Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை?

பதிந்தவர்: தம்பியன் 28 December 2009

தஞ்சாவூரில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் உலகத் தமிழர் பேரமைப்பு நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை, அவர் வந்திறங்கிய திருச்சி விமான நிலையத்திலேயே தடுத்தி நிறுத்தி, அவர் எங்கிருந்து வந்தாரோ அதே நகருக்கு மீண்டும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர் நமது நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள்.

உரிய பயண ஆவணங்களுடன் வந்த சிவாஜிலிங்கத்தை எதற்காக நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்பதை தெரிவிக்காமலேயே குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்றி மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல, எந்த ஒரு நாட்டிற்கும் வரும் அன்னிய நாட்டினரை அவர்கள் முறையான பயண ஆவணங்களுடன் வந்துள்ளனரா என்பதை சோதித்து அனுமதிக்கும் பொறுப்பு குடியேற்றத் துறைக்கு உண்டு. அவ்வாறு வருபவர்கள், வந்திறங்கும் அந்த நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பாதுகாப்புத் தொடர்பான வேறு காரணங்களுக்காகவே குடியேற்றத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுவதும், அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட சட்டப் பூர்வமான நடவடிக்கையே.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், முறையான பயண ஆவணங்களுடன் (விசா) வந்திருந்தாலும், என்ன காரணத்திற்காக நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வாய்மொழியாக மட்டுமின்றி, எழுத்துப் பூர்வமாகவே தெரிவிக்க வேண்டும். வந்திறங்கிய பயணிக்கு தான் என்ன காரணத்தி்ற்காக திருப்பி அனுப்பப்படுகிறோம் என்பது சட்டப் பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையே.

ஏனெனில், நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத அந்தப் பயணி, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதுவாரானால், அவர் தனது நாட்டிற்குச் சென்று சட்ட ரீதியாக நியாயம் பெற அந்த எழுத்துப்பூர்வமான விளக்கம் அவசியமானதாகும்.

ஆனால், இலங்கையின் .நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கைத் தமிழர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுள் ஒருவர் போன்ற தகுதிகள் மட்டுமின்றி, அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் சிவாஜிலிங்கம். இப்படிப்பட்ட தகுதிகள் கொண்ட ஒரு அண்டை நாட்டின் அரசியல் தலைவரை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்தது மட்டுமின்றி, அவரை நாடு கடத்த என்ன காரணம் என்பதை அங்கிருந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்கவில்லை!

தான் புறப்பட்ட துபாய்க்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட சிவாஜிலிங்கம், கொழும்பு வந்தடைந்தபோது அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தும், இந்தியா வருவதற்கான விசா பெற்றிருந்தும், தன்னை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காதது தனக்கு எந்த விதத்திலும் அவமானமில்லை, அது இந்தியாவிற்குத்தான் அவமானம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல தான் எப்படி நடத்தப்பட்டேன் என்பதையும் சிவாஜிலிங்கம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. “விமான நிலையத்தை சென்றடைந்த எனக்கு அங்கு தண்ணீர் அருந்துவதற்கோ கழிவறையை பயன்படுத்துவதற்கோ கூட அனுமதி தரப்படவில்லை. தொலைபேசியல் எவரையும் அழைக்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. ஒருநாட்டின் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளன் நான். இவை எல்லாவற்றையும் விளக்கமளித்துக்கூட என்னை அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லைஎன்று கூறியுள்ளார்.

தண்ணீர் குடிப்பதற்கும், கழிவறை செல்வதற்கும் கூட அனுமதியளிக்காததன் காரணமென்ன? இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் உலகில் எங்காவது நடந்துள்ளதா? தொலைபேசியில் கூட எவருடனும் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஒரு நாட்டிற்குள் வரும் (அந்நாட்டின்) அழையா விருந்தாளியாக இருந்தாலும், அவருடைய மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட அனுமதி மறுப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது?

எந்தக் காரணமும் சொல்லாமல் அன்னிய நாட்டவர் ஒருவரை - அதுவும் அவர் தமிழராக இருந்தால் - காரணம் கூறாமல் வெளியேற்றும்சட்டப் பூர்வமானஅதிகாரம் கொண்டது இந்தியாவின் குடியேற்றத் துறை என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய வானளவிய அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ள உரிமை படைத்த குடியேற்றத் துறையும், நாட்டை காக்க கண் துஞ்சாமல் பாதுகாத்துவரும் உள்துறை அமைச்சகத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளகாரணமின்றி வெளியேற்றும் அதிகாரம்இந்த ஜனநாயக நாட்டில் கேள்விக்குட்படுத்த முடியாதது என்பதும் விவரம் தெரிந்த அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் முறையான பயண ஆவணத்துடன் (விசா) வந்தவரை திருப்பி அனுப்புகிறீர்கள் என்றால் அதற்கான காரணத்தை அளிப்பதில் என்ன சிக்கல்? ஏன் தயக்கம்? சட்டப் பூர்வமான காரணம் இல்லை என்பதனாலா? அல்லது குடியேற்றத் துறையின் நடவடிக்கையின் பின்னால் உள்ள அரசியலா? என்ன காரணம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு விளக்கிட வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

இப்படிப்பட்ட அநீதிகள் ஈழத் தமிழர்களுக்குத்தான் அதிகம் இழைக்கப்படுகிறது. இது அனுபவப்பூர்வமாக நாமறிந்த உண்மை. சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த ஈழத் தமிழர் ஒருவரை - அவர் முறையான விசா பெற்று வந்த நிலையில் - ஒரு நாளெல்லாம் தடுத்து நிறுத்தி வைத்து - 16 மணி நேரத்திற்குப் பிறகு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார் சென்னை மீனம்பாக்கத்தில் பணியாற்றிய குடியேற்றத் துறை அதிகாரி.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் (அகதியாக) இந்தியா வந்திருந்தபோது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக அவர் தங்கியிருந்தார் என்றும், அதற்கான விதிப்படி இன்னும் ஓராண்டிற்கு அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் அந்தக் குடியேற்றத் துறை அதிகாரி கூற, அதற்கு பதிலளித்த ஈழத் தமிழர், தான் இப்பிரச்சனையை உள் துறை அமைச்சகத்திற்கு விளக்கி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, அதனடிப்படையிலேயே விசாவிற்கு விண்ணப்பித்து அதனைப் பெற்று வந்துள்ளதாகவும் விளக்கியுள்ளார். ஆனால் அந்தக் குடியேற்ற அதிகாரியோ, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் விதிப்படிதான் நடந்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார். அந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள் என்று அந்தப் பயணி கேட்டதற்கு, அவ்வாறு எதையும் அளிக்க மறுத்த அந்த அதிகாரி, இரவு 11 மணி வரை இருந்து, அந்தத் தமிழரையும் அவருடைய குடும்பத்தினரையும் மீண்டும் விமானத்தில் ஏற்றிய பின்னர் - மிகுந்த கடமையுணர்வோடு - தனது பணியை முடித்துக் கொண்டு சென்றுள்ளார்!

இதுகுறித்து விசாரித்துபோது, இப்படி பல ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்ற விவரங்கள் தெரிந்தது. ஏன்? தமிழர்களுக்கு எதிராக மட்டும் இப்படிப்பட்ட முறையற்ற அணுகுமுறை எதனால்
கடைபிடிக்கப்படுகிறது? இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசின் இன அழித்தலில் இருந்து தப்பித்து, ஆறரைக் கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் - தங்கள் தாய் மண் என்று உலகத் தமிழர்கள் கருதும் - தங்கள் தொப்புள் கொடி உறவுகளோடு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை மேற்கொள்ள வந்த ஈழத் தமிழர்களை - இந்தியாவின் குடியேற்றத் துறை அவமானத்திற்குட்படுத்துவது ஏன்? மத்திய உள்துறை அமைச்சகம் விளக்க வேண்டும்.

பன்னாடுச் சட்டங்களுக்கு இணங்க - அவர்கள் அகதிகளானாலும் அனைத்து மனித உரிமைகளுடனும் வாழ, பயணிக்க ஈழத் தமிழர்களுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமைகளை தங்களுக்கு (நாட்டின் பாதுகாப்பை உத்தேசித்து) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறை தவறிப் பயன்படுத்தி தமிழர்களையும், அவர்தம் தலைவர்களையும் அவமதிப்பதையும், குடியேற்றச் சட்டத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதையும் மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் சட்டப் பூர்வமான அதிகாரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதும் அந்ந நாட்டில் நிலவும் ஜனநாயகத்திற்கு ஒரு அளவுகோல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: வெப் உலகம்

1 Response to தமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை?

  1. Unknown Says:
  2. Tamilnadu is only for tamils,who is sonia to restect our Tamil people to land in tamilnadu ,i have indian birth certifecate but sonia dont have it,she may have only indian death certifecate.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com