ஈழத்தமிழர்களின் பாரம்பரியத் தாயக, தேசிய விடுதலைப் போராட்டம் குறித்தும், ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் இன அழிப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஏறத்தாழ இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடுநிலையோடு நடத்திவரும் ‘வின்’ தொலைக்காட்சி, நீதியின் குரல் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு சி.ஆர்.பாஸ்கரன் அவர்கள், ஊடகத்துறையில் மிகவும் பிரபலமானவர். ஈழப் பிரச்சினை மட்டுமின்றி தமிழகத்தின் உயிர்நாடியான அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது, சூடான விவாதங்களைக் கிளப்பி, தமிழக மக்கள் உலகத் தமிழர்கள் என அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர்.
இலங்கையில் 4ஆம் கட்டப் போரின்போது சர்வதேசப் போர் விதிமுறைகளை எல்லாம் மீறி, பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வந்து அடைக்கலம் புகுந்த அப்பாவித் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் ஏறத்தாழ 50,000 பேர்களை, சுமார் 6000 தடவைக்கு மேல் விமானம் மூலம் குண்டுவீசிக் கொன்று அழித்த சிங்கள-பௌத்த இராணுவத்தின் போர்க்குற்றங்கள் இன்றைக்குச் சர்வதேச நாடுகளால், ஐ.நா. அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன.
2008 டிசம்பர் மாதம் முதல் 2009 மே மாதம் வரை 4,50,000 தமிழர்கள் வாழ்ந்த வன்னிப் பகுதியில் 1,60,000 வீடுகள் முற்றாக சிங்கள இராணுவத்தால் குண்டுவீசி அழிக்கப்பட்ட அதிர்ச்சியான தகவலை ஐ.நா. சபை மேற்கொண்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இறுதிகட்டப் போரில், போர்ப்பகுதியிலிருந்து மருத்துவச் சேவை செய்துவிட்டு வெளியேறிய மருத்துவர் ஒருவர் போர் நடைபெற்ற கடைசி ஆறு மாத காலங்களில் சுமார் 97,500 தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கான தகுந்த ஆதாரங்களோடு விசாரணையின் போது சாட்சியமளிக்கத் தயாராக உள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.
ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கை இராணுவம் 4-ஆம் கட்டப் போரில் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போர் விதிமுறை மீறல்கள் குறித்து நடைபெறவிருக்கும் போர்க்குற்ற விசாரணைக்குச் சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அறிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் திரு. கார்டன் வெய்ஸ் என்பவர் ஆஸ்திரேலியாவின் ‘ஏ.பி.சி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைத்தீவின் கடைசிக்கட்ட வன்னிப் போரில், 40,000 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைப் பற்றி தெரிவித்துள்ளார்.
பிலிப் ஆல்ஸ்டைன் என்கிற ஐ.நாவின் இனப்படுகொலைத் தொடர்பான சிறப்புச் செய்தியாளர், இலண்டன் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிக் காட்சிகள் தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டவாறு நிர்வாணமாக்கப்பட்டு பிடரியில் வைத்து சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் ஆதாரங்களில் உண்மை இருப்பதாகவும், இது குறித்து ஐ.நா.சபை போர்க்குற்ற விசாரணை நடத்த முன் வரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேசச் சட்ட வல்லுநர்களான பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், பேராசிரியர் புரூஸ் பெயின் போன்றோர் இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணை வழக்குகள் தொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2010 ஜனவரி 15, 16-ல் வட அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெற்ற மக்கள் விசாரணை நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ள ஐ.நா.சர்வதேச நீதிமன்றத்திற்கு, இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளது.
இவ்வாறு சர்வதேச நாடுகள் சிங்கள-பௌத்த இனவெறி அரசின் அதிபர் ராஜபக்ச உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரின்மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வாழும் தொப்புள் கொடி உறவுபுகளான 7 கோடி தமிழர்கள் இடையிலும் போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு ஆதரவுக் குரலெழுப்ப வேண்டிய வேலைத் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிறமாநிலங்களிலும், டெல்லியிலும் இதற்கான ஆதரவு திரட்டும் பணிகள் பேராசிரியர் தீரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை’ என்னும் ‘வின்’ தொலைக்காட்சியின் நீதியின் குரல் நிகழ்ச்சியில் பசுமைத் தமிழகம் நிறுவனர் பேராசிரியர் தீரன், கவிஞர் புலமைப்பித்தன், உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தமித்த இலட்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்திய நேரப்படி காலை 11 முதல் 12 மணிவரை நேரடியாக ஒளி பரப்பப்படும் இந்நிகழ்ச்சி மீண்டும் இந்திய நேரப்படி அன்றிரவு 8.30 முதல் 9.30 வரை மறு ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. www.wintvindia.com என்னும் இணையத்தளத்தில் Live நிகழ்ச்சியின் வாயிலாக நீதியின் குரல் நிகழ்ச்சியினைக் காணலாம்.



0 Responses to 'தமிழினப் படுகொலைக்கு நீதி விசாரணை தேவை' : ‘விண்' ரீவியில் ‘நீதியின் குரல்' நேரடி ஒளிபரப்பு