இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து நேற்று (16042010) இரவு சென்னை வந்திருக்கிறார். 6 மாத கால விசா அனுமதியுடன் வருகைதந்த அவரை விமானத்திலிருந்தே இறங்கவிடாமல் குடிவரவு (ணூதுதுஷ்ஆrழிமிஷ்லிஐ) துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தடுத்துள்ளனர். அதே விமானத்தில் அவரை மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பியனுப்பியுள்ளனர். சென்னையில் தங்கி மருத்துவம் செய்துகொள்வதற்காக அன்னை பார்வதி அம்மாளும், அவருக்கு உதவியாளராக ஒரு பெண்மணியும் வருகைதந்த நிலையில் மனிதநேயமற்ற முறையில் அவர்களைத் திருப்பியனுப்பியிருப்பது சகித்துக்கொள்ள முடியாத, வேதனைக்குரிய செயலாகும்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த நண்பர்கள் எம்மைத் தொடர்புகொண்டு, அன்னை பார்வதியம்மாள் மருத்துவத்திற்காக சென்னை வரவிருப்பதாகவும், அவரை வரவேற்று மருத்துவம் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனவும் எம்மிடத்திலே கேட்டுக்கொண்டனர். அன்னை பார்வதி அம்மாளுக்கு உதவியாக இருந்த உறவினர்களும் அப்போது எம்மோடு பேசினர்.
மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகமும் அன்னை பார்வதி அம்மாளுக்கு விசா அனுமதியும் வழங்கியிருக்கிற நிலையில் அவர் இங்கே வருவதற்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்றே நம்பியிருந்தோம். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் இவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் நடந்துகொண்டது ஏனென்று விளங்கவில்லை.
வயதுமுதிர்ந்த நிலையிலும், பக்கவாத நோய்க்கு ஆட்பட்டிருக்கிற நிலையிலும், கணவரை இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையிலும், அந்தத் தாயின் மீது கருணை காட்டாமல், அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்புவதற்கு எப்படி மனம் வந்தது? அவரை சென்னையில் இறங்கவிடாமல் தடுக்க வேண்டும் என்கிற இந்த முடிவுக்கு இந்திய அரசு காரணமா? அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கா? அல்லது இது தமிழக அரசின் நடவடிக்கையா? இவைதான் இன்றைக்கு ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுந்துள்ள உணர்ச்சிமயமான கேள்விகளாகும்.
மருத்துவம் பெறுவதற்காக உரிய முறைப்படி வருகைதந்த அன்னை பார்வதி அம்மாளை சென்னையில் தங்க வைப்பது தொடர்பான பிரச்சனையை சட்டப்படி அணுகியிருக்க வேண்டும். அல்லது மனிதநேய அடிப்படையில் அணுகியிருக்க வேண்டும். மாறாக, அரசியலடிப்படையிலேயே இப்பிரச்சனையை அணுகியிருப்பதாகத் தெரியவருகிறது.
அன்னை பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்குவதால் இந்திய இறையாண்மைக்கோ அல்லது பொது அமைதிக்கோ பங்கம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
கடந்த சில மாதங்களாக மலேசியாவில் அவர் தங்கியிருந்த நிலையில் அங்கே எதுவும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையோ அல்லது வேறு பாதிப்புகளோ நிகழ்ந்துவிடவில்லை. அதைப் போல இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், எந்த அரசியல் சிக்கலும் ஏற்படப் போவதில்லை. ஆனால், வேறு எந்த காரணத்திற்காக அவர் திருப்பியனுப்பப்பட்டார்?
ஏற்கனவே பாலசிங்கம் அவர்கள் மருத்துவம் எடுத்துக்கொள்வதற்காக தமிழகம் வர விரும்பியபோதும் இந்திய அரசு அவரை வரவிடாமல் தடுத்தது. அவருக்கு விசா அனுமதி வழங்கவே அப்போது இந்திய அரசு மறுத்தது. ஆனால் அன்னை பார்வதி அம்மாள் அவர்களுக்கு 6 மாதம் தங்குவதற்கு விசா அனுமதி வழங்கிவிட்டு பிறகு இப்படி ஒரு முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்தது ஏன்?
இந்த நடவடிக்கைக்கு எது காரணமாயிருந்தாலும், யார் காரணமாயிருந்தாலும் இதனை நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ இயலாது. மாந்தநேயமற்ற இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறான போக்குகள் தொடருமேயானால் தமிழ்ச் சமூகத்தினிடையே கனன்று கொண்டிருக்கிற ஆவேச நெருப்பு எரிமலையாய் வெடிக்கும் போக்கை தடுக்க இயலாது.
அன்னை பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு அழைத்து வரவும் அவர் மருத்துவம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.
தொல். திருமாவளவன்.



0 Responses to அன்னை பார்வதி அம்மாளை அழைத்தவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்