சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது போலுள்ளது. கடந்த வருடம் புலிகளுக்கெதிரான போரில் வெற்றி, தொடர்ந்து இடம்பெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் சனவரியில் வெற்றி தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றி.தற்போது அவரது எதிர்க் கட்சிகள் பிளவடைந்து, அவரது அரசியல் எதிராளியும் இராணுவ நீதிமன்றத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அவரது கட்சியும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் அவரின் நிலையை அசைக்க முடியாது.
225 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 140 ஆசனங்கள் ஏற்கனவே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ராஜபக்ச அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு 10 ஆசனங்களையே அவர் வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளவேண்டியிருக்கும்.
வியாழனன்று இடம்பெற்ற தேர்தலில் 117 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்னமும் அறிவிக்கப்படாதுள்ள 45 ஆசனங்களில் அரைவாசியேனும் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை 46 ஆகக் குறைவடைந்துள்ளது.
ஏற்கனவே ஆட்சியில் தனக்கிருந்த பிடியை அரச தலைவர் ராஜபக்ச மேலும் இறுக்கிக் கொண்டாலும், நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் விசேடமாக தமிழ் சமூகத்தை ஒன்றுபடுத்துவதில் இன்னமும் பாரதூரமான சவால்களை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி பல பத்து வருடங்களாகப் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தெளிவான மக்கள் ஆணையை வழங்கும்படி மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆசனங்களைப் பொறுத்தவரையில், அவருக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த வாக்களிப்பு 55 வீதமக இருப்பது, நாடு தனக்குப் பின்னால் நிற்கிறது என்ற அதிபரின் கூற்று தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
‘இந்த முறைமையில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளமையையே இது காட்டுகிறது’, என்றார் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமாகிய விக்ரர் ஐவன்.
‘நம்பிக்கையை நிலைநாட்டி, முக்கியமான அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டிய மிகப் பெரும் சவால் அரச தலைவருக்கு உண்டு’, என்கிறார் ஐவன்.
முன்னைய தேர்தல்களின்போது, விடுதலைப்புலிகள் வழமையாக தேர்தல் நடவடிக்கைகளைக் குழப்புவதால் அவர்களின் தாக்குதல் தொடர்பான அச்சத்தை மக்கள் எதிர்கொண்டாலும் அண்ணளவாக 75 வீத வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது.
வாக்களிப்பு வீதம் இந்தத் தடவை குறைவாக இருந்தமையைப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க் கட்சிகள் அது மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியின் வெளிப்பாடே என்று தெரிவித்தன.
‘முதல் தடவையாக, மக்களின் ஆணையைப் பெறாத நாடாளுமன்றம் எமக்குக் கிடைத்திருக்கிறது’, என ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ராஜபக்சவின் தேசியக் கொள்கை தொடர்பான ஆழமான சந்தேகத்தைக் கொண்டிருக்கும் தமிழ் சிறுபான்மையினரிடமிருந்து தெளிவான பிளவைக் காட்டுவதற்கான சமிக்ஞை கிடைத்துள்ளது.
விடுதலைப்புலிகளுடனான போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட யாழப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இடங்களில் அரச தலைவர் தனது பிரசாரத்தின்போது அப்பிராந்தியங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மில்லியன் ரூபா செலவழிக்க உள்ளதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் அவரது கட்சி எந்தவொரு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலும் வெற்றி பெறாததுடன் தமிழ் மக்களுக்கு சுயாட்சி கோரிக்கையை முன்வைத்த மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு 12 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
‘பெரும்பான்மை சிங்கள அரசாங்கத்தின்மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டியுள்ளன’, என தேசிய சனநாயக சபையின் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணாண்டோ தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் பிளவுகளைத் தெளிவாகக் காட்டுகிறது
பலமான நாடாளுமன்றத்துடன் தனது இரண்டாவது அரச தலைவர் பதவியினையும் பெற்றுள்ள அதிபர் ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலிருந்து தப்புவதற்கு எந்தவொரு காரணத்தையும் கூற முடியாது, என்கிறார் பெர்ணாண்டோ.
‘அவர் செயற்படக்கூடிய ஒரு சூழ்நிலை தோன்றியுள்ளது. ஆனால் அவர் வாக்குறுதி வழங்கியதுபோல அமைதியையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்’, என பெர்ணாண்டோ தெரிவிக்கிறார்.
தமிழ்மக்கள் உண்மையான அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தை கோருவதுடன் தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் தாம் பாரபட்சமாக நடாத்தப்படுவதையும் இல்லாது செய்யவேண்டும் என்று கோருகின்றனர்.
‘இனப்பிரச்சினையின் திசையை அதிபர் ராஜபக்சவின் அடுத்த நகர்வு தீர்மானிக்கும்’, என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நிர்மல் தேவசிறி கூறியதுடன் அவ்வாறு தமிழ் மக்களின் இனப்பிரச்சியைத் தீர்ப்பதற்குத் தவறுவது மீண்டும் இன முரண்பாடு தோன்றுவதற்கே வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கிறார்.
சிறுபான்மைக் கட்சிகளையும் தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டுவருமாறு அதிபருக்கு வோசிங்ரன் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், ராஜபக்சவின் நடவடிக்கைகள் சிறிலங்காவுக்கு வெளியேயும் உன்னிப்பாக அவானிக்கப்படுகிறது.
‘அதிபர் ராஜபக்சவின் அரசாங்கம் தமிழ் மக்களையும் ஒன்றிணைப்பது அவசியமானது என நான் கருதுகிறேன்’, என தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் அராஜாங்க செயலர் றொபேட் பிளேக் தெரிவித்துள்ளார்.
‘நம்பிக்கையுடனும் வாய்ப்புக்களுடனும் தாம் வாழ முடியும் என அவர்கள் உணர்ந்துகொள்வது அவசியமாகும்’, என்கிறார் பிளேக்.



0 Responses to மீண்டும் ராஜபக்ச வென்றுவிட்டார்; ஆனால் நாடு பிளவுபட்டுள்ளது