அவுஸ்திரேலியா விக்டோரிய மானில முதன்மை தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல் மெல்பேர்ன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தை தளமாக கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடக, அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் முக்கிய அதிதிகளாக தமிழர் தாயகத்துக்கு சென்று முதன்நிலை ஆய்வை நடத்திய அவுஸ்திரேலியா கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்குகொண்டு தமது கருத்துரைகளை வழங்கினர்.
இந்நிகழ்வு அவுஸ்திரேலியா விக்ரோரிய மாநில தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூத்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளில் ஒருவரான வைத்திய கலாநிதி ராசன் ராசையா தலைமையில் ஆரம்பமானது.
அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி திரு.அன்ரனி கிரேசியன் வழங்கிய ஆரம்ப உரையில், பிரிக்கப்படாத இலங்கைத்தீவில் இணைந்துவாழ விரும்பிய தமிழர்களின் அபிலாசைகள் எவ்வாறு நசுக்கப்பட்டன என்றும், அதன் தொடர்ச்சியாகவே வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 இல் அனைத்து தமிழ் கட்சிகளாலும் முன்மொழியப்பட்டு, 1977 இல் அனைத்து தமிழ்மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய டீக்கின் பல்கலைக்கழக பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பரி தனது உரையில், சிறீலங்காவிலிருந்து வரும் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க மறுப்பதற்கு முடிவெடுத்துள்ள அவுஸ்திரேலியா அரசின் தீர்மானத்தினை விமர்சித்ததுடன் ஆரம்பமான அவரது உரை, ஈழத்தமிழரது பிரச்சினைகள் தொடர்பாக ஆழமான ஆராய்வுடன் தொடர்ந்தது. அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்கள் வழங்கிவருகின்ற பல்வேறுபட்ட பங்களிப்புக்களை அவர் விளக்கினார். இன்னமும் போர் முடிவடையாத சிறிலங்காவிலிருந்து வரும் ஈழத்தமிழ் அகதிகளை ஏற்க மறுக்கும் அவுஸ்திரேலியா அரசின் முடிவு குறித்து தனது கடும் விசனத்தை அவர் தெரிவித்தார். விருப்பமில்லாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறக்கோரியுள்ள சிறிலங்கா அரச அதிபரின் கருத்து குறித்தும், தமிழர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள் என்ற கருத்துருவாக்கத்துடன் பேசியுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாமவின் கருத்து குறித்தும் மேற்கோள்காட்டி பேசிய அவர், நடைபெற்று முடிந்துள்ள சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான மகிந்த கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றால் ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டிய அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அவர் முன்மொழிந்தார். அவருக்கு பின்னர் பேசிய மனித உரிமை ஆர்வலரும் மொனாஷ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி டேவிட் வீய்த், தான் தமிழர் தாயகத்துக்கு 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்ட பயணம் குறித்தும் அங்கு விடுதலைப்புலிகள் நடாத்தி வந்த நேர்த்தியான நிர்வாகமுறை குறித்தும் பேசினார். அவர் அங்கு சென்றிருந்த காலப்பகுதியில் தமிழ் தாயகத்தில் விடுதலைப்புலிகள் நிர்மாணித்திருந்த தமது அரசு முறை குறித்த விடயங்களை விரிவாக எடுத்துக்கூறினார். தமிழ் தேசியத்தையும் தமிழர்களின் பெருமையையும் தமிழ் மக்கள் அனுபவிக்கக்கூடிய வகையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த ஆட்சிமுறை குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
இதன்பின்னர், தென்துருவ தமிழ் அமைப்புக்களின் சம்மேளனம் சார்பில் திரு. சிவகுமார் கருத்து தெரிவிக்கையில், 1983 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை நினைவூட்டி இன்றும் அதேபோன்ற பாதுகாப்பற்ற நிலையே தமிழ் இனத்திற்கு காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அதனை தொடர்ந்து அவுஸ்திரேலியா தமிழ் கருத்துக்கணிப்பு குழு சார்பாக கருத்துரை வழங்கிய கலாநிதி ஜோய் மகேஸ்வரன், முன்னர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தமிழ் மக்களின் உரிமைகளை உதாசீனம் செய்தது போலவே தற்போதைய மகிந்த ராஜபக்சவும் தான் நினைக்கின்ற தீர்வையே தமிழ் மக்கள் மீது திணிக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டி, தனது கருத்துக்களை முன்வைத்தார்.
விக்ரோரிய மாநில தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கருத்துரை வழங்கிய திரு.பரமநாதன், வெவ்வேறான கொள்கை அடிப்படையில் செயற்படாமல் அனைத்து தமிழ் மக்களின் ஆணையை பெற்று அதன் ஊடாக ஜனநாயக முறைமையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியலை நெறிப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மக்களால் வழங்கப்படும் ஆணையே ஏற்று அதனை முழுமையாக ஏற்றுக்கொள்கின்ற தமிழ் பிரதிநிதிகளால் நாடு தழுவிய மக்கள் அமைப்புகள், அனைத்து தமிழ் மக்களின் பங்களிப்புடன் கட்டமைக்கப்படும் என்றும், அதன் ஊடாக தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை உறுதியாக முன்வைக்கப்படமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஆரோக்கியமாகவும், ஆக்கபூர்வமாகவும், சபையோரின் பங்களிப்போடு அமைந்த கலந்துரையாடல் மாலை 5.15 மணியளவில் நிறைவுபெற்றது.



0 Responses to வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு: மெல்பேர்னில் நடைபெற்ற கருத்தரங்கு!