
எம் இனம் உலகின் மிக மூத்த இனங்களில் ஒன்றாக விளங்கி அதன் வரலாற்றுப் பக்கங்களில் உலகிலேயே மிக கூடுதல் நிலங்களை ஆட்சி செய்து தனக்கான விழுமியங்கள், பண்பாடுகள், கலாசாரங்கள் மற்றும் கலை அம்சங்கள் அனைத்தையும் கொண்டே விளங்கிய போதிலும், எமது இனத்திற்கு இருக்கும் சாபக் கேடான ஒற்றுமையின்மை என்கின்ற தொன்று தொட்டு வந்த இழிவான செயற்பாடு எமக்கான ஒரு நிலையான நில ஆட்சியினை வைத்திருக்க அனுமதிக்கவில்லை என்பது வெளிப்படை.
இலங்கைத் தீவில் எமது இனம் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து கோலோச்சி செழிப்புடன் வாழ்ந்த போதிலும் மேலைத்தேயரின் வருகையைத் தொடர்ந்து எமது முதல் தோன்றிய இனத்தின் முதுகெலும்பை உடைக்கும் நடவடிக்கைகள் சேர்ந்திருந்தும், எதிர் நின்றும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
முடிந்தவரையில் அகிம்சை வழியில் எம் மூத்தோர் எமக்கான மனிதாபிமான உரிமைகளாவது கிடைக்காதா என்று போராடித் தோற்றனர். இறுதியில் அகிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்த தந்தை செல்வா கூட தமிழ் இனத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று ஓய்ந்துவிட்டார்.
ஆனாலும் அதன் பின்னர் தமிழீழ தேசிய விடுதலைப் போரை தேசியப் போராளிகள் முன்னெடுத்தனர். அதன் வீச்சு, அதன் தாக்கம், அதன் வீரியம் உலகின் அனைத்துத் திசைகளிலும் அதிரும் அளவிற்கு மூச்சுப் பெற்றது.
இந்த இடத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கின்ற தமிழீழத்திற்கான மக்கள் ஆணை என்பது அகிம்சைப் போராட்டத்தினை ஆயுதப் போராட்டத்திற்கு கையளிக்கின்ற ஒரு மாபெரும் நிகழ்வாகவே நிகழ்ந்தேறியது. இது உண்மையில் நினைக்க முடியாத ஆனால் எங்கும் நடந்திருக்க முடியாத ஒரு வரலாற்றுச் சம்பவம் ஆகும். முடிந்தவரையில் அகிம்சை ரீதியாக போராடிய அகிம்சா வாதிகள் மக்களின் முழு ஆதரவுடன் ஆயுதப் போருக்கான தீர்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மறைமுகமான ஆணை அமைந்திருந்தது.
அதன் பின்னான தேசிய விடுதலைப் போரின் கன பரிமாணம், அதற்கான விலைமதிக்க முடியாத விலைகள் அதனுடன் இணைந்தான தாயக மற்றும் புலம்பெயர் மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடு என்பன எமது இனத்திற்கான மீள் நிமிர்வினை உலகில் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் அமைந்திருந்தது.
போரும் அதனுடன் இணைந்த சமாதான முன்னெடுப்புக்களும் மாறி மாறி அமைந்த சூழலின் தொடராய் மிகக் கொடிய போர் உலகின் மிகக் கொடிய வல்லாதிக்க சக்திகளின் முழுமையான பக்கத்துணையுடன் தமிழ் மக்களால் தனித்து முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் மிகப் பாரிய பின்னடைவினை எதிர்கொள்வைக்கப்பட்டது.
போர்க்காலத்தில் 2 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் பலி எடுக்கப்பட்டார்கள் பல்லாயிரக் கோடி பெறுமதியான தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அவற்றுக்கான உழைப்புக்கள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டன.
இந்த இடத்தில் அடுத்த கட்டத்தினை நோக்கிய நகர்வினை முன்னெடுக்கவேண்டிய சூழல் புலம்பெயர் தளத்தில் உள்ள மக்களிடத்திலேயே கையளிக்கப்பட்டுள்ளது என்றே கொள்ளவேண்டும். காரணம் எமக்கான சுதந்திரம் பறிபோனதில், தற்போது தடுக்கப்படுவதில் சர்வதேச சமூகத்தின் பங்கு என்பதே பிரதானமாய் அமைந்துள்ளது.
தற்போதைய உலக ஒழுங்கில் ஒவ்வொரு வல்லரசுகளும் தமது மற்றும் பிராந்திய நலன் சார்ந்தே சிந்திக்கின்றன. இந்த நிலையில் அவற்றினை எமது நிரலுக்குள் கொண்டுவந்தே எமக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காட்டாயம் உணரப்பட்டுள்ளது. இந்த உண்மையை உணராமல் இனிவருங் காலங்களில் அரசியல் முனைப்புக்களை மேற்கொள்ளமுடியாது.
இந்த இடத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் பல்வேறு தீர்மானங்களையும், வாக்கெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக மீண்டும் எமது ஒருமைப்பாடு, எமது பலம், எமது தேவை சர்வதேசத்தின் முன் வலியுறுத்தப்படும் என்கின்ற உண்மையான செய்தியினை புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் உள்ளங்களிலும் கனல்கின்ற கொதி நிலையை தாயகத்தில் இருக்கின்ற எமது மக்கள் நன்கு புரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். புலம்பெயர் சமூகம் வன்னியில் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது முடிந்தவையில் உலகின் பார்வையை எட்டும் வரையில் போராடினார்கள் என்பதை எமது மக்கள் நன்கறிவர். இந்த நிலையில் முன்னெடுக்கப்படுகின்ற வாக்கெடுப்புக்களை எமது மக்களின் குரல்களாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அல்லது தேவை புலம் பெயர் சமூகத்தில் உள்ளது.
தாயகத்தில் எத்தனை ஆயிரம் நெருக்கடிகள் எதிர்கொள்ளப்பட்ட போதும் அதனை நேர் எதிர் நின்று எதிர்கொண்ட மக்கள் இன்னமும் அசையாத நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருப்பதை மட்டக்களப்பில் வன்முறைகளையும் எதிர்த்து தமிழ் தேசியத்திற்காக வாக்களித்த தமிழ் வாக்குகளை சிறு உதாரணமாய்க்கொண்டே பார்க்க முடியும்.
இதேபோன்றதான புறச்சூழல் புலம்பெயர் தளத்தில் இல்லாத நிலையில் அங்கு முன்னெடுக்கப்படுகின்ற மீளுறுதிக்கான வாக்கெடுப்பில் அனைவரும் பங்கெடுக்கவேண்டும், அனைத்து தமிழ் மக்களும் தமது உணர்வுகளைப் பிரதிபலிக்கவேண்டும் என்ற விருப்பார்வம் தாயகத்தில் வாழ்கின்ற எமது மக்களிடம் விரவிக்கிடப்பதை புலம்பெயர் மக்கள் நிலை நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் தேசம் நோக்கிய நிமிர்வான பயணத்தில் ஒன்றிணைவோம்.
0 Responses to வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்துவது பற்றி தாயகத்திலிருந்து ஒரு குரல்