Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க இலங்கை அரசு தன்னாலான அத்தனை சூழ்ச்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பலத்தைச் சிதைக்கும் எத்தகைய சூழ்ச்சிக்கும் பலியாக மாட்டோம் என்று தமிழ் மக்கள் நிரூபித்து விட்டார்கள்.
இவ்வாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பொ.ஐங்கரநேசன் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை ஜனநாயக முறையில் வென்றெடுப்பதற்கான அமைப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே நம்புகின்றனர். இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்துவிடும் நோக்கில் அரசு கங்கணம் கட்டிச் செயற்பட்டுவருகின்றது.

கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகளை உருவாக்குவது, அவர்களில் சிலரைத் தம்வசப்படுத்துவது என்று கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்ட அரசு நாடாளுமன்றத் தேர்தலில் வேறுவகையான சூழ்ச்சி வலையைப் பின்னியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் மிகப்பெரும் தொகையான சுயேட்சை வேட்பாளர்களையும், உதிரிக் கட்சிகளையும் களமிறக்கியது, இவர்களுக்காக பலகோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்தது.

ஆனால், அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட, அரசின் இலக்குக்;கு இசைவாகத் தனிக்குழுக்களாகப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் படுதோல்வியைத் தழுவ வைத்துள்ளனர்.சுயேட்சைக் குழுக்களைச் சார்ந்த அனைவரையும் சொற்ப வாக்குகளையேனும் வழங்காது முற்றாக நிராகரித்துள்ளனர்.

இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியப் பலத்தைச் சிதைக்கும் அரசின் எத்தகைய சூழ்ச்சிக்கும் பலியாகமாட்டோம் என்பதைத் தெளிவாக நிரூபித்துவிட்டனர்.

வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அதிகப்படியான வாக்குகளை வழங்கித் தங்கள் அரசியல் தலைமைத்துவம் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பே என்பதனையும் தமிழ் மக்கள் தெளிவு படுத்தியுள்ளனர். அதேசமயம், யாழ் மாவட்டத்தில் வாக்களிப்பு மிகக்குறைவாக இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடாநாட்டு மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாமைக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. வாக்களிப்பு சதவீதம் குறைவாக இருந்தமையால், விகிதாசார தேர்தல் முறை காரணமாக யாழ்மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு தெரிவாக முடிந்தது.

இவர்களில் ஒருவராக நான் இடம்பெறாதபோதும், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் இலக்கை எட்டுவதற்கும், தமிழ் மக்களுடைய இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியாக உழைப்பேன் என்று உறுதி கூறுகின்றேன்.

மேலும், எனக்கும் கூட்டமைப்பின் ஏனைய வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தேசிய உணர்வாளர்கள் அனைவருக்கும், என்னோடு சேர்ந்து கூட்டமைப்பின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த பற்றாளர்களுக்கும் உறுதுணையாக இருந்த பழைய மாணவர்களுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

பொ. ஐங்கரநேசன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to எத்தகைய சூழ்ச்சிக்கும் பலியாகமாட்டோம் என்று தமிழ்மக்கள் நிரூபித்து விட்டார்கள் - பொ.ஐங்கரநேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com