வவுனியா திருநாவற்குளம் சிவன்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் இருந்த ஆசிரியையைக் காயப்படுத்தி, அவரது ஒன்பது வயது சிறுமியைக் குத்திப் படுகாயப்படுத்திய இருவர், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பெறுமதியான உடைமைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கேதீஸ்வரநாதன் ஜனனி என்ற 9 வயது சிறுமியே கொல்லப்பட்டுள்ளார். இவர் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவியாவார்.
அவரது தாயாராகிய கேதீஸ்வரநாதன் கௌரியாம்பிகை (35) நெஞ்சு பகுதியிலும் வயிற்றிலும் குத்துக்காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது இன்னுமொரு மகனும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
கௌரியாம்பிகை வவுனியா மாறம்பைக்குளம் பாடசாலையில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தனும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
திருநாவற்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவந்துள்ளதாவது:
திருநாவற்குளம் சிவன்கோவில் பகுதியில் குளத்தை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் கணவன் வெளியில் சென்றிருந்த சமயம் வீட்டினுள் புகுந்த முகமூடி அணிந்த இருவர், தாயையும் மகளையும் குத்திக் காயப்படுத்தி, அவர்கள் கைகளில் அணிந்திருந்த காப்பு மற்றும் தங்க நகைகளை வெட்டி எடுத்ததுடன், வீட்டு அலுமாரி மற்றும் இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், ரொக்கப்பணம், பெறுமதியான பொருட்கள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவ நேரம் வெளியில் சென்றிருந்த கணவன் கேதீஸ்வரநாதன் வந்து பார்த்தபோது மனைவியும், மகளும் படுகாயமடைந்து இரத்தவெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியோடு இருவரையும் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இருந்த போதிலும் முதுகில் குத்துக்காயத்திற்கு உள்ளாகிய 9 வயது சிறுமியின் உயிரை வைத்தியர்களினால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
தாயார் கௌரியாம்பிகை தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை வைத்தியசாலையில் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதவான் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கும் சென்று விசாரணைகளை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேல் விசாரணைகளை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.



0 Responses to வவுனியாவில் கொள்ளைக்காக கொலை!