சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் முதல்தடவையாக பலநூற்றுக்கணக்கான சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதால் அந்தக்குழுக்களான தேர்தல் சின்னங்களுக்கு தேர்தல் திணைக்களத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு, நேற்றைய தினம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலதிக தேர்தல் சின்னங்களை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கூறுகையில், தேர்தல் திணைக்களத்தில் 40 சின்னங்களே புதிய கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விநியோகிப்பதற்கு வசதியாக தயார்நிலையிலிருந்தது. ஆனால், இம்முறை தேர்தலில் வரலாறு காணாத சுயோட்சைக்குழுக்களின் எண்ணிக்கை தேர்தல் களத்தை ஆக்கிரமித்துள்ளதால் மேலதிக சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அம்பாறையில் இம்முறை தேர்தலில் 18 அரசியல் கட்சிகளும் 53 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன. வேட்புமனு நடைமுறைகளை பின்பற்றாத ஒரு கட்சியினதும் மூன்று சுயேட்சைக்குழுக்களினதும் மனுக்கள் தேர்தல் செயலகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, தமிழர் தாயகத்தில் இன்னொரு மாவட்டமான மட்டக்களப்பில் 17 அரசியல் கட்சிகளும் 28 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன. அங்கேயும், வேட்புமனு நடைமுறைகளை பின்பற்றாத ஒரு கட்சியினதும் மூன்று சுயேட்சைக்குழுக்களினதும் மனுக்கள் தேர்தல் செயலகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழர் பிரதேசங்களில் அரசுக்கு ஆதரவற்ற சூழ்நிலை நிலவுவதையும் அரசுக்கு ஆதரவாக தமிழ் கட்சிகளின் செல்வாக்கினால்கூட அந்த நிலையை மாற்றமுடியாமல் இருப்பதனையும் கடந்த அரசதலைவர் தேர்தலில் தெரிந்துகொண்டு, இம்முறை பொதுத்தேர்தலில் தமிழர் பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையிலான சுயேட்சைக்குழுக்களை போட்டியில் இறக்கி வாக்குக்களை சிதறடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பாரிய வாக்குபலத்துடன் தெரிவு செய்யப்படும் தமிழ் கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய தேசிய பட்டியல் ஆசனங்களையும் இதன்மூலம் குறைத்துக்கொள்வதற்கும் அரசுக்கு உதவும் என்று தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



0 Responses to வரலாறு காணாத சுயேட்சை குழுக்களின் எண்ணிக்கை: தேர்தல் சின்னங்கள் பற்றாக்குறை!!