Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு பூராவும் அண்மையில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் ஆராய்வதற்காக ஜேர்மன்- ஜப்பான் நிபுணர் குழுவொன்று இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றது.

இக்குழுவினர் இன்றையதினம் வெடிப்புக்கள் இடம்பெற்ற உப மின்நிலையங்கள் உட்பட 30 உபமின்நிலையங்களுக்குச் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராயவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

பியகம மற்றும் கொட்டுகொட உபமின்நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புக்களுக்கான காரணங்களை ஆராய்வதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருப்பதுடன், மின்சாரத் துண்டிப்புக்கான காரணங்கள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை குறித்த குழுவினர் அமைச்சுக்கு வழங்கவுள்ளனர்.

தனித்தனியான சம்பவங்கள் எந்தளவுக்கு மின்விநியோகத்தைப் பாதித்துள்ளன, தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான நீண்டகால மற்றும் குறுகியகால தீர்வுகளையும் இந்த நிபுணர்கள் குழு வழங்கவிருப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஊடாக நாட்டின் மின்சார விநியோகத்தில் 1/3 பங்கு வழங்கப்படுகிறது. கடந்த காலத்தில் மின்விநியோகம் நடைபெற்ற அதேசமயம், மின்விநியோகம் தடைப்படும் சந்தர்ப்பத்தில் மாற்றுவழியாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், நுரைச்சோலை அனல்மின்நிலையம் செயலிழப்பின் மாற்று ஏற்பாடுகள் எதுவும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் பியகம மற்றும் கொட்டுகொட உபமின்நிலையங்களில் உள்ள ட்ரான்ஸ்போமர்களை மாற்றுவதற்கு 217 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஜேர்மன் நிபுணர்களின் ஆய்வுகளிலேயே செலவுகள் குறித்த சரியான தகவல்கள் தெரியவரும்.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத்துண்டிப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு தனது விசாரணை அறிக்கையை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது.

கடந்த ஆறு மாதகாலத்துக்குள் நாட்டில் அடிக்கடி ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தலைமையில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, சாகல ரத்நாயக்க பிரதியமைச்சர்களான அஜித்.பி.பெரேரா மற்றும் இரான் விக்ரமரட்ன ஆகியோர் கொண்ட குழுவை நியமித்திருந்தார்.

இந்தக் குழு தனது அறிக்கையை இறுதிப்படுத்துவது தொடர்பான மின்சாரசபையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்த நிலையில் இன்றையதினம் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அது மாத்திரமன்றி எதிர்வரும் புதன்கிழமை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதுடன், மின்சாரத் துண்டிப்புக்கள் ஏற்படாதிருப்பதற்கு இரண்டு வாரங்களுக்கான குறுகியகால திட்டங்களையும், மூன்று மாதங்களுக்கான நீண்டகாலத் திட்டங்களையும் இந்த அறிக்கையில் முன்மொழியவிருப்பதாகத் தெரியவருகிறது.

இலங்கை வரும் ஜேர்மன் நிபுணர்கள் ட்ரான்ஸ்போமர்களில் உள்ள 'டப் சார்ஜர்'களை பரிசோதிக்கவுள்ளனர். டப் சார்ஜர் என்ற பகுதியே ட்ரான்ஸ்போமர்களில் மின்சாரத்தின் அளவுகளை பேணும் கருவியாகும். மின்சாரசபை நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் முக்கிய கருவியில் ஏற்பட்ட கோளாறே வெடிப்புக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

புத்தளம் ஹெலன்டாவி தனியார் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 100 மெகாவட்ஸ் மின்சாரத்தையும், எம்பிலிப்பிட்டிய அனல்மின்நிலையத்திலிருந்து 100 மெகாவட்ஸ் மின்சாரத்தையும், மாத்தறை ஏஸ் தனியார் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 60 மெகாவட்ஸ் மின்சாரத்தையும் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

0 Responses to மின்சாரத் தடை குறித்து ஆராய்வதற்காக ஜேர்மன்- ஜப்பான் நிபுணர் குழு இலங்கை வருகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com