தமிழீழ மக்களின் விடுதலைக்கான போராட்டம் இடம்பெயர்க்கப்பட்டு உலகமயப்படுத்தப்பட்டிருக்கும் இந்நேரத்தில் "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரணநிகழ்வல்ல. அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு, உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை, அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களையும் பற்றிக்கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத்தட்டியெழுப்புகின்றது."| என்ற தமிழீழ மக்களின் தேசிய ஆன்மாவின் கூற்றுக்கமைய அந்த விடுதலைக்காக துணைநின்ற மக்களின் அர்ப்பணிப்புக்களும் வீணாக போவதில்லை.அவர்களின் இலட்சியக்கனவுகள் தான் இன்று உலகப்பரிமானம் பெற்று நிற்கின்றது. அந்த இலட்சியக்கனவுகள் தான் இன்று உலகளவில் தமிழீழ தனித்தாயகத்தை வலியுறுத்தி இடம்பெயர்க்கப்பட்ட தமிழீழ மக்கள், அடுத்த சந்ததியினர், என்று ஆயிரக்கணக்கில் சனநாயக வழிக்கு மதிப்பளித்து நடைபெற்ற வாக்கெடுப்பில் வாக்களித்திருக்கின்றார்கள்.
இந்த வாக்கெடுப்புகளும் தான பல அரசியல் வாதிகளையும், உயர்மட்ட தலைவர்களையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. நாம் செய்யும் போராட்டங்கள் எதுவும் வீணாகப்போவதில்லை. அந்த இலட்சியக்கனவோடு தான் குளிரோ, மழையோ, என்று பார்க்காமல் பிரான்சில் வாழும் தமிழீழ மக்கள் 32000க்கும் மேற்பட்டோர் தமது சனநாயக உரிமையை வாக்களிப்பின் மூலம் வலியுறுத்தினார்கள்.
இன்று நாம் அதற்கு மேலாக சென்று எமக்கு அங்கு ஒரு நாடு இருந்தது இன்று அது உலக வலைப்பின்னலில் சிதைக்கப்பட்டுள்ளது. இன்று அதை கட்டிகாத்து எமக்கு விடுதலை கிடைக்கும் வரை நாம் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழீழ தேசிய கட்டமைப்புகள் ஊடாக அதை பாதுகாக்க வேண்டியது எல்லா தமிழ்மக்களினதும் கடமையாகும்.
அதன் முதற்கட்டமாக பிரான்சில் தமிழீழ தேசிய கட்டமைப்புக்கான தேர்தல் இவ்மேற்குலக சனநாயக கோட்பாடுகளுக்கமைய நடைபெறவிருக்கின்றது. அதில் பிரான்சில் இருக்கும் அத்தனை தமிழ் அமைப்புகளும் தமது பிரதிநிதிகளை அனுப்பி எமது அரசியற்கட்டமைப்புகளை சரியான வழியில் நடாத்த அழைக்கின்றோம். அதே நேரத்தில் பிரான்சில் வாழும் அத்தனை தமிழ்மக்களையும் எமது அரசியற்கோட்பாடுகளை சரியான பாதையில் இட்டு செல்லக்கூடியவர்கள் இந்நாட்டு மற்றும் ஐரோப்பிய, உலகநாட்டு அரசும், அரசுசார்பற்ற அமைப்புக்களுடன் உறவுகளை பேணக்கூடியவர்களை இந்த தேர்தலில் முன்வந்து செயற்பாட்டாளர்களாக மாறும் படியும் கேட்டுக்கொள்கின்றோம்.
நாம் பலமாக இருந்தால்தான் ஒரு அரசுடனோ, அதன் அதிகாரிகளுடனோ, சரிசமமாக இருந்து பேச முடியும். எமது ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு காட்டவேண்டியது எல்லோரின் கடமையாகும். இன்று போராட்ட வடிவங்கள் மாற்றப்பட்டு நமது போராட்டம் பரிணாம வளர்சி பெற்றிருக்கும் நிலையில், அந்த பயணத்தில் சரியான பாதையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புகளிலிருந்து எமது மக்கள் எம்மிடம் கொடுத்து விட்டு சென்ற பாதையில் முன்னோக்கிச்செல்வோம்
சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும், தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும், பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்து போகவேண்டும், ஆகவே சுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை
தமிழீழ தேசிய ஆன்மாவின் சிந்தனையிலிருந்து
தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு



0 Responses to பிரான்சில் தமிழீழ தேசிய கட்டமைப்புக்கான தேர்தல் எப்ரல் 10ம், 11ம் திகதியில்