Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயத்தில் நான் செய்த பங்களிப்பை தாய்நாட்டுக்கு செய்த கடமையாக எண்ணுகிறேனே தவிர, அதனை வாழ்த்துக்கும் விருதுக்கும் உரிய செயலாக பார்க்கவில்லை" - என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரமுகரும் தற்போது அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்துவருபவருமான அலிஸாஹிர் மெளலானா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயம் தொடர்பாக அப்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அளித்த விசேட செவ்வி ஒன்றில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்த எனக்கு கருணாவை சிறுவயது முதற்கொண்டு தெரியும். நான் மேற்படிப்புக்காக இந்தியா சென்றுவிட்டு நாடு திரும்பியபோது கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதாக அறிந்தேன். அதன்பின்னர், அவர் அந்த அமைப்பில் தளபதி தரத்திற்கு உயர்ந்தார். என்னுடன் சிநேகபூர்வமான உறவுகளை தொடர்ந்து வந்தார்.

பல ஆண்டுகளாக இவ்வாறு எமது உறவு தொடர்ந்துவந்தபோது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் விடுதலைப்புலிகள் அமைப்பு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டது. அதனைத்தொடர்ந்து அமைதிப்பேச்சுக்கள் வெளிநாடுகளில் நடைபெற்றன. அக்காலப்பகுதியில் கருணாவுடன் வெளிப்படையாகவே இணைந்து பணிபுரிவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இவ்வாறு சந்திப்புக்களில் ஈடுபடும் வாய்ப்புகிடைத்த ஒருநாளில் கருணா என்னுடன் பேசிய சில விடயங்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அவருக்கு பிரச்சினைகள் இருப்பதை வெளிக்காட்டியது. அக்காலப்பகுதியில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அமைதிப்பேச்சுக்கள் இடம்பெற்றன. அந்த பேச்சுக்களின்போது, சமஷ்டி முறை தீர்வு ஒன்றுக்கு விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டிருந்தனர். இந்த விடயத்தை அப்போது விடுதலைப்புலிகளின் அமைதிப்பேச்சுக்குழுவினர் தலைவர் பிரபாகரனிடம் ஆலோசிக்காமல் அறிவித்திருந்தனர்.

இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் வன்னிக்கு வந்த விடுதலைப்புலிகளின் அமைதிப்பேச்சுக்குழுவினர் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் பேச்சுக்களில் நடைபெற்ற விடயங்களை எடுத்துக்கூறினர். அப்போது, சமஷ்டி தீர்வுமுறை ஒன்று ஒப்புக்கொண்டதாக ஏன் அறிவித்தீர்கள் என்று பேச்சுக்குழுவின் தலைவரான அன்ரன் பாலசிங்கத்திடம் பிரபாகரன் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், கருணா மற்றும் பேச்சுக்குழுவினர் தனக்கு அழுத்தம் தந்தார்கள். அதனால்தான், அதற்கு தான் இணங்கியதாக கூறியுள்ளார்.

அதற்கு கருணாவை பார்த்து பிரபாகரன், "நீயும் மாத்தையா போல மாறப்போகிறாயா?" - என்று கேட்டிருக்கிறார். மாத்தையா என்ற சொல் பிரபாகரனிடமிருந்து வந்த மாத்திரத்திலேயே தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கருணா உடனடியாகவே மட்டக்களப்புக்கு வந்துசேர்ந்துவிட்டார். மட்டக்களப்பில் என்னை சந்தித்து விடயத்தை விளக்கமாக கூறினார். நானும் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு இதனை தெரியப்படுத்தினேன்.

ஆனால், ரணிலின் அரசோ இதனை முக்கிய விடயமாக பார்க்கவில்லை. விடுதலைப்புலிகளின் வன்னித்தலைமை சக்திவாய்ந்தது என்றும் கருணாவை அரசு தரப்புக்கு கொண்டுவருவதனால், எதுவும் நடைபெறாது என்றும் கருணா முக்கியமான ஒரு நபர் இல்லை என்றும் தெரிவித்தது. ஆனால், எனக்கு அது புரிந்தது. உடனடியாகவே கருணாவை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன்.

கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் வன்னியிலிருந்து விடுதலைப்புலிகள் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் உதவியுடன் ஆயுதங்கள் எதுவுமின்றி கிழக்குக்கு வந்தார்கள். வெருகல் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் சண்டை மூண்டது. என்னை தொடர்பு கொண்ட கருணா போர் ஆரம்பித்துவிட்டதாக கூறினார்.

சண்டையை கைவிட்டுவிட்டு பின்வாங்குமாறு அவரிடம் கூறினேன். அவரும் அங்கிருந்து தப்பி தொப்பிகல காட்டுப்பகுதிக்கு சென்றார். நான் அங்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு - ஏப்ரல் 12 ஆம் திகதி - கொழும்புக்கு வந்தேன். ஆயுதங்கள் எதுவுமின்றி சாதாரண பயணிகள் போல வாகனத்தில் வந்ததால் வரும்வழியில் சோதனைசாவடிகளில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

கொழும்புக்கு அழைத்துவந்த கருணாவை முதல்நாள் ஜெய்க் ஹில்ட்டன் ஹோட்டலில் தங்கவைப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட நான், இது விடயம் சம்பந்தமாக சமாதான செயலக பணிப்பாளர் பேர்னாட் குணத்திலக்கவிடம் எடுத்துக்கூறி, கருணாவை அவரிடம் பொறுப்பளித்தேன். நான் வெறுமனே டக்ஸி ஓட்டுநர் வேலை மட்டு்ம் பார்க்கவில்லை. பொறுப்புடன் இந்த விடயத்தை செய்துமுடித்தேன்.

அதற்கு பின்னர், எனது உயிருக்கு ஆபத்து ஆரம்பித்தது. ஆனால், அது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. "மெளலானா என்னிடம் கேட்டு இந்த காரியத்தை செய்யவில்லை. ஆகவே, அவரது பாதுகாப்புக்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது" - என்று கூறி ரணில் விக்கிரமசிங்க கைவிரித்துவிட்டார்.

இதனையடுத்து, நான் வெளிநாடு செல்லவேண்டியிருந்தது. மகிந்த ராஜபக்ச எனது நீண்ட கால நண்பர். இன்று அவர் நாட்டு மக்களின் தலைவர். படை நடத்திய தளபதி என்றவகையில் பொன்சேகாவின் பணியை நான் மதிக்கிறேன். ஆனால், சிறுபான்மையின மக்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. மகிந்த ராஜபக்சவின் தலைமையே நாட்டில் போரை வென்றது. அவரது தலைமையின் கீழ் பணிசெய்து நாட்டில் அமைதியை கொண்டுவரவேண்டும்.

அந்த பணியில் நானும் இணைந்துகொள்வதற்கு தயாராக உள்ளேன். என்னை எனது மக்கள் நிராகரிக்கவில்லை. வெளிநாட்டில் இருந்தபோதும் எனது மக்களுடனான தொடர்புகளை நான் இழக்கவில்லை. தொடர்ந்தும் பணி செய்ய தயாராக உள்ளேன்.

என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to விடுதலைப்புலிகள் - கருணா பிளவு: நடந்தது என்ன என்று கூறுகிறார் அலிஸாஹிர் மெளலானா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com