அவரது அறிக்கையின் முழுமையான வடிவம் வருமாறு:
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இராணுவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமான செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தோம். தமிழ்மக்களின் உரிமைக்காகப் போராடிய ஒரு விடுதலை அமைப்பின் தலைவரை ஈன்றெடுத்தவர் என்ற அடிப்படையில் அன்னாரின் மறைவு தமிழ் மக்கள் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் 60 வயதுக்கு மேற்பட்டோரைத் தடுப்பு முகாம்களிலிருந்து விடுதலை செய்தது. அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை 85 வயதை தாண்டியவர். இருந்தும் அரசு பிரபாகரனின் பெற்றோர்களான திருவேங்கடம் வேலுப்பிள்ளையையும் அவரது துணைவியாரையும் தொடர்ந்தும் தனது பிடியிலேயே வைத்திருந்தது. இவர்களை விடுவித்து இவர்களது பிள்ளைகளுடன் இணைந்துவாழ அனுமதித்திருந்தால் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு இந்தத் துர்மரணம் நேர்ந்திருக்காது என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
ஆனால் இன்று பிரபாகரனின் தந்தையார் மீது தமக்கு அக்கறை இருந்தது போல உலகுக்கு காட்டும் முகமாக அவரது பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க அரசு முன்வந்துள்ளது. கூடவே அன்னாரது துணைவியாரையும் விடுதலை செய்துள்ளது. இவற்றுக்கும் மேலாக அன்னாரது பூதவுடலை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கத்திடம் கையளித்தும் உள்ளது. இவையனைத்தும் அப்பட்டமான தேர்தல் சித்து விளையாட்டாகவே தமிழ் மக்களால் நோக்கப்படுகின்றது.
மரணங்களைக் கூட இலாபங்களாக அறுவடை செய்ய முயலும் இந்த அரசின் அணுகுமுறை பட்டவர்த்தனமாக வெளிப்படுகின்றது.
எவ்வாறெனினும் அன்னாரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to விடுதலை அமைப்பின் தலைவரை ஈன்றெடுத்தவர் வேலுப்பிள்ளை: சுரேஸ் பிரேமசந்திரன் அஞ்சலி