இலங்கையில் சுதந்திரக்கட்சி வழிவந்த சந்திரிகா, மகிந்த ராசபக்ச ஆகியோர் ஆட்சியில் ஊடகத்துறையைச் சேர்ந்த 35பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிமலராசன், மட்டக்களப்பில் நடேசன், கொழும்பில் சிவராம் என ஊடகத்துறையைச் சேர்ந்த 30 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.நேரடியான கொலை அச்சுறுத்தல் காரணமாக பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக பணியாற்றிக்கொண்டிருந்த சுதந்திர ஊடக அமைப்பின் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர்களான ஆர்.துரைரத்தினம், ராஜ்குமார், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண்.தவராசா, உட்பட பலர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இக்கொலைகளில் பெரும்பாலானவற்றை இலங்கை அரசாங்க படைகளும் புலனாய்வுப் பிரிவினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களுமே செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த பின்னணியில் இப்படுகொலைகளை புரிந்தவர்கள் மீது இலங்கையின் நீதித்துறை எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் ஒரு எல்லைக்கப்பால் தடுக்கப்பட்டு விசாரணைகள் முடக்கப்பட்ட சம்பவங்களையே நாம் காண்கிறோம்.
நிமலராசன், சிவராம் ஆகியோரின் படுகொலைகளில் சிலர் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதையும் சிவராமின் வழக்கு ஆவணங்களான தடயப்பொருட்கள் திட்டமிட்டு தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டதையும் அவதானிக்கும் எவரும் இந்த பின்னணியில் இலங்கை அரசின் கரங்களே நேரடியாக இருந்ததை மறுக்க முடியாது.
இலங்கையின் நீதித்துறை படுகொலை செய்யப்பட்ட எந்த ஒரு ஊடகவியலாளர்களின் வழக்குகளையும் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவில்லை. அதிகாரங்கள் இந்த கொலைகளின் பின்னணியில் இருந்ததன் விளைவாகவே குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.
எனவே இலங்கை அரசின் நீதித்துறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என்ற உண்மையை சர்வதேச நாடுகளுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுக்க வேண்டியது உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் கடமையாகும்.
உலகில் ஊடகத்துறையை மிகமோசமாக அடக்கி வைத்திருக்கும் சீனா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்பு நாடாக இருக்கும் இலங்கையும் உலகில் ஊடகத்துறையை அடக்கும் நாடுகளில் முன்னணியில் இருந்து வருகிறது.
எனவே ஜனநாயக நாடு என்றும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதாக கூறிக்கொள்ளும் இலங்கை அரசின் இனப்படுகொலைகளையும் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையையும் சர்வதேச நாடுகளினதும், மனித உரிமை அமைப்புக்களினதும் கவனத்திற்கு கொண்டு வரும் ஒரு நாளாக சிவராம் படுகொலை செய்யப்பட்ட தினத்தை தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அனைத்து தமிழ் மக்களும் பயன்படுத்த வேண்டும்.
ஏப்ரல் 29ஆம் திகதியை இலங்கை ஊடகவியலாளர் விழிப்பு தினமாக அறிவிப்பதுடன் அன்றைய தினத்தில் சர்வதேச அமைப்புக்கள் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளுக்கு இந்த படுகொலைகளுக்கு நீதிகோரி தனித்தனியான மனுக்களை அனுப்புவதன் மூலம் மனித உரிமைகளை பேணுவதாகவும் தமிழ் மக்களுக்கு சமஉரிமை வழங்குவதாக பிரசாரம் செய்து கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரசாரத்தை முடியடிக்க முடியும்.
இந்த பணியை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே எமது இனத்தை அழித்த போர் குற்றவாளியான இலங்கை அரசாங்கத்தை சர்வதேசத்தின் முன் குற்றவாளியாக்க முடியும்.
ஏப்ரல் 29ஆம் திகதியை இலங்கை அரசுக்கு எதிரான ஊடக விழிப்பு தினமாக பிரகடனம் செய்து அன்றைய தினம் சர்வதேச அமைப்புக்களுக்கு தமிழ் மக்கள் மனுக்களை அனுப்ப வேண்டும். இது எனது தனிப்பட்ட கோரிக்கை அல்ல. இலங்கையில் இருக்கும் ஊடகத்துறையைச்சேர்ந்தவர்கள் மற்றும் பிரித்தானியாவில் உள்ள நண்பர்களுடன் நடத்திய ஆலோசனைகளின் பின்பே இக்கோரிக்கையை தமிழ் ஊடகங்களிடம் விடுவதென முடிவு செய்தோம்.
எனவே உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் ஊடகவியலாளர்களும் தமிழ் ஊடகங்களும் இந்த பணியை முன்னெடுக்க வேண்டும் என எமது இனத்தின் விடுதலையை நேசித்து அந்த மண்ணில் மடிந்து போன எமது ஊடக நண்பர்களின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன்.
இரா.துரைரத்தினம்
thurair@hotmail.com



0 Responses to சிவராம் படுகொலை நாளை ஊடகர் விழிப்பு நாளாய் கொள்வோம்: இரா.துரைரட்ணம்