Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவுப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் சொல்லொணாத் துயரத்தின் மத்தியில் இருப்பதாகவும் 10 தகரங்களும் 6 தடிகளுமே அவர்களுக்கு குடியிருப்புகளை நிர்மாணிக்கவென வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆழ்ந்த கவலையையும் கடும் விசனத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

வன்னிக்கான பயணம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மை அறியும் குழுவாக நாம் வந்துள்ளோம். இங்கு மக்கள் அனுபவிக்கும் அவலங்களை,துயரங்களை நாம் உரியவர்களிடம் வலியுறுத்தி அவலப்படும் மக்களின் வாழ்வில் ஒரு விமோசனத்தை ஏற்படுத்துவதற்கு உதவத் தீர்மானித்து நடவடிக்கை எடுப்போம்.

மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்சொல்லொணாத் துயரத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். பத்துத் தகரங்கள், ஆறு தடிகள் அவர்களுக்கு குடியிருப்புகளை கட்டக் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சீருடைகள் இல்லை. பாடநூல்கள் வழங்கப்படவில்லை. சப்பாத்துகள் கொடுக்கப்படவில்லை. நடந்தே ஆறு மைல்கள் பாடசாலைக்குச் சென்று கற்க வேண்டியுள்ளது. மருந்துகள் கிடையாது. நோய் வந்தால் சிகிச்சை பெற முடியாத நிலையில் மக்கள் வாழ்கின்றார்கள்.

..எம்., இன்னும் ஒரு நிறுவனமும் தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகும். நிலைமையை நேரில் ஆராய்ந்து அறியும் குழுவாக நாம் வன்னிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

நாம் கொழும்பு திரும்பியதுடன் நாம் நேரில் கண்டவற்றை, பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்தவற்றை அறிக்கையாகத் தயாரித்து பேச வேண்டியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவோம். அவலப்படும் மக்களின் வாழ்வில் விமோசனம் ஏற்பட உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

அங்கு சென்றிருந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

மீள்குடியேற்றப்பட்டவர்களை நாம் சந்தித்தபோது, தமது வாழ்வாதாரத்துக்கான சூழ்நிலையில்லாத நிலையில் தமக்கு வழங்கப்பட்டு வரும் உலர் உணவு நிவாரணமும் நிறுத்தப்படவுள்ளதாக எம்மிடம் கவலை தெரிவித்தனர்.

அவர்களுக்கு விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் இல்லாதுள்ளது. விவசாயத்துக்கான உபகரணங்கள் வழங்கப்படாததுடன் குளங்கள் புனரமைக்கப்படாமல் உள்ளன. பாதுகாப்புக் கெடுபிடியும் இருக்கின்ற நிலையில் எவ்வாறு விவசாயத்தை மேற்கொள்ள முடியுமென அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமக்கு வழங்கப்படும் நிவாரணத்தை விவசாயம் செய்யும் வரையாவது வழங்கப்படவேண்டுமென அவர்கள் கோரினர்.

மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கு 12 தகரமும் தடியும் வழங்கப்படுகின்றது. சிலருக்கு தகரங்களும் தடிகளும் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சேதமடைந்த வீட்டின் சுவரில் தகரத்தை கொண்டு பத்தியிறக்கி அவர்கள் வாழ்கின்றனர்.

அதற்குள் தான் சமையல், படுக்கை, வாழ்க்கை எல்லாம். மீள் குடியேற்றமென அந்த மக்கள் சிறு கூடாரத்துக்குள் வாழ வேண்டிய சூழ் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தடுப்பு முகாமிலுள்ள தமது பிள்ளைகளை, உறவுகளை விடுதலை செய்து தருமாறு கோரினர். மீள் குடியேற்றப்பட்டவர்களின் சில குடும்பங்களில் தாயும் தந்தையும் தமது பிள்ளைகளில் ஒன்றை பறிகொடுத்து அதேநேரம் மற்றவர் தடுப்புக்காவலில் உள்ளதாக தெரிவித்தனர்.

தடுப்புக்காவலில் உள்ள தமது உறவுகளை விடுதலை செய்து தருமாறு எம்மிடம் கோரினர்.

மீளக் குடியேற்றப்பட்ட சில இடங்களில் நீர்ப்பிரச்சினையுள்ளது. கிணறுகள் சுத்தப்படுத்தப்பட வேண்டிய நிலையிலும் தூர்ந்து போயுமுள்ளன. இந்நிலையில் தமக்கு உள்ள குடி நீர்ப்பிரச்சினையை தீர்க்குமாறு கோரினர். நாம் வற்றாப்பளை பகுதியைப் பார்வையிட்டபின் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்குச் சென்றோம்.

அரச அதிபர் கொழும்பு சென்றாலும் பிரதேச செயலாளர்கள் மீள் குடியேற்ற பணிக்கு சென்றதாலும் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினோம்.

கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் செம்மலை கிராமத்தை பார்வையிட சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டு பார்வையிட சென்றவர்கள் தமது வீடுகளை பார்வையிட்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் மீள் குடியேற்றமென அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டபோது தமது வீடுகளைக் காணவில்லையென அவர்கள் தெரிவித்தனர். தமது வீட்டிலுள்ள கதவு, ஜன்னல் மற்றும் கூரை, ஓடு என்பன இல்லாதுள்ளது. இருக்கின்ற வீட்டை இல்லாமல் செய்துவிட்டு மீள் குடியேற்றமென தகரம் வழங்குகின்றனர். இத்தகைய செயற்பாட்டை தடுக்குமாறு மக்கள் கோரினர்.

இந்நிலையில் ஏனைய கிராமங்களில் உள்ள முழுமையான வீடுகளை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதவுள்ளோம். அதேநேரம் மக்களின் ஏனைய பிரச்சினை குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களுக்கான பயணத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடங்கியுள்ளனர். இச் சம்பவங்களின் உடனடித் தகவல்கள் புலர்வு இணையத்தில் தொடர்ந்தும் வெளிவரும்.

0 Responses to மிக மோசமான நிலையில் வன்னி மக்கள் வாழ்கின்றனர்; கூட்டமைப்பினர் கவலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com