ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பான நளினியின் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நளினி, நன்னடத்தை அடிப்படையில் தம்மை தண்டனை காலம் முடிவடைவதற்குள் முன்பே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜன் ஆஜராகி சிறைத்துறை ஆலோசனைக்குழு எட்டுக் காரணங்களைச் சுட்டிக்காட்டி நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று அறிவித்தனர்.
இதுதொடர்பாக அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதிகள், நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறும் உத்தரவிட்டனர்.



0 Responses to நளினிக்கு விடுதலை வழங்க முடியாது: சென்னை உயர்நீதி மன்றில் இன்று அறிவிப்பு