தாய்த் தமிழக உறவுகளின் ஒரு உரிமைக்குரல்.1948 ஆம் ஆண்டில் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரம் பிரித்தானியர்களால் சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்டமிட்டு, சிங்களர்களால், நம் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. மொழியுரிமை சிதைக்கப்பட்டது. அரசியலுரிமையும் ஒடுக்கப்பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறைமையுள்ள தனிதமிழ் தேசத்தை ஆட்சி செய்துவந்த நாம், சிங்களவர்களால் களவாடப்பட்ட நம் உரிமைக்காக 30 வருடங்களாக அமைதிவழியான அஹிம்சை முறையில் போராடிப் பார்த்தோம். பலனில்லை. இதன்பிரகாரம், 1976 ஆம் ஆண்டு மே மாதம், தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
தமிழ்த்தேசிய எல்லைப் பரப்பான வடக்கு கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டு அப்பகுதியில், தமிழ் பேசும் மக்கள் தன்மானத்துடன் வாழ சுதந்திரமான, இறையாண்மையுள்ள, தன்னுரிமை பெற்ற தனித்தாயக தமிழீழ தனியரசை அமைக்கப் போராடுவதே தமிழ் மக்களின் ஒரே குறிக்கோள் என்பதே அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் உயிர்க்கரு ஆகும்.
திம்புவில் “சுயாட்சி எனவும்” இராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு எனவும், ஆஸ்லோவில் “உள்ளக சுயநிர்ணய உரிமை” எனவும் தமிழ் போராளிகள் மீது நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், கொண்ட கொள்கையில் விடுதலைப் புலிகள் சிறிதும் பின்வாங்கவில்லை. பேச்சுவார்த்தை என்ற மாயையில் தமிழர் போராட்டத்தின் வலுவை மழுங்கடிக்க முயன்றதல்லாது, அதைவிட, சர்வதேச நாடுகளினால் சமாதானத்தை நோக்கி வேறொரு நடவடிக்கைகளையும் எடுக்க முடியவில்லை. 2009 நான்காம் கட்ட ஈழப்போர் இறுதிக்கட்டத்தில், சர்வதேச சமூகம்; விடுதலைப் புலிகளை, தமிழீழக் கொள்கைகளை கைவிட்டு சரணாகதி அடையும்படி வற்புறுத்தின. ஆனால் விடுதலைப் புலிகளோ, முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனித்தார்களே தவிர, ஒருபோதும் சரணாகதி அடையவில்லை.
2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சமாதானத் தூதுவராக வந்த நார்வே அமைச்சர் எரிக் சோல்கிம் மற்றும் அமெரிக்கத் தூதுவராக இலங்கையில் இருந்த இராபர்ட் ஓப்ளேக் போன்றோர் “தமிழீழம் என்பது ஒரு தனி நபரின் (தேசியத் தலைவரின்) கனவு: மக்களின் விருப்பம் அல்ல” என்று கொச்சைப்படுத்தி சர்வதேச ஊடகங்களில் பிதற்றி வந்த வேளையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பிற்கு ஓர் அரசியற் தேவை ஏற்பட்டது.
அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நார்வே நாட்டில் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் உறவுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் நாள், முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த கொடூரமான வேளையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, 99 சதவிகிதமான ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்குச் சுதந்திரமும், இறையாண்மையுமுள்ள தனித் தமிழீழமே வேண்டும் என்று வாக்களித்தார்கள். அதன் மூலம் தனித்தமிழீழம் என்ற கனவு தனி மனிதனுடையது அல்ல! ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் கனவும் அதுவே! என்று சர்வதேச சமூகத்திற்கு பகிரங்கப்படுத்தினார்கள்.
ஆயுதத்தைக் கைவிட்டு அமைதிப் பேச்சுக்கு வாருங்கள் என்று நாடகமாடியவர்களுக்குச் சனநாயக வழியில், அந்தந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நாம் விடும் சவால்தான் இந்த மீள்வாக்கெடுப்பு. ஜனநாயக நெறிமுறைகளுக்குச் சர்வதேசம் மதிப்பளிப்பது உண்மையானால், தமிழீழத்திற்கு நாம் நடத்தும் மக்கள் வாக்கெடுப்பிற்கும் மதிப்பளித்துத்தான் தீரவேண்டும். 1990 முதல் கொசாவா, கிழக்கு திமோர் சுலோவினியா, எரித்திரியா, உட்பட பன்னிரெண்டு நாடுகள் மேற்கூறிய கருத்துக் கணிப்பு வழியில் தமது சுதந்திரங்களை அடைந்தனர். இதனால்தான், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் இந்த அடிப்படையில் கையாளப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, புலிகள் தனிஈழம் கேட்டால் அது பயங்கரவாதம். ஆனால் புலம் பெயர்ந்த மக்களாகிய நீங்கள் கேட்டால் அது ஜனநாயகம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பரப்புரை செய்து நம் தமிழின அழிப்பை வாய்மூடி மொனமாகப் பார்த்த சர்வதேசத்தை வாயடைக்கும் வழிமுறைதான் இந்த மீள்வாக்கெடுப்பு.
தற்போது நம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத சதிவலைகள் பின்னப்பட்டு வருகின்றன. சர்வதேச சக்திகள் பலவும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடலாம் என்று நினைக்கின்றன. இந்த நிலையில் எமது தீர்க்கமான முடிவை ஜனநாயக ரீதியில் எடுத்துரைப்பது அவசியம். முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் சிங்கள அரசின் உந்துதலில் சில நாடுகள், ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேசியக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு எந்தவிதமான தீர்வையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதற்கும் இடமுண்டு.
பிறசக்திகளின் நிர்ப்பந்தங்களின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட முன்னெடுப்புகள் (திம்பு முதல் ஒஸ்லோ வரை) சுயநிர்ணய உரிமை, உள்ளக சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை மாத்திரமே கருத்தில் கொண்டவை என்பதால், தற்போது, தமிழீழம் மாத்திரமே எமது குறிக்கோள் அதிலிருந்து எள்ளளவும் குறையோம் என்பதைச் சர்வதேச சமூகத்திற்கும் நமது அமைப்புகளுக்கும் மற்றும் தமிழீழ அரசியல் தலைவர்களுக்கும் விடும் எச்சரிக்கையுமாகவே இந்த மீள் வாக்கெடுப்பு அமைகின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
அத்தோடு, மேற்குலக நாடுகளின் அரசியல் பண்பாடான, மக்கள் ஆணையை முறைக்குமுறை மீள் உறுதி செய்வது போல, நாமும் 34 வருடங்களுக்கு முன் ஈழத்தமிழ் உறவுகளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை புலம் பெயர்ந்த நாடுகளில் மீள்வாக்கெடுப்பு நடத்துவது என்பது ஈழதமிழர்களின் கோரிக்கையின் நம்பகத்தன்மையை சர்வதேசத்தில் வலுப்படுத்தும்.
அதுமட்டுமன்றி, இந்த வாக்கெடுப்பின்மூலம் சர்வதேச சமூகத்தை நம்பக்கம் திரும்ப வைக்கலாம். இலங்கை சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கெதிரான பாரிய மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு புரிந்ததாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி வருவதை நாம் அறிவோம். ஐ.நா, மற்றும் சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் கொசோவோ மற்றும் கிழக்கு திமோர் மக்கள் போல ஈழத் தமிழர்களும் தனிநாடுதான் ஒரே தீர்வு என்று கேட்கும் உரிமை மேலும் வலுப்பட்டு வருகின்றது. இத்தருணத்தைத் தமிழ் மக்கள் தக்க முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அண்மையில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று முடிந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாகவும் இன அழிப்புக் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, பிரான்ஸ் நாடு இன அழிப்பிற்கு எதிரான நீதிமன்றம் அமைக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு மே மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணை முன்னெடுப்பிற்கு, டென்மார்க்கின் பங்களிப்பு ஈழத்தமிழ் சொந்தங்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமை மாநாட்டில் UNHRC ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கை அரசுக்கெதிராக சுயாதீனமான போர்க்குற்ற விசாரணைக்கு மீண்டுமொரு முறை முயற்சி எடுக்கவிருக்கிறார். இத்தருணத்தில், டென்மார்க் வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் பெருமளவில் இவ்வாக்கெடுப்பில் பங்கெடுப்பது மூலம் டென்மார்க் அரசை மீண்டுமொரு முறை இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணைக்கு அனுசரணை செய்வதற்கு வழிவகுக்கும்.
எனவே புலம் பெயர் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமிழீழம் அடைவதற்கான ஜனநாயகக் கடமையை செய்யத் தவறக் கூடாது. ஆனால், தமிழீழம் என்ற தேசம் உலக வரைபடத்திலே வரையறுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் அதனை அடைவதற்கு ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் தங்களது இன்றியமையாத கடமையை ஜனநாயக வழியிலே ஆற்ற வேண்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (28-02-2010) நடைபெறவிருக்கின்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பில் பெருந்திரளாகக் கலந்துக்கொண்டு பெருவாரியான வாக்குகளை இட்டு பெரும் வெற்றியடையச் செய்யுமாறு தாய்த் தமிழகத்தின் சார்பாக அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம். ஆயிரமாயிரம் மாவீரர்களும் அப்பாவி பொதுமக்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்தது போல், தாய் தமிழகத்திலும், மலேசியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும், அப்துல் ரகுஃப் தொடங்கி முத்துக்குமார் முதல் முருகதாஸ் வரை 19 தியாகிகள் தங்களது தேக்குமர உடலை தீக்கிரையாக்கி, உங்களது உரிமைக்காகவும் சுதந்திரமான இறையாண்மையுள்ள தனி ஈழத்திற்காகவும், உயிர்க்கொடை கொடுத்து அடித்தளமிட்டிருக்கின்றார்கள். அவர்களை நாம் மறவோம். அவர்கள் உயிர்க்கொடை கொடுத்தார்கள். நாம் உயிர்க்கொடை அல்ல, நமது கடின உழைப்பையே, ஜனநாயக வழியிலே, கொடையாகக் கொடுத்து, நமது ஈழத்தை மீண்டும் பெறுவோம்!!
உரிமையுடன் தாய்த் தமிழக உறவுகள்.
பதிவு



0 Responses to அன்புள்ள புலம்பெயர்ந்து வாழும் டென்மார்க் தமிழீழச் சொந்தங்களே!