Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசின் ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டு நிபுணர்களால் நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பொன்றின் முதற்கட்ட முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 53 வீத வாக்குகளைப் பெறுவார் என்றும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 45 வீத வாக்குகளையே பெறுவார் என்றும் வடக்கு கிழக்கில் 75 சதவீத ஆதரவை பொன்சேகா பெற்றுக்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் "இருதின" சிங்கள வார ஏடு இந்தத் தகவலைத் வெளியிட்டிருக்கிறது.

அப்பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் விவரம் வருமாறு:-

அரசினால் கோடிக் கணக்கில் செலவழிக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களால் இக்கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இதன் விசேட அம்சமாகும். வாரந்தோறும் இவ்விதமாக மேற்கொள்ளப்படவுள்ள கருத்துக் கணிப்புகளின் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்விதம் மேற்கொள்ளப்பட்ட முதலாம் கட்ட கருத்துக் கணிப்பீட்டுக்கு அமைய, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 53 சதவீதமான வாக்குகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 45 சதவீதமான வாக்குகளும் கிட்டியுள்ளதாக "இருதின" பத்திரிகை தகவல் கூறுகின்றது.

வடக்கு - கிழக்கு உள்ளடங்கும் 25 ஆயிரம் பேர் மத்தியில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பில் பங்கு பற்றிய வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களில் 75 சதவீதமானோரும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் பெருமளவிலானோரும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் மேற்படிப் பத்திரிகைத் தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜ பக்ஷவுக்குப் பெரிதும் சாதகமாக அமைந்திருந்த தெற்கின், அம்பாந் தோட்டை, மாத்தறை, காலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவு சரிக்குச் சரியென்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாகவும் மேற்படி கணிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றினுள்ளும் காலி மாவட்டத்தில் ஏறத்தாழ 5 வீதமளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா முன் னணி வகிப்பாதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இவற்றுக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் ஜெனரல் சரத் பொன் சேகாவே வெற்றிவாய்ப்பில் முன்னணியில் உள்ளார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to வடக்கு - கிழக்கில் பொன்சேகாவுக்கு 75 சதவீத ஆதரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com