Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் கூட்டமைப்பு ஆயுதப்போராட்டத்தை விரும்பியதில்லை. ஆனால், எமது இளைஞர்கள் தியாகத்தை நாங்கள் மதிக்கிறோம். தமிழ் மக்களின் விடுதலை போராட்டம் ஆயுதங்களுடன் ஆரம்பிக்கவுமில்லை. ஆயுதப்போராட்ட முடிவுடன் விடுதலைப்போராட்டம் முடிவடைய போவதுமில்லை என்று சூளுரைத்திரைக்கிறார் தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கிழக்கில் பிரசார செய்வதற்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பினர் நேற்று மட்டக்களப்பில் கட்சி உறுப்பினர்களை சந்தித்தனர். அங்கு பேசுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

தற்போதைய அரசதலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால் கிழக்கு மகாணம் முழுவதும் சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, தமிழர் தாயகம் பெரும்பான்மை மக்களிடம் பறிபோகும் நிலையை யாராலும் தடுக்கமுடியாமல் போகும். இந்தநிலை ஏற்படுவதை தடுப்பதற்கு சிறுபான்மை மக்கள் வரப்போகும் தேர்தலை பயன்படுத்தவேண்டும்.

தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களின் நலன்களை பிரதிபலிக்கக்கூடிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயற்படக்கூடிய காலம் கனிந்திருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் இல்லாமல் முஸ்லிம் மக்கள் இல்லை. முஸ்லிம் மக்கள் இல்லாம்ல் தமிழ் மக்கள் இல்லை என்ற யதார்த்தம் இரண்டு சமூகத்தினராலும் புரியப்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில் சிறுபான்மையின மக்கள் வாழக்கூடாது என்றும் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையும் வழங்கப்படக்கூடாது என்றும் கொள்கையை உடைய அரசதலைவர் மகிந்தவை இம்முறை தேர்தலில் வெற்றிபெற அனுமதிப்போமானால், அவரது அடுத்த ஆட்சிக்காலத்தில் - இன்னும் ஆறு வருடங்களில் - கிழக்கு மாகாணம் முற்று முழுதாக பெரும்பான்மையினத்தவர்களிடம் பறிபோய்விடும். இது நிச்சயமாக நடக்கும்.

அம்பாறை முதல் மட்டக்களப்புவரை சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டி மூன்று தடவைகள் மகிந்தவுடன் பேசினோம். அரசுக்கு ஆதரவை தாருங்கள். குடியேற்ற விவகாரத்தை பற்றி பிறகு பேசலாம் என்றார் அவர். இதனால்தான், எதிர்வரும் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் தீர்மானித்தோம். இம்முறை தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் பொன்சேகாவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம். எமக்கு அந்த சக்தி உள்ளது என்பதை சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக்கூறுவோம்.

என்று அவர் கூறினார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to தமிழீழ விடுதலை போராட்டம்: ஆயுத வழியில் ஆரம்பித்ததுமில்லை ஆயுதப்போராட்டம் முடிவுற்றதால் அது முடிவடையப்போவதுமில்லை: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com