Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனப்படுகொலை மற்றும் ஊடகப் படுகொலைக்கு எதிராக தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சென்றை தமிழ் ஊடக செய்தியாளர்கள் சங்கம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு:-

சிங்களஅரசின் தமிழின அழித்தொழிப்பு கொலைவெறிக்கு 34 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். (இவர்களில் சிங்கள செய்தியாளர்கள் மூவரும், முஸ்லிம் செய்தியாளர் ஒருவரும் ஆவார்.)

பல செய்தியாளர்கள், சிங்கள அரசால் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்கள் உயிருடன் உள்ளார்களா? என்பது தெரியவில்லை.

எண்ணற்ற செய்தியாளர்கள், சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளில் தலை மறைவாகி உள்ளார்கள்.

சிங்கள அரசால் பச்சைப் படுகொலை செய்யப்பட்டசண்டே லீடர்இதழின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க, ‘உதயன்பத்திரிகை செய்தியாளர் செல்வராசா ரவிவர்மன், ‘ஈழநாடுநாளிதழின் சின்னத்தம்பி, சிவமகராசன், ‘யாழ் தினக்குரல்சுப்ரமணியம் இராமச்சந்திரன், பிரபல தமிழ் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் போன்றவர்களின் பட்டியல் தொடர்கிறது.

குற்றச்சாட்டும், விசாரணையுமின்றி எண்ணற்ற செய்தியாளர்களை சிங்கள அரசு, கொடுஞ்சிறையில் அடைத்துள்ளது. ‘சுடர் ஒளிஇதழின் ஆசிரியர் வித்யாதரன் அவர்கள், வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டார். உலகச் செய்தியாளர்களின் எதிர்ப்பு காரணமாக சிறைப்படுத்தப்பட் டுள்ளதாக பின்னாளில் சிங்கள அரசு ஒப்புக் கொண்டது. ‘அவுட்ரீச்இதழின் ஆசிரியரும், ‘சண்டே லீடர்இதழைப் போல் புகழ்பெற்றசண்டே டைம்ஸ்இதழின் செய்தியாளருமான ஜெயப்பிரகாஷ் சிற்றம்பல திசநாயகம் அவர்களுக்கு 20 ஆண்டு கொடுஞ்சிறை தண்டனை அளித்து சிங்கள அரசு வாட்டி வதைக்கிறது.

போர் என்றபெயரால் ஓராண்டு காலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களை சிங்கள அரசு கொன்று குவித்த கால கட்டத்திலும், தமிழின அழித்தொழிப்பு நடத்தப்பட்ட இடத்திலும், மூன்றரை லட்சம் தமிழ் மக்களை கொலை வதைமுகாம்களில் அடைத்து வைத்திருக்கிற பகுதிகளிலும், உள்ளூர் செய்தியாளர்களையும், உலகச் செய்தியாளர்களையும், சிங்களக் கொலைவெறி அரசு இன்று வரை அனுமதிக்கவில்லை.

2007ஆம் ஆண்டில் சிங்கள அரசால் தீவிரப்படுத்தப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைக்க, போர் என்ற பெயரால் ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தப் பகுதிகளில் இரும்புத்திரை விரித்து, செய்தியாளர்களுக்கு சிங்கள அரசு தடை விதித்தது.

இதன் காரணமாக, உலக மக்களின் கண்களை குருடாக்கி, காதுகளை செவிடாக்கி, 2008 ஆம் ஆண்டின் இறுதியிலும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் வரையிலும் ஒரு லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களை கேட்பதற்கே நாதியில்லாமல் சிங்கள அரசு குருதி வெள்ளத்தில் கொன்றழித்தது. உயிருக்கு அஞ்சி சின்னா பின்னமாகச் சிதறிய மூன்று லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழ் மக்களை சிறைப்பிடித்து, கொலை வதைமுகாம்களில் நடைபிணங்களாக கிடத்தி வைத்துள்ளது. இவர்களுக்கு சொந்த நாட்டில் கல்லறைகூட இல்லை. இறுதி அடக்கம் செய்து கொள்வதற்கும் வழி இல்லை.

உள்ளூர் செய்தியாளர்களை பச்சைப் படுகொலை செய்யும் சிங்கள அரசு, உலகச் செய்தியாளர்களை விரட்டி அடிப்பதுடன் நிற்காமல், தமிழினப் படுகொலைக்கு உடந்தையான செய்தியாளர்களை கைக்கூலிகளாக்கிக் கொண்டு, உலகமகா கொலைவெறியன் கோயபல்சை மிஞ்சும் வகையில் பொய்யை பரப்புகிறது.

காற்று நுழைய முடியாத இடத்திலும், ஊடுருவி, உண்மையை உலகக் கண்களுக்கு பறைசாற்றும் ஊடகச் செய்தியாளர்களை அனுமதித்தால், கடந்த ஓராண்டில் மட்டும் கொன்று குவிக்கப்பட்ட லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களின் பிண வாடையும், முகாம்கள் என்ற பெயரால் தொடர்ந்து கொண்டிருக்கும், சிங்கள அரசின் கொடூரக் கொலைகளும், சித்திரவதைகளும் உலகுக்கு வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பதாலேயே சிங்கள அரசு, செய்தியாளர்களுக்கு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி உண்மைகளை எழுதும் செய்தியாளர்களை பச்சைப்படுகொலை செய்து வருகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் அஞ்சாத உலகச் செய்தியாளர்கள் சிலர், சிங்களக் கொலைவெறி அரசின் தமிழின அழித்தொழிப்பு படுகொலையை உலகுக்கு பறைசாற்றி வருகிறார்கள்.

இதன் பின்னணியில் தமிழகச் செய்தியாளர் கு.முத்துக்குமரன் அவர்கள் தீக்குளித்து தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சிங்கள அரசின் தமிழின அழித்தொழிப்பு படுகொலையின் பின்னணியில் தொடரும், செய்தியாளர்கள் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் இனப்படுகொலைக்கு எதிராக தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, தமிழ் ஊடகச் செய்தியாளர்களின் வரலாற்றுக் கடமையுமாகும்.

ஆகவேதான் தமிழ் ஊடக செய்தியாளர்கள் சங்கம், ஊடகச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாட்டை ஒருங்கிணைக்கிறது.

ஊடகச் செய்தியாளர்களே உயிர்த்தெழுவோம்! இனப் படுகொலையும், ஊடகச் செய்தியாளர்கள் படுகொலையும் எங்கெங்கு நிகழ்ந்தாலும், அங்கெல்லாம் முன்னின்று உயிர்ம நேயத்தைக் காப்போம். ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்கிற தமிழர்களின் உயிர்மநேயப் பண்பாட்டை பறை சாற்றுவோம்.

- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to முத்துக்குமாரின் ஓராண்டு நினைவு நாளில் தமிழ் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com