Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள், இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபடுவதற்கு எமக்கு வழியேற்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பொது நூலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வடக்கு மாகாணத்தின் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இணக்க அரசியல் என்று கூறும் போது இதற்கு முன்னர் இருந்தவர்கள் இணக்க அரசியலுக்குக் கொடுத்த வியாக்கியானத்தை நாங்கள் கூற முன்வரவில்லை. சரிசம உரித்துக்களையுடைய இரு மக்கள் கூட்டங்கள் என்ற அடிப்படையில் எமக்கிருக்கும் உரிமைகளை உளமார எடுத்துரைத்து மனிதாபிமான அடிப்படையில் அவற்றை அரசாங்கத்துடன் பேசிப் பெற்றுக்கொள்வதையே நான் இணக்க அரசியல் என்று கூறுகின்றேன்.

இதற்கு இரு தரப்பாரிடமும் கொடுத்தெடுக்கும் அந்த மனோபக்குவம் இருக்க வேண்டும். எம் மக்களில் பெரும்பான்மையினரின் உதவியாலும் பதவிக்கு வந்த ஜனாதிபதி என்ற வகையில் புதிய ஜனாதிபதியின் அரசாங்கம் எமது அரசாங்கம் ஆகும். அதனிடம் நாம் கோரவும் அவற்றை அரசாங்கம் வழங்கவும் இனி எந்தத் தடையும் இருக்கத் தேவையில்லை.

வடக்கு மாகாணம் மற்றைய மாகாணங்கள் போலல்லாது பாரிய போர்க்கால இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் முகம் கொடுத்துவந்துள்ள ஒரு மாகாணம். எமது தேவைகளை, விசேட தேவைகளைக் கணக்கில் எடுத்து நிவாரணங்களைப் பெற்றுத்தர வேண்டும்.

எமது வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழியமைக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாம், இணக்க அரசியலில் ஈடுபடுவதற்கு வழியேற்பட வேண்டும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com