Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுத வழிப் போராட்டத்தினை இராணுவ ரீதியாக ஸ்ரீலங்கா அரசு அழித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும் தமிழ் மக்கள் தமது தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரம் கோரும் போராட்டத்தை கைவிடத் தயாராக இல்லை.

அந்த மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் தமிழர்களின் - தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகளை உறுதியாக முன்னெடுத்துச் செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளது. அரசியல் ரீதியாக தமிழ் மக்களால் வலியுறுத்தப்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கோரிக்கைகளை இல்லாது அழிப்பதற்கு இலங்கை இந்திய அரசுகள் கூட்டுச் சதிகளை மேற்கொண்டுவருகின்றன.

கூட்டமைப்பை உடைப்பதற்கு காரணமாக இருந்த தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறுவது போன்று கோட்டாபயராசபக்சேயிடமோ அல்லது வேறு எந்த ஆதிக்க சக்திகளிடமோ நான் எந்தச் சூழ் நிலையிலும் மண்டியிடவில்லை. மண்டியிடப் போவதும் இல்லை. இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளை என்று தமிழ் மக்களால் நம்பப்படும் இவர் இந்தியாவின் திட்டங்களை நிறைவேற்ற தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கைபெற்ற என் மீது திட்டமிட்டு சேறு பூசுவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை கூறிவருகின்றார்.

இந்தக் கட்டுக்தைகளை மக்கள் நம்ப வேண்டாம். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் சுரேஸ் உள்ளிட்ட கூட்டமைப்புத் தலைவர்களின் துரோகத்தனங்களை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியும், நாங்கள் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அந்த தலைமையின் அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாக தமிழ் மக்களின் தயாகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் ஆகிய கொள்கைகளுக்கான சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்காக நேர்மையாகவும் அற்பணிப்புடனும் செயற்பட்டோம்.

தமிழ் மக்களுக்கு எதிராக மகிந்த அரசு மாவிலாற்றில் யுத்தத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்து அதற்கு எதிராக குரல் கொடுத்து வந்ததுடன் கொடிய போரை நிறுத்தி பொது மக்களை பாதுகாக்கவும் நேர்மையாகவும் அற்பணிப்புடனும் செயற்பட்டோம்.ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவை தாண்டி ஐரோப்பாவை தலையிட வைக்கும் முயற்சியை இந்தியா விரும்பாது என்பதற்காக கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் கொழும்பிலும் சென்னையிலும் தங்கியிருந்த பொழுது நாம் ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களை அணிதிரட்டி யுத்தத்தை நிறுத்தவும் பொது மக்களை பாதுகாக்கவும் கோரி போராட்டங்களை நடாத்தினோம்.

இலங்கை இந்திய அரசுகள் கூட்டிணைந்து வன்னியில் தமிழ் மக்களை படுகொலை செய்த பொழுது கூட்டமைப்புத் தலைவர்கள் மிகவும் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய வேளையில் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டாக மேற்கொண்ட படுகொலைகளுக்கு எதிராக நாம் உறுதியாக குரல் கொடுத்து வந்தோம். இந்திய இலங்கை அரசுகள் இணைந்து புலிகளின் ஆயுத பலத்தை அழிப்பதற்குத் துணை நின்ற கூட்டமைப்புத் தலைமைகள் மே 18 ற்குப் பின்னர் கொள்கையை கைவிட்டு தயாரித்த தீர்வுத்திட்டத்தை இந்தத் தேர்தலில் முன்வைத்து மக்களாணை பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளோம்.

நாம் கடந்த காலத்தில் கொள்கையில் உறுதியாக செயற்பட்டது போலவே எதிர்காலத்திலும் கொள்கையில் உறுதியாக செயற்படுவோம். இளைஞர்களதும், பொது மக்களதும் உயிர்த் தியாகங்கள் வீண்போக இடமளிக்க மாட்டோம்.இந்திய அரசின் முகவர்(கூட்டமைப்பு தலைமை)களாலும், ராஐபக்சே அரசின் அடிவருடிகளாலும் தமிழ் மக்களது உரிமைக்காக நேர்மையாக குரல் கொடுக்க முடியாது.ஆனால் நாம் எந்த சக்திகளுக்கும் அடிபணியாமல் மாறிவரும் சர்வதேச சூழலை சரியாகக் கையாண்டு எமது உரிமைப் போராட்டத்திற்கான அங்கீகாரத்தினை பெற நாம் எம் உயிர் உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்.

கைதிகளாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளதும், அப்பாவிகளதும் விடுதலைக்காக நடவடிக்கை எடுப்போம். முன்னாள் போராளிகளது குடும்பங்களினதும் போரால் அவயவங்களை இழந்தவர்களது குடும்பங்களினதும், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் கௌரவமான எதிர்கால வாழ்வுக்காக அற்பணிப்புடன் உழைப்போம்.

எனவே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை வழங்கி தேசியத்தை பாதுகாக்க முன்வந்துள்ள எமது கரங்களை பலப்படுத்தும்படி வேண்டுகின்றேன்.

செ.கஜேந்திரன்

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

0 Responses to தமிழ்த் தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரம் பெறப்படும் வரை உரிமைப் போராட்டம் ஓயாது

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com