Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முனைநாள் குமரி முழுதும் அழித்தும்
தணியாப் பசியால் தவித்துத்துணிவாய்
எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்
பொழுது புலரும்முன் பூத்து? (81)


பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று
வீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல்கூத்தொன்றை
ஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!
ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (82)

பொழில்சோலை; ஆழிகடல்; ஊழிஅழிவுக்காலம்.

உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி
உயிர்த்தோர்க்(கு) உதவ உலகம்முயன்றால்
தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்
கெடுமனம் கொண்ட குலம்! (83)

குலக்கா வலனே! குடிகள் குறையை
விலக்கத் துடித்தாய் விரைந்தேநிலங்காக்கும்
முப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்
அப்படையும் வந்துதவிற்(று) ஆங்கு! (84)

ஆழி இழைத்த அழிவின் களையெடுத்து
மேழி பிடித்ததன் மேலுழுதாய்பாழின்
வழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு
மொழியற்று நின்றார் முனிந்து! (85)

ஆழிகடல்; மேழிஏரு.

முனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை
வினையால் விரித்தாரவ் வீணர்புனைகதையாம்
மாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்
சாகுலத்தர் ஆனார் சரிந்து! (86)

மாகுலம்மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற
புனைநூல்); சாகுலத்தர்அழியும் இனத்தவர்.

சரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்
அரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை
பிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்
செஞ்சோலை இல்லிற்குச் சென்று! (87)

சென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்
கொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார்நின்றிருக்கும்
கூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய
ஊரை அழித்தார் உவந்து! (88)

உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றேஉவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (89)

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார்திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (90)


--
அன்புடன்
அகரம்.அமுதா

ஈழநேசன்இணையம்

0 Responses to கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com