தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தில் இன்று (22.02.2010) 29ஆம் நாள். நெடுநடைப் பயணத்தின் நடுப்புள்ளிக்குப் பிறகு 7 நாள் கழிந்துள்ளது.இந்த ஒரு வாரத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர் ஆகிய பேரூர்களையும், இடைப்பட்ட ஏராளமான சிற்றூர்களையும் கடந்துள்ளோம்.
திருவாரூரில் தமிழர் தன்மானப் பேரவைத் தோழர்கள் எங்களை வரவேற்று விருந்தோம்பினர். நகரத்தின் முக்கிய மையங்கள் பலவற்றில் தெருமுனைக்கூட்டங்கள் நடத்தினோம். உண்டியல் நிதியிலும் புத்தக விற்பனையிலும் திருவாரூர் ஏமாற்றவில்லை. நாம் தமிழர் இயக்கத் தோழர்களும் உதவிகள் செய்தார்கள். மாங்குடியிலும் மாவூரிலும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். மணலியில் ம.தி.மு.க. தோழர்கள் இரவு தங்கவும் உண்ணவும் ஒழுங்கு செய்தனர்.
திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் வரவேற்பளித்தனர். தமிழ் அன்பர்களும், தனிப்பட்ட நண்பர்களும் தமிழ்த் தேசம் வாசகர்களும். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் ஆங்காங்கே சந்தித்து ஆதரவளித்தனர். கோட்டூரில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, த.தே.பொ.க. தோழர்கள் வரவேற்றனர்.
20.02.2010 சனி காலை மதுரையிலிருந்தும் திருப்பூரிலிருந்தும் பெண்ணாடத்திலிருந்தும் புதிய தோழர்கள் வந்து சேர, பயணக் குழுவினரின் தொகை முப்பதைத் தாண்டியது. அன்று மாலை மன்னார்குடியில் நுழைந்த போதே வரவேற்பு தடபுடலாக இருந்தது. சிவகுமார் என்பவர் முதல் நன்கொடையாக இரண்டாயிரம் கொடுத்துத் தொடங்கி வைத்தார். மூன்று இடங்களில் சுருக்கமான தெருமுனைக் கூட்டங்கள் நடத்திய பிறகு, பெரியார் சிலை அருகே ஒரு மணி நேரம் பேசினேன். பெருங்கூட்டம் திரண்டது. ஏராளமான அன்பர்கள் பயணக் குழுவினர் அனைவருக்கும் சால்வை போர்த்திச் சிறப்புச் செய்தனர். நன்கொடையும் திரண்டது.
மன்னைத் தமிழ் அன்பர்கள் சார்பில் ரூ. 25,000/- வழங்கினர். திருப்பூர் மாவட்டத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் ரூ. 50,000/- வழங்கினர். அடுத்த கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மன்னை தந்த கொடை மொத்தம் எண்பதாயிரத்தைத் தாண்டியது. ஒவ்வோர் ஊரிலும் இதே போல் கிடைத்தால் தமிழ் மீட்பு நிதியத்துக்கான இலக்கைத் தொட்டு விட முடியும் என்ற நம்பிக்கையை மன்னை எமக்களித்தது.
21.02.2010 நடுப்பகல் எடமேலையூரில் பசுமை சூழ்ந்த வயற்கொட்டகையில் விருந்துண்டு ஓய்வெடுத்த பின் இரவு 7 மணியளவில் வடுவூரில் நுழைந்தோம். ஊராட்சித் தலைவரும் மற்றவர்களும் வரவேற்றனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் முதன்மைச் சாலையில் ஊர்வலமாகச் சென்று கடைத்தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முனைவர் இளமுருகன் வரவேற்றுப் பேசிய பின், வடுவூர் மக்கள் சார்பில் ரூ.21,000/- வழங்கினர். எதிர்பாராத வரவாகத் திருப்பூரிலிருந்து வந்த திருப்பதி ரூ.2,000/- கொடுத்தார். திருப்பூரில் திருமணம் முடிந்து வரவேற்புக்காக நீடாமங்கலம். செல்லும் வழியில் கூட்டம் நடப்பதைப் பார்த்து, சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி மற்றவர்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு வந்தார், தந்தார், சென்றார்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் பேசி முடித்த பின், இரவு உணவுக்காக 3 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும், வண்டியில் போகலாம் என்றனர். அதை எற்க மறுத்து நாங்கள் நடந்தே சென்றோம். தோழர் முருகேசன் குடும்பத்தினரின் இனிய விருந்தோம்பல் இரு நாள் நடைப்பயணத்தில் மன்னையும் வடுவூரும் தந்த ஊக்கத்துக்கும் ஊட்டத்துக்கும் முத்தாய்ப்பாய் அமைந்தது. இந்த ஊக்கமும் ஊட்டமும் தொடர்ந்தால் நன்று.
தியாகு 22.02.2010



0 Responses to தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் 2010