Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைப்பதற்கு சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச உதவிசெய்தார் என்று கூறியுள்ளார் சிறிலங்கா அரசதலைவரின் செயலர் லலித் வீரதுங்க. இந்தியாவின் தேர்தல் இடம்பெற்ற சமயத்தில் அந்நாட்டு அரசினால் சிறிலங்காவின் மீது பிரயோகிகப்பட்ட அழுத்தத்தை மகிந்த ராஜபக்ச லாவகமாக முறியடித்தார் என்றும் சிறிலங்கா அரசதலைவரை புகழ்ந்திருக்கிறார் அவரது செயலர்.

இந்தியாவுடனான சிறிலங்காவின் புதிய அணுகுமுறை மற்றும் பல விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசதலைவரின் செயலர் வழங்கிய செவ்வியொன்றில் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு:-

இந்தியாவை கையாண்ட விதம்

சிறிலங்காவின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுடனான அணுகுமுறைக்கும் எமது நாட்டின் வெளிவிவகாரக்கொள்கைக்கும் மகிந்த ராஜபக்சவினால் புதிய உருவம் கொடுக்கப்பட்டது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பிரச்சினையில் இந்தியா தலையிடும்போதெல்லாம் சிறிலங்காவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்தியாவுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை. இதுவே, கடந்த 30 வருடங்களாக சிறிலங்கா பிரச்சினையில் இந்தியாவை சிக்கலான நிலைக்கு உட்படுத்தியது. இந்தியாவும் சிறிலங்காவை பிழையாக புரிந்துகொண்டது.

இதனை மாற்றியமைத்து, இந்தியாவுக்கு தெளிவான புரிதல்களை எற்படுத்தி, எமது நடவடிக்கைகள் குறித்த உடன் தகவல்பரிமாற்றங்களை இந்தியாவுடன் மேற்கொள்வதன் மூலம் இதற்கு தீர்வு காண மகிந்த தீர்மானித்தார். இதன்பிரகாரம், இரு நாடுகளின் மத்தியிலும் இந்த விடயத்தினை கையாளுவதற்கு உயர்மட்டக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இது மகிந்தவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏற்பாடு ஆகும்.

கடந்த 2007 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் எமது முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. அதன்பின்னர் தொடர்ச்சியாக சிறிலங்காவிலும் இந்தியாவிலும் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றன. இருநாடுகளுக்கும் இடையில் தீர்க்கமுடியாத சில பிரச்சினைகள் காணப்படுவதாக எமது குழுக்குள் இனம்காணுகையில், நாம் இருதரப்பினரும் நாட்டு தலைவர்களிடம் அந்த விடயங்களை தீர்ப்பதற்கான பொறுப்பினை கையளித்தோம். இந்திய தரப்பில் மன்மோகன் சிங்கும் சிறிலங்காவில் மகிந்த ராஜபக்சவும் அந்த சிக்கல்களை பேசி தீர்த்துக்கொண்டார்கள். இந்த செயன்முறையானது மிகத்திறமையான பயனுள்ள பெறுபேற்றை பெற்றுத்தந்தது.

இருநாடுகளுக்கும் இடையில் கடந்த கால வரலாற்றினை எடுத்துப்பார்த்தால், தமக்கு ஏதோவொன்றை கூறிவிட்டு சிறிலங்கா வேறொன்றை செய்வதாக இந்தியா எண்ணியிருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையில் ஒரு வித சந்தேகங்கள் வலுப்பெற்றன. 1970 களை பார்த்தால் அப்போது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான உறவுநிலை இருந்துவந்தது. இந்திரா காந்தியினதும் பண்டாரநாயக்கவினதும் பிள்ளைகள் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இருநாடுகளின் தலைவர்களின் குடும்பங்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்து வந்தது. ஆனால், 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர், சில அரசியல்வாதிகள் வெளியிட்ட சில கருத்துக்களால் இருநாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் காணப்பட்ட உறவுநிலை முறிய ஆரம்பித்தது. அதனைதொடர்ந்து, இருநாடுகளின் உறவும் பாதிப்படைந்தது.

இதுபோன்ற பல சம்பவங்களை 40 வருடங்களாக நாடாளமன்ற உறுப்பினராக பதவி வகித்து அவதானித்து வந்த மகிந்த, இந்தியாவுடன் எவ்வாறான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். இந்தியாவை எவ்வாறு கையாளவேண்டும் என்றும் மிகத்தெளிவாக தெரிந்துவைத்திருந்தார். அதனடிப்படையில், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் கடந்த நான்கு வருடங்களில் இருநாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவை பேணி, மிகப்பெரிய பிரச்சினைகளையும் சமூகமாக தீர்ப்பதற்கு உதவியது.

விடுதலைப்புலிகளை கையாண்ட விதம்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வரும்போது விடுதலைப்புலிகளின் பலம் உச்சத்தில் இருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்பலம் மிக மிக வலுவாக காணப்பட்டது. அப்போதெல்லாம் அவர்கள் தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு மற்றும் ஆயுதக்கொள்வனவுகள் மூலம் தம்மை பலப்படுப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்குரிய பல வளங்கள் சிறிலங்காவின் சுங்கத்திணைக்களத்தின் ஊடாகவே சென்றன. யாழ்ப்பாணத்தில் நின்ற சிப்பாய்கள் ரவைகளற்ற துப்பாக்கிகளை வைத்திருக்கவேண்டிய நிலைக்கு, கொழும்பின் ஊடாக அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்திவைத்திருந்தார்கள்.

இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு தேசிய பாதுகாப்பு சபை ஊடாக பல மாற்றங்களை மேற்கொள்வதற்கு மகிந்த தீர்மானித்தார். இராணுவம், கடற்படை, வான்படை, காவல்துறை ஆகியவற்றுக்கு மேலதிகமாக மக்கள் பாதுகாப்பு படையையும் உருவாக்கினார். இவற்றைவிட முக்கியமாக, புலனாய்வு பிரிவு. விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு அப்போது அரச புலனாய்வு பிரிவைவிட பலம்வாய்ந்ததாக காணப்பட்டது. ஆகவே, விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவைவிட பலம்வாய்ந்த அரச புலனாய்வு கட்டமைப்பை உருவாக்குவதற்கு மகிந்த தீர்மானித்தார்.

சகல திட்டங்களையும் ஒருங்கமைத்து அவற்றுக்குரிய உத்தரவுகளை வழங்கி நேர்சீரான பாதையில் படைகளை கொண்டுநடத்தியவர் மகிந்த ராஜபக்ச. அவரது அட்சிக்காலத்தில்தான் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் தவறாமல் கூடியது. போர்நடவடிக்கைகள் குறித்த முழுமையான - விரிவான - கலந்தாலோசனைகள் அங்கு இடம்பெற்றன். உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஒன்றை நான் தெளிவாக கூற விரும்புகிறேன். முதலில் கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றவேண்டும் என்று முடிவெடுத்தவர் அரசதலைவர் மகிந்த ஆவார். அவர்தான் அந்த திட்டத்தை முன்வைத்து அதற்கேற்ப களப்பணிகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.

சர்வதேச சமூகத்தை கையாண்ட விதம்

சிறிலங்காவில் இவ்வாறான ஒரு முழுமையான நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பிக்கும்போது சர்வதேசத்திடமிருந்து வந்த அழுத்தங்களை சமாளிக்கவேண்டியது அரசதலைவருக்கான அடுத்த சவாலாக காணப்பட்டது. விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகவும் பலமாக உள்ளனர். கடந்த 30 வருடங்களாக வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் மிகப்பலமான அமைப்பாக உருவெடுத்துள்ளனர். அவர்களின் வளர்ச்சி எனப்படுவது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. அவர்களது பிரச்சார தேர்ச்சி மிகவும் உச்சத்தில் காணப்படுகிறது. பலமான செய்தி ஊடகங்கள். குறிப்பாக வானொலிகள், தொலைக்காட்சிகள் என அவர்கள் மிகப்பலமான ஒரு கட்டுமானத்தை வெளிநாடுகளில் பேணிவருகிறார்கள். இவற்றை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு கடந்த காலங்களில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் இந்த பலமான கட்டமைப்பு மூலம் சிறிலங்கா என்பது படுபயங்கரமான நாடு என்று வெளிநாடுகள், வெளிநாட்டு அமைப்புகள் ஆகியவை நம்பவைக்கப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் இந்த கட்டமைப்புக்கள் பரப்பியுள்ள பிழையான பிரச்சாரத்தின் மூலம் பிரி்ட்டன் முதல் ஏன் இந்தியா வரை பிழையாக நம்பவைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியா தனது தவறை பின்னர் உணர்ந்துகொண்டது.

2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது மகிந்த சிந்தனை என்று மகிந்த ராஜபக்சவினால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. அதில் அவர், இந்த நாட்டில் அமைதியை உருவாக்குவேன் என்று கூறியிருந்தார். அதை நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நாட்டில் அமைதியை உருவாக்குவதற்கு அவர் இரண்டு வழிகளை அவர் பின்பற்றியிருக்கலாம். ஒன்று விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தியிருக்கலாம். மற்றையது, இராணுவ ரீதியில் அவர்களை தோற்கடித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தலாம். விடுதலைப்புலிகளுடன் மகிந்த பேச்சு நடத்தியிருந்தால் இரண்டு மூன்று ஆண்டுகள் பேச்சு நடந்திருக்கும். அந்த காலப்பகுதியில், விடுதலைப்புலிகள் தம்மை பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அமைதி நாட்டில் திரும்பியிருக்காது. 20 வருடங்களுக்கு முன்னர், அரச பணிக்கு நான் சென்றபோது, உயிருடன் திரும்பி வருவேனா என்பது எனக்கு தெரியாது. அவ்வளவுக்கு நாட்டில் வன்முறைகள் மலிந்திருந்தது. ஆனால், இன்று அந்த நிலை இல்லை. அதற்கு காரணம் மகிந்த மேற்கொண்ட உறுதியான முடிவு.

தனது முடிவுக்கு முன்னால் தடையாக இருந்த சர்வதேச அழுத்தத்தை மகிந்த எவ்வாறு முறியடித்தார் என்பதற்கு நான் இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடுகிறேன். கடந்த மே மாத நடுப்பகுதியில் நடைபெறவிருந்த தமிழ்நாட்டு தேர்தலினால், இந்திய மத்திய அரசு மிகவும் சிக்கலுக்கு உள்ளானது. தமிழர்களின் ஆதிக்கம் உள்ள தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் தமக்கு பாதகமாக அமையுமோ என்று இந்திய அரசு அஞ்சியது. சிறிலங்காவுக்க தனது உயர்மட்டக்குழுவை அனுப்பியது. இங்கு வந்த அவர்கள், "தயவுசெய்து போரை நிறுத்துங்கள்" - என்றார்கள். ஆனால், அரசதலைவரோ அதற்கு மறுத்துவிட்டார். "இல்லை. என்னால் முடியாது. முப்பது வருடங்களுக்கு பின்னர் எனது நாட்டை மீட்பதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டேன்" - என்றார். தமது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களையெல்லாம் இந்திய தரப்பினர் விளக்கினார்கள். "காங்கரஸ் கட்சி தமிழ்நாட்டில் வெற்றிபெறுவதற்கு வேறு என்ன வகையில் நான் உதவமுடியும்" - என்று மகிந்த கேட்டார். "அப்படியானால், கனரக ஆயுத பாவனையையாவது நிறுத்துங்கள்" - என்று இந்திய குழுவினர் கேட்டார்கள். அதற்கு உடனடியாகவே சம்மதித்த மகிந்த, அதற்கான அறிவிப்பையும் விடுத்தார். இந்திய தரப்பினர் திருப்தியோடு நாடு திரும்பினார்கள்.

இன்னொரு சம்பவத்தையும் நான் குறிப்பிடுகிறேன். கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி பிரிட்டன் வெளிவிவகார செயலர் டேவிட் மிலபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கூஷ்னர் ஆகியோர் சிறிலங்காவுக்கு வந்தார்கள். "உடனடியாக இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்துங்கள்" - என்றார்கள். அவர்களுக்கு அரசதலைவர் கொடுத்த பதிலால் நான் உண்மையிலேயே பூரிப்படைந்தேன். அந்த சந்திப்பில் நானும் இருந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். "சிறிலங்கா எந்த நாட்டினதும் காலனித்துவ தேசம் அல்ல. சிறிலங்கா எனப்படுவது இறைமையும் ஆட்புலஒருமைப்பாடும் உடைய சுதந்திர குடியரசு. எமக்கென ஒரு கெளரவம் இருக்கிறது. எமக்கென பெருமை இருக்கிறது. எமது நாட்டுக்கு ஒரு முழுமை இருக்கிறது. இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு இந்த நாட்டு மக்கள் என்னை தெரிவுசெய்திருக்கிறார்கள். அவர்களையும் இந்த நாட்டையும் காப்பாற்றவேண்டியது எனது பொறுப்பு. இங்கு நடக்கும் சம்பவங்கள் உங்களுக்கு வெறும் செய்தி. ஆனால், எமக்கு மரணவேதனையும் தீராத துயரும் ஆகும். முப்பது வருடங்களுக்கு பிறகு கண்முன்னே தெரியும் விடிவையும் வெற்றியையும் என்னால் கைவிடமுடியாது" - என்று அடித்துக்கூறினார் மகிந்த.

இப்படியாகவே அரசதலைவர் மகிந்த சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை முறியடித்து நாட்டுக்கு விடுதலையை பெற்றுத்தந்தார். அதனை நாங்கள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

சரத் பொன்சேகா விவகாரம்

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா போரின் வெற்றியில் பங்களித்திருக்கிறார். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், தானும் பங்களித்திருக்கிறார் என்ற உண்மையை கூறாமல் தான்தான் பங்களித்திருக்கிறார் என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கடற்படை, வான்படை, காவல்துறை ஏன் நீங்கள் நான் எல்லோரும்தான் இந்த போருக்கு பங்களித்திருக்கிறோம். முப்பது வருடங்களாக இந்த போரை பொறுத்திருக்கிறோம் என்றால் அது வெற்றிகொள்ளப்பட்டபோது, அதில் எமக்கும் பங்கிருக்கிறது. போரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.

ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அதிகாரி பிலிப் அல்ஸ்டனும் இவ்வளவு காலமும் மிகுந்த புரிந்துணர்வுடன் சிறிலங்கா விடயத்தில் மெளனமாக இருந்தார்கள். ஆனால், பொறுப்புள்ள அதிகாரியின் பொறுப்பற்ற பேச்சினால், பிலிப் அல்ஸ்டன் கடிதங்களை அனுப்ப தொடங்கியுள்ளார். அரசியலிலோ வேறு எந்த துறையிலோ இருப்பவர்கள் முதலில் கருத்து வெளியிடும்போது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். தாங்கள் வெளியிடும் கருத்தினால் இந்த நாட்டை எங்கே இழுத்து செல்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சிறிலங்காவின் வெளிவிவகார கொள்கை

லிபியாவுடன் சிறிலங்கா நெருக்கமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஏன் லிபியாவுடன் அமெரிக்கா நெருக்கமான உறவை பேணவில்லையா? ஈரானுடன் சிறிலங்கா நெருக்கமாக உள்ளது என்கிறார்கள். கச்சாய் எண்ணையின் பரல் ஒன்று 147 டொலர்களாக சென்று 200 டொலர்களாகவும் அதிகரிக்கும் நிலை காணப்பட்டபோது, பொறுப்புள்ள அரசு தலைவராக ஈரானுடன் பேசி, நாட்டுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மகிந்த நடவடிக்கை எடுத்தார்.

தற்போது, ஜி.எஸ்.பி. பிளஸ் என்ற வர்த்தக வரி சலுகையை சிறிலங்காவுக்கு வழங்கமுடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் அடம்பிடிக்கிறது. அதனை வழங்குவதாயின் மனித உரிமைகள் காப்பு உட்பட எத்தனையோ விடயங்களை நிபந்தனைகளாக முன்வைக்கிறது. ஜி.எஸ்.பி.பிளஸ் பெற்றுக்கொள்ளும் மற்றைய நாடுகளிடமெல்லம் இவ்வாறான நிபந்தனைகள் முன்வைக்கப்படவில்லை. ஆனால், சிறிலங்காவுடன் மட்டும் அவர்கள் அடம்பிடித்துக்கொண்டுநிற்கிறார்கள். இந்த வரிசலுகையை தடுப்பதன் மூலம் அவர்கள் யாரை தண்டிக்கப்போகிறார்கள். ஆட்சியாளர்களையா? இல்லை. நாட்டு மக்களை.

இதனால்தான், பொதுநலவாய மாநாட்டில் அரசதலைவர் அதிபர் மகிந்த, பாகிஸ்தானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பொருளாதார தடை யோசனையை கண்டித்தார். அந்த தடை மூலம் பாதிக்கப்படப்போகிறவர்கள் பொதுமக்களே தவிர ஆட்சியாளர்கள் அல்ல என்று கூறினார். ஆளும் அரசுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமாயின் அவர்களை சர்வதேச நீதிமன்றமோ சர்வதேச விசாரணைகள் ஆணைக்குழுவோ எங்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்லட்டும். ஆனால், நாட்டு மக்களக்கு தீங்கு இழைக்காதீர்கள்.

ஐக்கிய நாடுகள் சபை இதுவரை சிறிலங்காவுக்கு எதிராக எந்த தடையையும் கொண்டுவரவில்லை. .நா. பாதுகாப்பு சபை மிகுந்த புரிந்துணர்வை கொண்டுள்ளது. அதில் அங்கம் வகிக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சிறிலங்காவின் நிலைப்பாட்டினை நன்கு தெரிந்துகொண்டுள்ளன.

மியான்மாருடன் சிறிலங்கா நெருக்கமாக இருப்பது ஏன் என்கிறார்கள். உலகிலேயே தேரவாத பெளத்த மதம் உள்ள நாடுகளில் ஒன்று தாய்லாந்து. மற்றையது மியான்மார். அந்நாட்டுடள் எமக்கு கலாசார உறவுகள் உள்ளன. இந்தியாவுடன் அப்படியான கலாச்சார உறவுகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு மகிந்த உதவினார்: பின்னணி தகவல்களை விளக்குகிறார் அவரது செயலர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com