவீத வாக்குகளை பெற்றுகொள்ளாவிடின் அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றினை வலியுறுத்தும் களம் கிடைக்கும். அந்த அரசியல் களத்தினை உருவாக்குவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்" - என்று அரச தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழ்க்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியுள்ளதாவது:-

அரச தலைவர் தேர்தலில் என்ன முடிவு எடுக்கவேண்டும் என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெவ்வேறு கருத்துக்களுடன் பிரிந்து நிற்கிறது. வெளிநாடுகளின் ஆலோசனைகளை பெற்று இரகசியமான விளக்கங்களுடன் பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை அறிவிக்கும் நிலைப்பாட்டுடன் அது காணப்படுகிறது.

சிங்கள அரசியல் தலைவர்களுக்க ஆதரவளித்து இனிமேலும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கு கிடையாது. நாம் தமிழ்மக்களின் பிரதிநிதிகள். ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய அரசியல் முடிவுகளையே எடுக்கவேண்டும்.

- சமஷ்டி ஊடான தீர்வு நோக்கிய பயணம்.

- தடுப்புமுகாம்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றம்.

- சிங்கள இனத்திலிருந்து மட்டுமல்லாமல் தமிழ் தரப்பிலிருந்தும் பிரதமர் ஒருவர் நியமனம்.

- போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதாக உத்தரவாதம்.

ஆகிய விடயங்களை ஏற்றுக்கொண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவர் இதயசுத்தியுடன் உறுதிமொழியளித்தால் அரசதலைவர் தேர்தலிலிருந்து விலகிக்கொள்வதற்கு நான் தயார்.

அதைவிடுத்து, 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தத்துக்கு அப்பால் தமிழ்மக்களுக்கு தீர்வு தருகிறோம், நிறைவேற்று அதிகார அரசதலைவர் முறையை ஒழிப்போம், சிறுபான்மை மக்களுக்கு சுபீட்சமான வாழ்வளிப்போம் என்ற மொட்டையான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி, சிங்கள தலைவர்களின் பின்னால் போவதற்கு நாம் தயாராக இல்லை.

இது வரலாற்று சந்தர்ப்பம். எமத மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் ஜனநாயக வழியில் எடுத்துக்கூறவும் அதனை ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசுத்தலைமையை சர்வதேசத்தின் முன்னால் குற்றவாளியாக நிறுத்துத்துவதற்கும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு. இந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் சந்தர்ப்பவாத அரசியலுக்குள் ஒளித்துக்கொள்ளக்கூடாது.

0 Responses to எவரும் 50 சதவீத வாக்குகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்காத அரசியற்களத்தை உருவாக்குவதே நோக்கம்: சிவாஜிலிங்கம் எம்.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com