அவ்வகையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சபாஷ். அதேநேரம் யாழ்ப்பாணத்தில் இன்னும் பல பணிகள் அதிகாரிகள் முன் காத்திருக்கின்றன. அந்தக் கடமையை செய்வதற்கு தயங்க வேண்டிய அவசியமே இல்லை. துணிவும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளினால் பணியாளர்களினால் எந்த விடயத்தையும் கனகச்சிதமாகச் செய்ய முடியும். அதே நேரம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து சம்பளத்தை மட்டுமே கருத்தாகக் கொண்ட எந்த அதிகாரிகளாலும்இ பணியாளர்களாலும் எதனையுமே சாதிக்க முடியாது. மாறாக அவர்களால் பொது மக்களே சிரமங்களை அனுபவிக்கும் பரிதாப நிலை ஏற்படுகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது இரு வகை நிர்வாகம் நடைமுறையாவதை காணலாம். அதாவது யாழ். குடாநாட்டை சொந்த இடமாகக் கொண்ட மக்கள் மற்றும் தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற மக்கள் என்ற இருவகையில் சட்ட அமுலாக்கல் இடம்பெறுகின்றன. தென்பகுதி மக்கள் வாகனங்களை எங்கும் நிறுத்த முடியும். ஒருவழிப் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற முடியும். தெருவில்-முற்ற வெளியில்- வீதியில்-கடையோரங்களில் என எங்கும் தங்கலாம், தூங்கலாம், கூடியிருந்து மது அருந்தி கைதட்டி பாடலாம், ஆடலாம்.
ஆனால் யாழ். குடாநாட்டு மக்கள் அப்படி எதுவுமே செய்ய முடியாது. இரண்டு பேர் கூடி நின்று கதைத்தாலும் பயங்கரவாதத்தடைச் சட்டம் அதனை அனுமதிக்காதாம். எப்படி இருக்கிறது நியாயம்? இந்த யதார்த்தம் முறியடிக்கப்பட வேண்டும். நாடென்றால்-சட்டம் என்றால் அது யாவர்க்கும் பொது. இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாகுபாட்டிற்கு இடமே இல்லை. எனவே உரிய அதிகாரிகள் முதலில் சட்ட நடைமுறைகளை இனமத வேறுபாடின்றி அமுல் படுத்த வேண்டும்.
சட்டநடை முறைகளின் போது அவர் தம் பதவிக்கு ஆபத்து வருமென இம்மியும் எண்ணாமல் துணிவுடன் செயலாற்றுவது கட்டாயம். பதவிக்கு ஆபத்து வந்தாலும் ‘மன்னவனும் நீயோ! வளநாடும் உன்னதோ' என்று துணிவுடன் கேட்க வேண்டும்; தூக்கி எறிய வேண்டும்.
அப்போதுதான், இது இலங்கைத் திருநாடு. இங்கு எல்லோ ருக்கும் சம உரிமை உண்டெனும் உண்மை மனித உள்ளங்களில் குடியேறும். நீதி தழைக்கும்; நியாயம் ஓங்கும்; நிம்மதி கிடைக்கும். எங்கே பார்க்கலாம்.



0 Responses to மன்னவனும் நீயோ! வளநாடும் உன்னதோ! வலம்புரி