Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெருந்தொகையான ஆயுதங்களுடன் தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் பலதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுவருகின்றபோதும் விமானத்தில் உள்ள ஆயுதங்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று தாய்லாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவிலிருந்து வந்த .டபிள்யூ.ஜி. 732 என்ற பதிவிலக்கம் கொண்ட ரஷ்ய தயாரிப்பு விமானம் தாய்லாந்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியுள்ளது. அப்போது, விமானத்தில் என்ன உள்ளன என்று தாய்லாந்து அதிகாரிகள் விசாரித்தபோது, விமானத்திற்குரிய உதிரிப்பாகங்கள் அதிலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த தாய்லாந்து அதிகாரிகள் விமானத்தை சோதனையிட்டபோது பெருந்தொகையான ஆயுதங்கள் விமானத்தினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் விமானம் எங்கு செல்வதாக கேட்கப்பட்டபோது சிறிலங்காவுக்கு செல்வதாக விமான ஓட்டியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான ஓட்டி சிறிலங்காவுக்கு செல்வதாக கூறியுள்ளபோதும் விமானத்தில் இறுதி தரையிங்கு தளம் சிறிலங்காவா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தாம் இறுதியாக தரையிறங்கவுள்ள இடத்தின் பெயரை மறைப்பதற்காக சிறிலங்காவுக்கு செல்வதாக விமான ஓட்டி பொய் கூறியிருக்கலாம் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த விமானம் ஆயுதங்களுடன் தாய்லாந்துக்கு வருவதாக முன்னமே தாய்லாந்து புலனாய்வு பிரிவினருக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் தகவல் கொடுத்திருந்ததாகவும் நேற்று சனிக்கிழமை விமானம் கைப்பற்றவுடன் இது குறித்து அமெரிக்காவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் அறிவுறுத்தலை அடுத்தே விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.

விமானத்திலிருந்த ஐந்து பேரும் தாய்லாந்து நாட்டினுள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்திவந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் நாளை திங்கட்கிழமை தாய்லாந்து நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலுக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரிக்கபடுவர் என்று தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, கைப்பற்றப்பட்டுள்ள விமானம் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பினர் தெரிவிக்கையில் -

வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் எந்த நடவடிக்கையையும் சிறிலங்கா மேற்கொள்ளவில்லை என்றும் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் சிறிலங்காவினுள் இவ்வளவு தொகை ஆயுதங்களை சட்டவிரோதமாக கொண்டுவருவது சாத்தியமற்ற செயல் என்றும் இது விடயமாக தாய்லாந்தில் உள்ள சிறிலங்கா தூதுரகத்தின் ஊடக தாய்லாந்து அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசிடம் பெறப்படவுள்ள இந்த விமானம் மற்றும் ஆயுத விடயங்கள் தொடர்பான தகவல்கள் நாளை திங்களன்று தமக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானம்: மர்மம் தொடர்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com