Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முகாம்களிலிருந்து மக்களை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ள அனைத்துலக மன்னிப்புச் சபை, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் நிபந்தனையற்ற முறையில் நிரந்தரமாக விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

1,20,000 மக்களை விடுவிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தபடி அதனை நிபந்தனைகள் அற்ற முறையில் நிறைவேற்ற வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபையின் இலங்கைக்கான நிபுணர் ஜோலாண்டா போஸ்ரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான சுயமுடிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் மன்னிப்புச் சபை இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பின்படி; வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் அம்முகாம்களில் தங்கவோ, வேறு வசிப்பிடங்களைத் தேடவோ அல்லது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவோ அவர்களது சுயவிருப்பின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்குரிய தெரிவுச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் முகாம்களை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ள மக்கள் மீது நிர்ப்பந்தங்கள் விதிக்கப்படுவதான தகவல்கள் எமக்குக்கு கிடைத்துள்ளன. 15 நாட்களுக்குள் மீண்டும் முகாம்களுக்கு திரும்புமாறு மக்கள் பணிக்கப்பட்டிருப்பதாக செய்தித்தாள்கள் மூலம் அறிய வந்திருக்கின்றது.

விடுவிக்கப்பட்ட மக்கள் விசாரணைகளுக்கும், பின்னர் கைதுகளுக்கும் உட்படுத்தப்படுதலாகாது. இடம்பெயர்ந்த மக்கள் நாட்டின் எப்பகுதிகளுக்குச் சென்றாலும் அவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா "மாணிக் பண்ணையிலிருந்து" விடுவிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்கள், எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் "தெருவில் இறக்கிவிடப்பட்ட சம்பவம்" தொடர்பாக தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலைச் சுட்டிக்காட்டிய மன்னிப்புச் சபை, விடுவிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குறித்து அதீத அக்கறை செலுத்தப்படவேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

முகாம்களிலுள்ள மக்களை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று முகாம் மக்களுக்கும் சுதந்திர நடமாட்டத்திற்கான அனுமதி வழங்கப்படுமா என்பதில் தொடர்ந்தும் தெளிவின்மையே நிலவுகின்றது.

சொந்த இடங்களுக்குத் திரும்பவுள்ள மக்கள்; தமது எதிர்காலம் தொடர்பான திட்டமிடலுக்கு ஏதுவான வகையில், அவ்விடங்களின் வாழ்தலுக்கு ஏதுவான நிலைமைகள் குறித்து தெளிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

அவர்களுடைய அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் மற்றும் காணமற் போன குடும்ப உறுப்பினர்களைத் தேடுவதற்குரிய நடைமுறை பற்றிய தகவல் அறிவுறுத்தல்கள் உரிய முறையில் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Responses to நிரந்தரமாக முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்படவேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com