Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபாகரனின் தாயார் அரசியல் பிரமுகராக சென்னைக்கு வரவில்லை என்றும் அவர் சிகிச்சைக்காக தான் வந்தார் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து தே.மு.தி.. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத சிகிச்சைக்காக மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த பொழுது, அன்று இரவே சென்னையில் அவரை இறங்கவிடாமல் இந்திய அரசின் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு மீண்டும் மலேசியாவுக்கு அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்.

மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாள் வைத்திய வசதி செய்து கொள்ள மீண்டும் தமிழகத்திற்குத்தான் வர விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களேயானால், தமிழ்நாடு அரசு அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அதுபற்றி எழுத தயாராக இருக்கிறது என்றும், மத்திய அரசு பதில் தருமானால் அதுபற்றிய விளக்கம் தேவைப்பட்டால் தெரிவிக்கப்படும்என்றும் முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், அரேபியா போன்ற நாடுகளிலிருந்து இங்கே வைத்தியம் செய்து கொள்ள வருவதைப்போல, அவரும் ஒரு பயணியாக வந்துள்ளாரே தவிர ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக அல்ல என்று தெரிகிறது.

2003 ம் ஆண்டில் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் இந்தியாவுக்கு வர தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு, இன்றைய நிலை வேறு. 2003 ம் ஆண்டு பட்டியலை 10 ஆண்டுகள் கழித்து தான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை.

தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் அமைச்சர் இந்த தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சூழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச்சொல்லி அந்த பட்டியலை ரத்து செய்திருக்கலாம்.

1979 ம் ஆண்டிலிருந்தே பிரபாகரனின் பெற்றோர்கள் அவரைப் பிரிந்து தான் வாழ்கின்றனர். 2003 ம் ஆண்டில் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது மீண்டும் அவர்கள் இங்கிருந்து ஈழம் சென்றனர்.

பிரபாகரனை இந்தியா பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவித்ததற்கும் பிரபாகரனின் பெற்றோர்களுக்கும் என்ன சம்பந்தம்? வயதான காலத்தில் தனியே விடப்பட்டு தமிழினத்திற்கு தாய் நாடான தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று வந்த 80 வயதான பார்வதியம்மாளை இங்குள்ள அரசுகள் திருப்பி அனுப்பிய பொழுது அந்த தாய் உள்ளம் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் என்ற அடிப்படையிலும், தானே முன் வந்து மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி பார்வதி அம்மாள் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுத்த அந்த தடை ஆணை பட்டியலை அறவே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

0 Responses to தேசியத்தலைவரின் தாயார் அரசியல் பிரமுகராக வரவில்லை: விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com