போர் மூண்டவேளையில் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த இவர்கள், தமது மகன் ஆட்சிக்குட்பட்டிருந்த பெருநிலப்பரப்பு குறுகிவருவதை இட்டும் அவர் எதிர்காலம் குறித்தும் பெரிதும் கவலையடைந்தனர். இறுதியாக கடும் போர் மூளமுன்னர், பிள்ளையிடமும் தனது பேரப்பிள்ளைகளிடமும் இருந்து விடைபெற்றனர் இவர்கள். இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேறுவது என்ற தலைவரின் முடிவு மாறப்போவது இல்லை என்று அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். இதுவே தாம் பேரப்பிள்ளைகளை கடைசியாகப் பார்க்கும் தருணமாகக் கூட இருக்கலாம் என அவர்கள் எண்ணியிருப்பார்கள், முற்றுகையில் பிள்ளைகளை விட்டுவிட்டு, தமது பாதுகாப்பிற்கு தப்பிச் செல்வதா என்ற ஏக்கத்துடன் அவர்கள் சென்றார்கள் என அறியப்படுகிறது.
இறுதியாக மே 18 இராணுவம் முற்று முழுதாக வெள்ளமுள்ளிவாய்க்காலைக் கைப்பற்றியபோது, மக்களோடு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று தடுப்பு முகாமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரையும் அடையாளம் கண்ட சிலர், இராணுவத்திடம் இது குறித்து தகவல்கொடுக்க முற்பட்டனர். இருப்பினும் மனிதநேயம் கொண்டோர் சிலரால் அது தடுக்கப்பட்டது. இறுதியில் தாமாகவே சென்று மிகவும் துணிச்சலாகவும் நேர்மையாகவும், தான் தான் பிரபாகரனின் தந்தை என இராணுவத்தினரிடம் இவர் தெரிவித்தார்.
இராணுவம் இவ் இருவருடன் திருமதி ஏரம்புவையும் கைதுசெய்து கொழும்பு சென்றது. இலங்கை அரசு கூறுவதுபோல இவர்கள் இருவரும் தாம் இராணுவப் பாதுகாப்பில் இருக்கப் போகிறோம் என எச் சந்தர்ப்பத்திலும் கோரவில்லை. தொடர் இடப்பெயர்வு, மன உளைச்சல், மற்றும் இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டு, வெளியுலகில் இருந்து பிரித்துவைத்த காரணத்தால் அவர்களுக்கு இருந்த நோய் இன்னும் அதிகமானது. இலங்கை அரசோ இவர்கள் மீது துளியளவேனும் இரக்கம் காட்டவில்லை. ஒரு பயங்கரவாதிகளைப் போல அதி உச்ச பாதுகாப்புக் கொண்ட இராணுவ முகாமில் இவர்களை அடைத்து துன்புறுத்தியது.
உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், ஏன் மனிதநேய அமைப்பு பிரதிநிதிகள் அல்லது அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் கூட இவர்களைப் பார்க்க இலங்கை அரசு அனுமதி மறுத்தது. இந்தவேளையில் இலங்கை தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்போது சரத்பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆனார். இது பேரிடியாக இருந்தது மகிந்தவுக்கு. அப்போது சரத் தன் பிரச்சாரத்தில், பிரபாகரனின் தாய் தந்தையரிடம் நான் பணம் வாங்கி என்றாலும் தேர்தலில் வெல்வேன் எனக் கூறினார். இவர் கூற்று சற்று வினோதமானது. அதற்கு அரசியல் நாகரீகம் கூடத் தெரியாத மகிந்த, மிரண்டு எழுந்து சரத்தை சாடினார். நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக் கூறினார்.
இந்தவேளையில் வேலுப்பிள்ளை மீது மகிந்த பார்வை பட்டது. அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் சரளமாக சிங்களம் பேசுவார் என அறிந்த மகிந்தவும், பசில் ராஜபக்ஷவும் இவரை தேர்தலில் களமிறக்க முயன்றனர். தனது பிள்ளையான பிரபாகரனை தூற்றியும், மகிந்தவை ஆதரித்தும் மேடைகளில் பேசினால் அவரை விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரை வயதானவர் என்று கூடப்பாராமல் துன்புறுத்தியுள்ளது இலங்கை அரசு. இதன் காரணமாக மேலும் நோய்வாய்பட்டுள்ளார் வேலுப்பிள்ளை அவர்கள்.
இந்நிலையில் மருத்துவ உதவிகளையும் நிறுத்தி அவரை அடிபணிய முனைந்திருக்கிறது மகிந்த அரசு.
நோய்வாய்பட்டவருக்கு தகுந்த மருத்துவ உதவிகளைக் கொடுக்கவில்லை. பல நாட்களாக மருத்துவ உதவி இன்றி தவித்த வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் இறுதி மூச்சு, ஜனவரி 6 புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் நின்றது.
இங்கு இவர் சுவாசிக்க மறக்கவில்லை, அவர் சுவாசத்தை நிறுத்தியுள்ளது இலங்கை அரசு, அவர் மூச்சுக்காற்றை வேண்டுமென்றே பறித்தது இலங்கை அரசு. இது ஒரு அப்பட்டமான படுகொலை என்பதில் எச் சந்தேகமும் இல்லை.



0 Responses to மகிந்தவை ஆதரித்துப் பேசுமாறு வேலுப்பிள்ளை துன்புறுத்தப்பட்டாரா?