Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு வீரத்தந்தையின் மறைவிற்காக உலகத் தமிழினம் மரியாதை செய்கின்றது. இவ்வாறு தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறிக்கை

தமிழர்களின் வீரத்தைச் சொல்லும் கதைகளில் பல இடங்களில் வீரத் தாய்மார்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கதைகளை நாங்கள் படித்துச் சுவைத்தபோது எமது மனங்களிலே வீரம் பற்றிய சிந்தனைகள் தோன்றி மறைந்தாலும் மறுபக்கத்தில் எங்களை அறியாமலேயே எமது கண்கள் கண்ணீரைச் சிந்தியதை நாம் அனுபவித்துள்ளோம். அவ்வாறான ஒரு மனநிலையில் தான் நமது ஈழத்தமிழினம் மட்டுமல்ல உலகத் தமிழினமே ஆழ்ந்து போயுள்ளது.

உலகம் போற்றும் ஒரு வீரத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை இந்த மண்ணுக்கும் தமிழர் படையாம் விடுதலைப் புலிகளுக்கும் ஈன்றளித்த வீரத்தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு உலகத்தமிழர்கள் அனைவரும் அவருக்காக கண்ணீர் வடிக்கும் அதே வேளையில் எழுந்து நின்று மரியாதை செய்கின்ற ஒரு காட்சியாகவும் நமக்குத் தெரிகின்றது. இந்த வேளையில் அந்த வீரத்தந்தையின் மறைவிற்காக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் அதன் தோழர்களும் தங்கள் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளரும் பேச்சாளருமான திரு கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தனது அலுவலகத்தை கொண்டுள்ள திரு கணேசலிங்கம் இயக்கத்தின் சர்வதேச ஊடகத் தொடர்பாளருடன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு எனறோ ஒரு நாள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அவரது இழப்பு என்பது நாங்கள் ஒரு நாளோ அன்றி இரண்டு நாட்களோ அவருக்காக கண்ணீர் வடித்து அஞ்சலி செய்கின்ற ஒரு மரணமாக நாம் கருத முடியாது. பல சவால்களை எதிர்கொண்டு விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பையும் தலைமை தாங்கி நடத்திச் சென்ற தலைவர் பிரபாகரன் அவர்களை தனது மகனாகக் கொண்ட வேலுப்பிள்ளை அவர்கள் ஒரு குடும்பத் தலைவனாகவும் இருந்த நாட்களில் அவரோடு சேர்ந்து வாழ்ந்து தனது புதல்வரின் போராட்ட முறைகளையும் அவர் அடைந்திருந்த அபார வளர்ச்சியையும் நேரடியாக கண்டு மகிழ்ந்தவர்.

பல்வேறு இடர்கள் நிறைந்த மறைவிட வாழ்க்கையின் துன்பங்களை தனது இறுதி நாட்களில் அனுபவித்திருந்தாலும் அந்த அனுபவித்திலே ஒரு மன ஆறுதலை அடைந்தவர் இந்த வீரத் தந்தை.

தனது புதல்வனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்தியாவில் தமக்கிருந்த சில வசதிகளையும் துறந்து வன்னிக்குச் சென்று அங்கு கஸ்டங்களை அனுபவித்தவர்கள் இந்த வீரப் பெற்றோர்கள்.

அதனால் அவர்கள் எங்கள் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார்கள். இதனால் அந்த வீரத்தந்தைக்கு நாம் மரியாதை செய்கின்றோம். அவரது இருப்பும் இறப்பும் நாம் என்றுமே மறந்து விடக்கூடியதல்ல

இவ்வாறு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

0 Responses to ஒரு வீரத்தந்தையின் மறைவிற்காக உலகத் தமிழினம் மரியாதை செய்கின்றது: உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com