Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பெரும்பான்மையின் சிங்கள மக்களின் வாக்குகள் இரு பிரதான வேட்பாளர்களாலும் பங்கு போடப்படும் நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் காரணியான சிறுபான்மையின மக்கள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஏறத்தாள 800,000 வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி மிக்கவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் பெரும்பாலான தமிழ் மக்கள் கட்சி வேறுபாடுகள் மறந்து அந்த வேட்பாளரை ஆதரிக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக சில தமிழ் கட்சிகள் அறிவித்துள்ள போதிலும் அந்த கட்சிகளின் உறுப்பினர்களால் கூட அந்த அறிவிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில தமிழ் கட்சிகளின் தலைமைகள் தமது அரசியல் இருப்பினையும் வேறு சில பொருளாதார ஒத்துழைப்புகளையும் நம்பி நிபந்தனையற்ற ஆதரவை மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளமை குறித்து அந்த கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர்.

தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்யத் தவறும் ஒரு அரசாங்கத்துடன் எந்த விதமான நிபந்தனைகளுமின்றி இணைந்து கொள்ளும் கட்சி தலைமைகள் மீது உறுப்பினர்கள் வெறுப்படைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுபான்மை மக்களுக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்த எதிர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன் போன்றவர்கள் மீதும் சிறுபான்மையின மக்கள் வெறுப்புற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை முன்வைத்து பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை அவர் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதியாக தமிழ் வேட்பாளரால் தெரிவாக முயடிhவிட்டாலும் தமிழ் மக்களின் அபிலாசைகள் எவை என்பதை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்கான வாய்பாக இந்த தேர்தலை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் தாயகக் கோட்பாடு மற்றும் சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தும் ஒரு வேட்பாளர் களமிறக்கப்பட்டு அவருக்கு கணிசமான ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அனைத்துலக அரசங்கில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை சிறந்த முறையில் வெளிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகத் தெளிவான பரப்புரை உத்திகள் மற்றும் அணுகு முறைகள் மூலம் பொது வேட்பாளருக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக் கொள்ளும் ஏது நிலைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது - வெளிநாட்டு ஆய்வு நிறுவனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com