Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரசுக்கு எதிராக போர் நடத்தப்போவதாக அறிவித்துள்ள புதிய ஆயுதக்குழு தொடர்பான செய்தி குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தடுப்பு முகாம்களிலுள்ள மக்களை விடுவிக்காமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கவேண்டிய தேவையிருப்பதாகப் பன்னாட்டுச் சமூகத்துக்குக் காட்டுவதோடு தனது செயற்பாட்டை நியாயப்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு தந்திர நாடகமே இதுவென்றும் -

தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவினை ஏற்படுத்தும் நோக்கோடு இவ்வாறான ஓர் அமைப்பை இரண்டு சமூகத்தினரும் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை தளமாக கொண்டு இயக்குவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிடுகிறதென்றும் -

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கிருக்கும் செல்வாக்கைச் சீர்குலைத்து அவ்வமைப்பை முற்றாக ஒழிக்கும் ஒரு நடவடிக்கையாகவும், விடுதலைப்புலிகளின் பின்புலத்தோடு தொடங்கியிருக்கும் மக்கள் கட்டமைப்புக்களையும் அவற்றின் அரசியல்வழிப் போராட்டங்களையும் பலமிழக்கச் செய்யும் நோக்கோடும், புலம்பெயர்ந்த மக்களின் கணிசமான நிதியை இப்புதிய அமைப்புக்கெனத் திரட்டி இலாபமடையும் ஒரு நோக்கமாகவுமிருக்கலாமென்றும் சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முன்னைநாள் .என்.டி.எல்.எவ். அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டு ஓர் ஆயுத இயக்கத்தை மீள உருவாக்கி இலங்கையில் செயற்பட வைக்க இந்திய உளவுத்துறை மும்முரமாக இயங்கிவரும்நிலையில், அதை எதிர்கொள்ளும் விதமாக சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கும் ஓர் இயக்கமே இப்புதிய பி.எல்.. அமைப்பு எனவும், இந்தியாவில் போராடும் மாவோயிச அமைப்புக்களுக்கும் தமக்கும் தொடர்பிருப்பதாக இப்புதிய அமைப்பு வெளிப்படையாக அறிவித்துள்ளமை அச்செயற்றிட்டத்தில் ஓரங்கமே எனவும் மேலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இப்படியோர் அமைப்பை உருவாக்கிச் செயற்பட வைத்து, ஒருகட்டத்தில் அவ்வமைப்பையே தமிழரின் பிரதிநிதிகளாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, தாம் விரும்பும் தீர்வையே இவ்வமைப்பு மூலமாக தமிழர் மேல் திணிக்க சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் நாடகம் இதுவாக இருக்கலாமென்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

0 Responses to இலங்கையில் புதிய ஆயுதக்குழு: பின்னணி என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com