Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள இனவெறி அரசின் கொலைவெறியாட்டத்தால் ஈழ மண்ணில் படிந்த இரத்தக்கறை இன்னும் காயவில்லை என்பதால் நம் இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்ப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வழக்கம்போல இந்த ஆண்டும் தை பிறந்து விட்டது. பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. தமிழகமெங்கும் தமிழ் மக்கள் பொங்கல் விழாவைக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கென்று இருக்கிற ஒரே பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் விழாதான். அதிலும் கடந்த ஆண்டிலிருந்து தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் தமிழர்கள் கொண்டாட வேண்டியது இயல்பானதுதான்.

ஆனால், நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் லட்சக்கணக்கானோர் சிங்கள இராணுவ வதை முகாம்களில் அடைபட்டு சொல்லாணாத் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆண்டில் இதே நாள்களில்தான் முல்லைத் தீவுப் பகுதிகளில் எமது ஈழத் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமற்ற முறையில் கொத்துக்கொத்தாய்ப் படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு. சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், போராளிகளும், வெள்ளைக்கொடியேந்தி வந்த தலைவர்களும் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர். அந்த இரத்தக் கறை இன்னும் ஈழமண்ணில் காயவில்லை. இந்தக் கொடுமைகளைக் கண்டித்து சனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் உண்ணாநிலை அறப்போரை மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தினோம்.

அத்தகைய துக்கமும் துயரமும் நம் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில், இந்த ஆண்டில் கடந்த சனவரி 6ஆம் தேதி அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள இராணுவ முகாமில் திடீரெனக் காலமாகிவிட்டார்.

பல இலட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் சொந்த பந்தங்களை பலிகொடுத்து, துக்கத்தில் விழுந்து கிடக்கின்ற நிலையிலும், திரு. வேலுப்பிள்ளை அவர்களை இழந்து வாடும் நிலையிலும், நமது இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடுவதை தமிழக மக்கள் தவிர்க்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள், அவர்தம் குடும்பத்தினர் கட்டாயம் புத்தாடை அணிவது, பொங்கலிடுவது, விழாக் கொண்டாட்டங்களை நடத்துவது போன்றவற்றை தவிர்த்துத் துக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: நக்கீரன்

0 Responses to ஈழ மண்ணில் இரத்தக்கறை காயவில்லை! பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்ப்போம்!: திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com